Wednesday, April 17, 2013

விழிகளின் சிவப்பு

http://www.catholicchapterhouse.com/blog/wp-content/uploads/2011/11/crying-eye.jpg 


உன் கை பிடித்து நடந்த
கனவு நிமிடங்கள்
கரைகின்றது கண்ணீரில்
கரையேற துடுப்பு தேடும்
விழியின் ஈர்ப்பில்
விரிந்து அமிழ்ந்து
உதிர்கிறது ஒரு துளி நீர் உன் இருப்பு தேடி .

முடியாத தனிமை
முதிராத இளமை
கனியாத காதல்
காணாத கோலம்
ஒற்றை ரோஜாவின் இதழ் உதிர்வில்
ஓய்ந்து உறைகின்றது
கனவின் கை கலப்பில்
கலைந்த உறக்க விரிப்பில்
உதிர்ந்து சிதறும் கண்ணீர் முத்துக்கள்
கை கோர்த்து பெரும் வெள்ளத்தில்
விதைத்து செல்லும் சோக விம்பங்கள்
உடைந்து ஊறும் கன்னங்களில் ..

என்று எங்கு எப்போது எப்படி
விடை தெரியாத வினாக்களின்
விகுதிகளாய் விழிகளின் சிவப்பு
விடியலுக்காய் இருக்கலாம்
அன்றில் வீழ்வதட்காயும் இருக்காலாம் ..

Sunday, April 7, 2013

காத்திருப்பு

chinese photo chinese_girl_painting60-1.jpg 

கருநீல  வானின்
நீண்ட விரிப்புக்குள்
விதைக்கபட்ட விண்மீன்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தம் இருப்பினை காண்பிக்க
ஒளிந்து ஒளிர்ந்தவண்ணம் இருந்தது ...

மேக திரள் விலக்கி
மோக முட்களை அனுப்பும்
காம பிரம்மன்
கதிர் அலர்ந்தவனை காணோம் ...

தேக துகள் நுழைந்து
பாகத் தானைக்குள்
போகத்தேனை சுரக்கும்
மெல்லிய தென்றல்
மெல்லிடை தொடும்
நாணக் குடை விரிந்து
வானை அது மறைக்கும் ...

வான் காணா பிறை ஒன்றை
தான் காண விரல் கீறும்
பால் ஊறும் செவ்வாயும்
பல் பதிந்து சொல் குழறும்
வெம்பி தணியும்
கொங்கை குடை நிலத்தில்
தொங்கும் சங்கொன்று தாளம் போடும்

எங்கே எனும் கேள்விக்கு
இங்கே என்று இருப்பினை காட்ட
தடதடக்கும் இதய தாளம்
காதலில் தனிமை இனிமை
மோகம் புதுமை
மேகம் கவிதை
நிலவில் இருளும் இனிமை
பிரிவும் இன்னிமை

இன்னும் காணவில்லை
இருள் கிழிக்கும் என்னவன் ...

நம்பிக்கை

 
உன்னையும் என்னையும்
மீறிய காதல் பயணத்தில்
என்றோ இணைந்த பயணிகள் நாம்
இந்த காதல் பயணத்தின்
முடிவு தெரியவில்லை
இடம் மாறுதல்களும் புரிவதில்லை
தடு மாறுதலும் தெரிவதில்லை

எதிர் எதிராக
வெறும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தோம்
இன்று காதல் எனும் புத்தகத்தை
கை கோர்த்து படிக்கின்றோம்
எதோ ஒரு சந்தர்பத்தில்
கை தன்  இணைப்பை தளர்த்தலாம்
காதல் பாடத்தின் பகுதி மாறலாம்
கல்யாணத்தில் அதன் விகுதி தொடங்கலாம்

அன்றில் பாதை மாறலாம்
பயணங்கள் தோற்கலாம்
உனக்கும் எனக்குமான
உன்னத காதல் சமாந்தரங்கள்
பிரிவினால் இணையாது போகலாம்

வாழ்வு முழுமைக்குமான இந்த அன்பை
வாழ்ந்து முடிக்க
நாம் மட்டுமல்ல
நம்மை போல் பலரும் துடிகின்றனர்
தம் காதல் பயணத்தில்
எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில்
இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்
இணையக் காதல் .

வாழ்க நீ பல்லாண்டு ...

Sad Wedding 

வெட்கத்தை விதைத்துக் கொள்ளும் பொழுதுகளும்
சத்தத்தை அடக்கி சயனித்து பயணிக்கின்றது
எட்டத்தே ஒரு கோட்டான்
எக்கி எக்கி குரல் எழுப்பி
அச்சத்தை இதய சந்துகளில் அலைய வைத்தது

பட்டென்று எங்கோ எதோ
படர்ந்துவிட்ட காற்றின் எதிர்ப்பில்
பயணித்து அலைந்த
முடிகளின் முனையில்
முடியாமை மண்டி இடுகின்றது ...

மரணப் பாதையிலும்
மனதோடு இணைந்து
மகிழ்வில் பயனிப்பாய் என்றிருந்தேன்
மனதோர சுவர்களில்
நிழல்களை பதித்த நீ
நிஜங்களை வேறு ஒருத்திக்கு
மானியம் ஆக்கியதேன் ...?

விசிறியாய் மடியும் இமைகளிலும்
சடுதியாய் வந்தமரும் உன் நினைவுச் சுமைகள்
கடு கதியில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற  வரிவடிவம் புலப்படுகிறது ...

இரவின் தனிமைகளை வெறுமைகள் ஆக்கியபடியே
உன் நினைவுகளின் நகர்வுகள் தொடர்கிறது ..
கனவுகளின் சுமைகளில்
அடிக்கடி நீ கருத் தரித்து குறைப் பிரசவமாகிறாய் ..
ஒரு பாலைவனத்தின் வறண்ட பிளவுகளாய்
வறண்டு தகிக்கும் இதய நாக்குகள்
வடிகிண்ற கண்ணீர் துளிகளை நக்கி நனைகின்றது ...

விடியாத இருளும் முடியாத துன்பமும்
மிரட்டியபடி விரட்டும் கோர இரவின் பிடியில்
கனவுகள் குலைந்த குயிலாய் கூவுகின்றேன் அகாலத்தில் ...
வாழ்க நீ பல்லாண்டு ...

Thursday, March 28, 2013

நம்பிக்கை

 


தெருவோரமாய்
ஒரு ஒற்றை காகிதம்
காற்றின் திசை எங்கும்
பறந்து கிழிந்து
ஓரங்கள் சிதைந்து
ஒழுக்குகளில் நனைந்து
இன்னும்
காற்றின் திசைக்கு ஈடு கொடுப்பதற்காய்
தன்னை தயார் செய்தவண்ணம் படபடக்கிறது ...

அது இறைவனுக்கு எழுதபட்ட
வேண்டுதல் கடிதமாய் இருக்கலாம்
தலைவனுக்கு தொண்டன் எழுதிய
தயை நிறைந்த கடிதமாய் இருக்கலாம்
மகனுக்கு தாய் எழுதிய
வயோதிப விண்ணப்பமாய் இருக்கலாம்
காதலனுக்கு கொடுபதட்காய்
பலகாலமாய் காத்துகிடந்த
காதல் மடலாக இருக்கலாம்
நிந்திக்கப்பட்டு
நிராகரிக்கபட்டு
வஞ்சிக்கப்பட்டு
கிழித்து எறியப்பட்ட ஒரு நகலாக இருக்கலாம்

இன்னும் அது வாழத் துடிக்கிறது
காற்று ஓய்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்

Saturday, March 23, 2013

இளவேனில்

 

இருள் மெல்ல துயில் களையும்
காலைப் பொழுது
பகல் கொண்ட வெம்மை தணிக்க
பனி கொண்டு மூடி
படுத்துறங்கிய பகலவனும்
மெல்ல துயில் கலைவான் ..

மெல்லிய புல்தரையில்
சிந்திய பனி துளிகள் பட்டு
சில்லென சிலிர்த்தது புல்வெளி
கள்ளென போதை கொண்டு
தன் கண்களை மூடிக்கொள்ளும்
காற்று வெளி ..
கண்களை திறந்து
காண்பவை எல்லாம்
கண் நிறையும் கற்பனையில்
இறகுகளின் போர்வைக்குள்
இன்னும் ஒருக்களித்து
உறங்கும் ஒரு பட்சி ..

விரிகின்ற ஒளிக்காய்
படர்ந்து பரிதவிக்கும்
பனிப்புகார் தன்னுள்
மறைந்து விசிக்கும்
மரங்களின் குளிர்மை சொல்லும்
இதுவொரு இளவேனில் காலம் .

இயற்கையின் எழில் களையும்
இரும்பு மனம் கொண்டவர்க்காய்
வெளிகளுக்கு வேலிகள்
மரங்களுக்கு மரத்தடுப்பு
மனங்கள்போல்
மரமும் மடை மாறுமோ ..?

Friday, March 8, 2013

நிலவுக்கும் குடை பிடிப்பேன்

http://muslimvillage.com/wp-content/uploads/2012/08/Muslim-Women-sad.jpg
ஏக்கங்களும் எண்ணங்களும்
தனிமைகளை சுகமாக
சுரண்டி தின்னுகின்றது
எட்டாத நிலவு
எரிகின்ற நெருப்பு
கை கொள்ளா கடல்
கை கூடா காதல்
அனைத்தையும்
கட்டி அணைக்க துடிக்கும்
எண்ண அதிர்வுகளுக்கு
வெறும் வண்ண கனவுகள்தான் மீதம் ...

கனவுகளை விதைத்து
கண்ணீரை அறுவடை செயும்
எண்ண அரக்கனை
எளிதில் கொன்றால்
வற்றாத ஜீவ நதியாகி
ஓடிகொண்டிருக்கும் உல்லாசமாய் உள்ளம் ...

உனக்காக ஒரு தாஜ்மஹாலை
உள்ளத்தில் மட்டுமே கட்ட முடிந்தது
உலகுக்கு கொடுத்த சாஜஹான் கூட
அதை நனையாது காக்க எந்த வழியும் செயவில்லை ...
உனக்காக நான் பிடிக்கும்
இந்த ஒற்றை கருங் குடையின் கீழ்
என் உலகமே உனக்காய்
விரிந்து பரந்து காத்திருகிறது
நிழல் கொடுக்க ..
என்று வருவாய் ...
உன் பிடிவாதங்களையும்
வீண் பிதற்றல்களையும்
வீணென்று தூக்கி வீசி ..?

நிலவுக்கும் குடை பிடிப்பேன்
நீ அங்கு இருப்பாய் என்றால்
உன் நினைக்கும் குடை பிடிப்பேன்
என் கனவுகளில் மழை நாள் என்றால்
கனவுகளில் நீந்தி
கலவரம் செய்யாது
என் கண்களில் நீந்த வா
காலம் எல்லாம்
உனக்கு நான் நிழல் கொடுப்பேன் ..