Sunday, September 7, 2014

நினைவுகளில் ...


 
 
அவன் உணர்வுகளில்
உறங்கிக்கொண்டு இருக்கிறாள்
அவள் மலராக ..

அதிகாலைகளில்
அலரும் நித்யகல்யாணி என
மதியமும் மிளிரும்
செம்பருத்திஎன
மாலையில் மலரும்
மணி மலரென
இரவுகளில்
மணம் கமழும் மல்லிகைஎன
உணர்வுகளில்
உயிரை சேர்க்கிறாள்
இதமாக ...

ஒரு தாமரையின்
மலர்சியென
மகிழ்ந்தாடும் அவள்
முகமலர்வில்
அலர்ந்து விசிக்கிறது
அவன் இதயக்கமலம் .
அடிக்கடி சொற்களால்
வதைக்கும் அவள்
நினைவு படுத்துகிறாள்
முள்ளில் அழகிய ரோஜாக்களை ..

கண்களில் மலர்ந்த
கார்த்திகை பூக்களில்
கணப்பொழுதில் தொலைத்துவிட்ட
காளை மனதில்
இன்னும்
அதிசய மலர்களின்
மாலையாகவே
தினம் அவனை சூடிக்கொள்கிறாள்
நினைவுகளில் ...

தொலைவுகள் தொலைத்து வா ....



என் நிமிட துளிகளை
நீட்சி கொள்ள வைக்கிறாய்
யுகமாக..
உன் அருகினில்
துயில் கொள்ளாமல்
துவள்கிறது மனது ...

உன் முகத்திருப்பலில்
முடங்கிக் கொள்ளும்
என் புன்னககை
ஓர் பார்வைத் தடவலுக்காய்
பரிதவிக்கிறது ...

வலுவான உன் கரங்களுக்குள்
வனப்புகள் அனைத்தும்
வசமிழக்க துடிக்கிறது
வாவென்று அழைத்துவிடு
வந்துவிடும் உயிர் கொண்டு ...

காத்திருப்பதினிய சுகம்
என் காதலெங்கும் உனது முகம்
கரம் கொண்டு அணைத்துவிடு
காதல் தன்னை பருகிவிடு ..

உன் தோள் வளைவில்
தொலைந்துவிடத் துடிக்கிறேன்
தொலைவுகள் தொலைத்து
வா .....

" ஈர நினைவுகள் "



இந்த நாளின்
இறுதி மணித்துளிகள்
ஈரம் கலந்தே பயணிக்கிறது
உனக்காக ஒதுக்கப் பட்ட
ஒரு ஜென்ம வாழ்க்கையில்
ஒரு நிமிடம் கூட
ஒதுக்கமுடியாத
இந்த நாளின் முடிவுகள்
இறந்தும் சுவாசிக்கிறது
நினைவுகளால் ...

ஒரு மெல்லிய
பனிக்காற்றின் வருடல்களுடன்
வண்ணமயமாக்க முனைந்தாலும்
வர்ணம் இழந்த
வரட்சி வரிகளை சுமந்தே
பயணிக்கிறது ஒரு தென்றல் ..

ஒரு முத்த ஒற்றுதல் இல்லை
முடிகோதும் விரல் இல்லை
முகம் நோக்கும் விழியுமில்லை
ஒரு சூனியத்தின்
விளிம்பை நோக்கிய
பயணமாக இருக்கிறது
எத்தனிப்புகள் ....

உன் எண்ணங்களை
வண்ணங்களை
இதயம் மட்டுமல்ல
இமைகளும் சுமக்கிறது
ஈர நினைவுகளாய் ....

" உயிர்வலி "



இந்த இரவின் வெளியில்
தூவி இருக்கிறேன்
உன் நினைவுகளை
எது எதுவாகவோ
அது எனக்குள் நீர்கிறது
உன் உருவத்தை
உள்ளத்தில் வரித்து ....

ஒற்றையாய் உருகி வழியும்
நிலவின் நிலைகூட
மனதுள்
நிர்மலத்தை கொடுப்பதாயில்லை ..

எத்தனை இரவுகளை
என்னுடன்
ஏகாந்தமாய் ஸ்ருஷ்டித்திருப்பாய் ..
அந்தகாரமான
பொழுதுகள் அனைத்திலும்
ஆழமாய் அருகில் இருந்து
அணைக்கத் தவறுவதில்லை
உன் நினைவுக் கரங்கள்

ஊடல் விதைத்த
கூடல் நினைவுகள் எல்லாம்
தேடல் இன்றியே தவிக்கிறது
காதல் சுமந்து
கனந்து வழியும்
கண்கள் பகிர்கிறது
ஓர் இன்மையின் தேடலின்
உயிர் வலி ....

விடியலை தாருங்கள்..

 
 
ஒரு புத்தன் போதித்த
பல எத்தன் சேர்ந்து
பல வித்தை மாய்த்த
கொடிய நாளிது

குண்டு சத்தங்கள் கேட்டு
குலை உயிர் துடித்து
குறை உயிராய் கிடந்தவர்மேல்
குறி வெறிகொண்டு
குதறி பின் மாய்த்த
குலம் சிதைந்த நாளின்று ..

ஏழுவயது சிறுவனும் புலி
எழுவது வயது கிழவனும் புலி
இனி எங்கு எது பிறப்பினும்
அதுவெல்லாம் புலியென்று
வெளிவரமுன்பே
வெறிகொண்டு
தொப்புள்கொடி அறுத்த நாளின்று ...

மன்னுயிரும் தேடுதடா
மறவர் குலம் விதைந்த தேசமெங்கும்
மறுபடி முளைகளை ...
மாறி நின்று பேசுவோரே
மனதை ஒரு கணம் திருப்புங்கள்
ஓய்ந்தொழிந்து போனது
யாரோ அல்ல யாம்தான் .

இன்று நன்றாய் இருப்பதாய்
பேசும் நாக்கில் உப்புசுவை தெரியோரே
நாளை உம் பாவாடை நாடா
அவிழ்க்கப் படும்பொழுது தெரியும்
இன்றய உமது நன்றுகள்
தின்பது எதுவென்று ..

மனம் கனதி கூடி தவிக்குது
இனம் களவாடப் பட்ட நாளிதனில்
மாண்டவர்கள் மீள்வதில்லை
மனதில் வாழ்பவர்கள் சாவதில்லை ..
உலக மறைகள் பேசும் பெரியோரே
எங்கள் மனங்கள் அமைதிகொள்ள
மார்க்கம் ஒன்று சொல்லுங்கள் ..
மரணம் போர்த்த போர்வைகளைய
ஒரு மாறா விடியலை தாருங்கள்..

"மயக்கும் நீ "



உன்னோடான
என் பொழுதுகளெல்லாம்
வண்ணம் தெளித்து
வரையப்படுகிறது
ஒரு பட்டாம் பூச்சியின்
இறகுகள் கொண்டு ..

அவ்வப்பொழுது
கேள்விகளாய்
உயரும் புருவ வளைவில்
வளைந்து குளைகிறது
வாகாய் மனது ...

ஒரு மென்புன்னகையில்
உலகின்
மாயங்கள் அனைத்தும்
மயங்கிக் கிடப்பதாய் எண்ணம்

விலகமுடியாத
நிமிடங்கள் கொண்டு
புனையப் படுகிறது
நமக்கான
எதிர்காலம் ..

அவ்வபொழுது
பாய்ந்து மீளும்
பார்வையின் வீச்சில்
வெக்கம் துகில் உரிந்து
பக்கம் வீழ்ந்துகிடக்கிறது
ஏக்கம் எதுவரையோ
அதுவரை நீள்கிறது
உன் விழிக் கணைகள் ...

பல பட்டாம் பூச்சியின்
நகர்வுகள் என
உன் மென்மையான
தீண்டலுக்காய்
காதலோடு காத்திருக்கிறது
மங்கை மனது ...
மனம் நீவி வா
மயக்கும் நீ
மயங்கும் நான் ..

நம்பிக்கை..



இந்த நிலாகலத்தின்
நீட்சியில்
உன் நினைவுகளை
படர விட்டிருக்கிறாய்

தொலைவில்
தொட்டுவிடலாம்
நம்பிக்கையில் நடை போட்ட
சின்னம் சிறு குழந்தையாக
உன்னை நேசித்த நாட்கள் ...

அந்த நிலவைப் போல நீ
உன்னை தொடரும்
குழந்தை போல நான் ..

நடு ராத்திரிகளின்
நிஷப்த பயங்களோடு
உன் இன்மையின்
வெறுமையின் பயணங்கள் ..

ஒரு விலகுதலில்
விளித்து மிரள்கிறது மனம்
நிமிட நகர்வுகளின்
மணித்துளிகளை
விழுங்கிச் சிரிக்கிறாய்
விரக்திகளை
பரிசளித்துவிட்டு ..

தொட முடியாத
தொலைவில் உள்ள உன்னிடம்
சிறு குழந்தையாகவே
ஆசை கொள்கிறேன்
நீ
அடைய முடியாத
ஆவல் என்பது
அறியாமலே போயிருக்க கூடாதா?