Sunday, November 11, 2012

என் பந்தம்

 


 உன்னோடான என் பந்தம்
தொலை வானும் கடலும்
உன் நினைவோடான என் பந்தம்
நிலமும் நிழலும் ...
விழித்திருக்கும் போதெல்லாம்
விரகத்தின் வழியில்
விரைவாக செல்லும்
 நினைவுக் குதிரை
ஏழ்கடல் தாண்டியும்
எம்பி குதித்து உரசி கொள்கிறது
கடந்து போன நம் காதல்
களிப்புகளின் சிதறல்களில் ...

எட்டி நடந்து
உன்னோடு சேர துடிக்கும்
பாதங்களுக்கு
நீ தடயமாக விட்டு செல்வது
என் மீதான
உதாசீனங்களும்
உதிரம் உறைய செய்யும்
உன் வெறுப்பு பார்வைகளையும்தான் ....

சேர்ந்து இருக்கும் பொழுதுகளில் எல்லாம்
உன் சீண்டல்களால்
சில்மிசங்களால்
வெக்கி சிவந்து
 துடிக்க தவறவில்லை என் இதயம் ..
இன்றோ விழியன் வரியில்
நீ எழுதி சென்ற
பிரியாவிடை கிறுக்கல்களில் ..
பிளந்து சிதறும் என் இதயம்
செந்நீர் துளிகளை
கண்ணீர் துளிகளாய் பிரசவிகின்றது ..

பிரசவங்களின் முடிவில்
மீந்து இருக்கும் களிப்பு இங்கில்லை
சவங்களின் சந்நிதியில்
சடுதியாய் குடிகொள்ளும்
சலனங்கள்தான் மீதம்
தவிக்கும் என் சலனங்களுக்கு
சயனமாய் வந்துவிடு

சொல்லிவிடு

 

 விரக்தியின் விளிம்புகள்
விகாரமாய் விளையாடும்
மனகூண்டின் மையபகுதியில்
சூனியம் குடி கொண்டு
சுழல் காற்றாய் அடிக்கடி வீசும்

ஆழ்ந்துறங்கும் வேளையிலும்
அலாரங்கலாய் ஒலிக்கும்
உன் நினைவு கூவல்களுக்கு மத்தியில்
சேவல்களின்     அவசியம்
செயல் இழந்து தூங்கும்

உலர்ந்து போன உதடுகளும்
உன் நினைவுகளால்
உப்பி துடிக்கும் இதயமும்
சப்பி துப்பிய உன் துரோகங்களுக்கு
சடுதியாய் முக கண்ணடியாகின்றது..

தொடர்ந்து விட துடிக்கும்  உறவுக்கு
முற்றுப் புள்ளிகளை
நீ வைக்க முயன்றாலும் ..
என் முழுமைகளை திரட்டி
என் கையில் இருக்கும்
இந்த நாய் குட்டியாய்
உன்னை காண்கிறேன் ...

என் தழுவல்கள் இனி இதற்கு சொந்தம்
என் உணர்வுகள் இனி இதற்க்கு பந்தம் ..
என் தனிமைகள் இனி நமக்குள் இன்பம் ..
எங்கோ இருக்கும் உன்னை
நான் என் அருகில் பார்கிறேன் ..
இங்கே இருக்கும் எனை நீ
அங்கு எதுவாய் பார்ப்பாய் ?
உன் மனைவியில் ..?
உன் மகிழ்வில் பிறந்த குழந்தையில் ?
எதுவாய் பார்ப்பாய்
சொல்லிவிட்டு செல் ....
என் இதய நரம்பின் ஸ்ருதிகள்
இடம் மாறுவதற்கு முன் ...

சளைத்தவள் அல்ல ....

நீளமாய் ஒரு நீல வானம் 
அதில் பஞ்சன்ன குவியலாய்
அங்கொன்றும் இங்கொன்றும்
அசைந்தோடும் வெண் மேகம் யாரை தேடுதோ ..
வான் நீலமா அன்றில்
வான் வர்ணம் தன்னுள் கொண்ட
கடல் நீலமா எது நீலம் என
எழுந்தாடும் விடையற்ற வினாக் கோலம் ...
ஒன்றன் பின் ஒன்றாய்
வெண்ணுரை தள்ள
காதலியை பின் தொடரும் காதலனாய்
வேற்றுமை தெரியாத வெள்ளலைகள்
வேகமாய் வந்து வெறும் தரையை தொடும் போதெல்லாம்
முடிவில்லாத அதன் கரை காதலும்
முயற்சி தேயாத அதன் முயல்வுகளும்
முழுவதாய் நெஞ்சில் படியுமா ...?

கடல் கரை நுழைந்தாடும்
கன்னியர் தம்
மனம் நுழைந்தாட விளைந்து
கரை தாண்ட முயலும் காளை
கரை சேர்வானா ...?
எதிர் விளைவாய்
ஏக்கத்தை பரிசளிக்கும்
உடலோடு ஓட்டும் நனைந்த ஆடையும்
உப்பு காற்று உரச உல்லாசமாய்
கட்டவிழ்ந்து ஆடும்
கரு நிற கூந்தல் மங்கையரும்
கல கலத்து சிரிக்கும் சத்தம்
கடலின் நிசப்தத்தை களங்கம் செய்வதால் தானோ
கரை மீது அலைகள் காட்டு தனமாய் மோத விளைகின்றன ..?

கடலில் இறங்கி கயல் பிடிக்கும் காளைக்கு
கன்னியர் கயல் விழிக்குள்
தூண்டில் இலாமலே  துவண்டு சிக்கியது
துன்பத்தில் முடிமா .. இன்பத்தில் தொடங்குமா ?

நாலனாக்கு முறுக்கு விக்கும்
நடை தளர்ந்த சிறுவன் பசிக்கு
நாலு முறுக்கு வாங்கி தர
நல் இதயம் ஏதும் இரங்குமா...?

முகம் திருப்பும் காதலிக்கு
முழுதாய் அவளை நம்பவைக்க
முனைந்து  செய்த சத்தியங்கள்
காற்றோடு கலக்குமா ..?

எண்ணிலடங்கா எண்ண வினாக்கள்
எழுந்து நிழலாட ...
நீர் குடையும் என் ஆசை
வெறும் விழி குடைந்தாட
விலகி செல்கிறது ..
யார் சொனார் ...?
கடலும் அலையும் கலங்கும் மனதுக்கு
அமைதியை தருவதாய் ....?
விடை இல்லாத கேள்விகளை
விகுதியாய் மட்டுமே விட்டு செல்கிறது
இந்த கடலும் அலையும் அதன் களிப்புகளும் ..
நாளையும் வருவேன்
நாளை மறுநாளும் வருவேன்
நான் இருக்கும் வரை வருவேன்
அலையே உனக்கு நான் சற்றும் சளைத்தவள் அல்ல ....

Tuesday, September 25, 2012

விழி மொழி

 
தென்றலின் சிலு சிலுப்பில்
மழைத்துளிகள்
ஈரத்தை உலர்திகொண்டிருந்த
அழகிய மழைகாலம்...
சிறு சிறு துளிகளாய்
அங்கொன்றும் இங்கொன்றுமென
தெறித்து விழும் துளிகளை உதறி
மரங்கள் தம் உலர்வை உறுதி படுத்தி கொண்டிருந்தது ....

வட்டமாய் ஒரு சிறு நீர் தேக்கம்
அதில் வரி வடிவமாய்
நீர் துளிகளின் அலை வடிவம்
எட்டி நின்று பார்த்தவள் மனதில்
எழுந்து நின்றாடிய சலனங்கள் ..

ஏழடி உயரம்தான் அதில்
எஹ்கு நானின் விறைப்புதான்
சற்றே திரும்பினாலும்
சடுதியாய் சாய துடிக்கும்
சாலை ஓரத்து ரோஜாக்கள்
அவன் பார்வைக்காய் தவம் இருக்கும்
எட்டி நடக்கும் அவன் பாதசுவடில்
எழுதப்படாத பல காதல் கடிதங்கள்
விழுந்து சிதறும் ...
எதற்கும் அசராத அவள் இதயம்
இவன் எடுப்பாய் சிரிக்கும்
புன்சிரிப்பில் தடுக்கி சாய்கிறது...

மனதுள் பல கற்பனை..
இதிகாச நாயகன்
யுகம் தாண்டி பிறப்பு எடுத்தானோ ?
இளமாறன் இவன் இளமார்பை
ஏதும் இளம் பூவை சூடி இருப்பாளோ ?
இவன் பெயர் யாதாய் இருக்கும் ..?
மலர் கண்ணனா ? மன்மதனா ..?
ஸ்ரீராமனா ..? என் சிந்தை கவர்ந்த சீராளனா ?
சிந்தை மயங்க நெட்டி தள்ளும் பொழுதை
நிந்தை செய்தவாறே மன்னன் அவன் வருகைக்காய்
மான் விழியாள் மனம் துவண்டாள் ....

நெட்டி தள்ளிய பொழுதை
குட்டி பொழுதாக்கி ..
அவள் மனக்கதவை தட்டி திறந்த
கெட்டிக்காரன் எட்டி நடை போட்டு வந்து சேர்ந்தான்...
அலர் தாமரை கண்கள் அவளிடம் அவசரமாய் பாய்ந்து மீள
ஆயிரம் கதை சொன்னான்
அன்றலர்ந்த செந்தாமரையாள் அகம் நோக்கி
அவள் புறக்கண்ணால் தேக்கம் கண்டாள்...

மீன் விழியின் தவிப்பு
அவன் தணல் விழிகளுக்கு தப்பவில்லை
அனல் என துடிக்கும் அதரங்களின் அசைவில்
கனல் என அவன் நெஞ்சம் கரைந்து கொண்டு இருந்தது
கருத்த விழியில் குன்றி மணி போல்
குறு குறுத்து கொஞ்சி விளையாடும்
மங்கை அவள் விழி
மாறன் இவன் விழிக்கு விருந்தாகி பலநாட்கள்...

மலர் விழியும் மீன்விளியும்
மனதோடு கலந்து
மருண்டு உறவாடி மகிழ்ந்து விளையாடி
மயக்கும் மொழிகள் பேசி
மது உண்ட வண்டுகளாகி
கூடி பிரியும் குறுகிய அந்த
வண்டி தரிப்பிடத்தில்
எதிரும் புதிருமான
எழில் விழி காதல்
என்றும் வாழ்கிறது
எதிர்கால நம்பிக்கைகளை
பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு ..

Friday, September 21, 2012

ப்ரிய சிநேகிதா .....

 
 
ப்ரிய சிநேகிதா !

அன்று உன்மதி முகத்தில்
வீழ்ந்து தெறிக்கும் புன்னகைகளை
களவாய்ப் பொறுக்கி பதித்து கொண்டேன் - என்
இதழோரங்களில்

எத்தனையோ எதிர்பார்ப்பு - நம்
இம்ஷைகளில்
என்னுள் வீழ்ந்து தவிக்கும்
தனிமையிலுன் விம்பம் மட்டுமே
தரித்துச் செல்கின்றதென்
மனவெளியில்

என் வீட்டு ஜன்னலோரமாய்
அடிக்கடி வீழ்ந்து கிடக்கும்
நம் பால்ய பருவத்து அசைவுகளில்
சாம்ராஜிய காதலுணர்வுகளை
சடுதியாய் சேகரித்துக் கொண்டேன்
நாளைய நம் வரலாற்றிற்காக


என் மனப் பிரபஞ்ச வெளியின்
ஒற்றை நிலா உன்னில்
சூழும் அந்த கார்மேகக் கசிவால்
அழுது வடிகின்றது என் ஆத்மாவும்


தென்றலின் மோதுகையில் கூட
நொந்து துடிக்குமென் மேனிதாங்குமோ
பிரிவின்அகோரச் சீண்டலை
அடிக்கடி உள்வாங்கும் போது..
கண்ணீர்த்துளிகளாய் இறங்கி
தொட்டுப் பார்க்குதேயென்
கன்னத்தையும் சேர்த்தே..

நம் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற
அந்த விதியைச் சபிப்பதிலேயே
இப்பொழுதெல்லாம் - என்
பொழுதுகளின் நிமிடங்கள்
பொறுப்போடலைகின்றன - நான்
அறியாமலே

கலைந்தோடும் மேகங்களில் - நான்
முடித்து வைத்த தூதோலைகளின்
கற்பை
துவம்ஷம் செய்யும் காற்றை- நான்
விரட்டும் போராட்டம் கண்டு
பேச்சற்றுக் கிடக்கின்றன - பல
கரும்பாறைகள் தம் வலிமையை
என்னுள் கண்டு

பனிப் பாறை தன்னுள் உறைந்து கிடக்கும்
என் காதல் ஞாபகங்களை
பிய்த்தெறியத் துடிக்கும்
சூரிய உஷ்ணம் கூட
விரண்டோட தருணம் தேடுகிறது
என் பெருமூச்சின் வெம்மை கண்டு

சிலுவையில் அறையப்பட்ட என் காதலின்
செந்நீர்த்துளிகளால்
சிதையும் என் இருதயத்தின் இருப்பும்
மனுக் கொடுத்து மன்றாடுதே - என்
உயிரனுகளில் இன்பம் மீள சேரவே

காத்திருகின்றேன்
என் காதல் யாகத்தின் வலிமை
வேரூன்றும் உன் காலடியோரம்- அது
உன்னுள் எட்டிப் பார்க்கும்
புன்னகைப் பூக்களின் நந்தவனமாய்
நிதமும்

என் நெஞ்சக் கூட்டில்
மோதியெழும் கடலலைச் சங்கமம் இனி
சந்தத்துடன் இசையாகு மோர் நாள்- என்
காதல் சாம் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தை
எம்முள் விட்டுச் செல்லும் இனிதாய்

காத்திருகின்றேன் அதே காதலுடன் ..

உன்னை சேராத கடிதம்

 
உன் மௌனங்களை தேடியே
மரணித்து விழுகிறது எண்ண திவலைகள்
உன் எச்சங்கள் எல்லாம்
மிச்சமாய் நின்று
என் விரதத்தை மிரட்டுகின்றது

நாசி துவரதுள் புகும்
உன் நினைவு சுமந்த
தென்றல் காற்றும்
ஊசியாய் உள் புகுந்து
என் சுவாசப் பையை
சல்லடைகளாய் துளைத்து செல்கிறது

இறுக்கி பிடிக்கும் இதய நரம்புகளும்
தளர்த்தி தவிக்கும் உடலின் அசைவுகளும்
உறைந்து கிடக்கும் நினைவு பாளங்களும்
விடுதலைக்காய் வெம்பி தவிக்கும்
விசித்திரமான உணர்வை சுமந்து
வெளி வரும் நீளமான மூச்சு முன்டியடிப்பும்
உன் இல்லாமையின் நிஜத்தை
செதுக்கி செல்கின்றது ..

என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...
 

Wednesday, September 19, 2012

தரிசனம் தந்துவிடு

 
தெருவோரமாய் சில சில்வண்டுகள்
சிரித்து சென்றது போல்
மனதோரமாய் சில
மகிழ்வோசைகள் உரசி சென்றது ..
நிலவும் இரவும்
உரசி கொள்ளும் இராக்காலம்
அவன் நினைவும்
என்னை உரசிக்கொண்டு
உலா போகும் ...


ஏகாந்தமாய் இரவினை தழுவும்
இனிய தென்றலும்
அவன் மகரந்தங்களை
மனதுள் வீசி செல்லும்
நினைவுகள் கருக்கொண்டு
கனவுகளை பிரசவிக்கும் ..
அந்த இன்பங்களின் வெளிப்பாடாய்
சிரி பூக்கள் உதட்டில் பூக்கும் ...


நீண்ட நாசியும்
மதுவில் தோய்ந்த
மயக்கத்தோடு கண்களும்
கோவை இதழ்களை
காவு கொள்ளும்
பரந்த இதழுடன் வாயும்
பாவை எண்ணத்துள் வந்து
பருவத்தை கிறங்கடிக்கும் ..


ஒரு வாய் அமுததுக்காய்
உலகமே வெறுக்கும்
அவன் அருகாமைக்காய்
அங்கம் ஏங்கும் .
ஏக்கத்தின் வரட்சி
மனதினுள் இறங்கி
உதட்டினை உலர்த்தும் ..

இன்ப கனாவை
இரவல் எடுத்து
துன்ப லகரியில்
துவண்டு மருளும்
கண்கள் தனுக்கு
காட்சி கொடுக்க
அன்பே ஒரு முறை
தரிசனம் தந்துவிடு