Wednesday, July 17, 2013

என்றும் காதலோடு ...


 
பூமி கோளத்தின்
புரியாத பகுப்பில்
இனைய முடியாத
சமாந்தரங்கள் நாங்கள்
அதனால் தானோ
ஒவொரு நொடியும்
உன் முகதிருப்பலின்
முகமனோடு நகர்ந்து கொண்டிருகிறது ..

உந்தன் நேசத்தின் ஒளியில்
விட்டில் ஆன என் ஆசைகளெல்லாம்
சிறகு எரிக்கப்பட்டு கருகி சாம்பலாகின்றது
உயிர் துடிப்பை இழந்து ....

என் வாழ்க்கை விளக்கு
உன்னால் பற்றிக்கொண்ட போதும்
கருக்கலின் கறைகளாய்
என் வேதனைகளும் விரக்திகளும்
விழுந்து கிடக்கின்றது
வடுக்களாய் ......


நமக்குள் முக்குளித்த
கனவு பதுமைகள்
கண் விழித்ததும் காணாமல் போனது ...
கானல் நீராய் ...

இருந்தும்
என் வெறுமை படிந்த என் இதயத்தில்
வலம் வரும் உன்னை
பற்றி கொள்ள காத்திருகின்றேன்
என்றும் காதலோடு ...

சிதறல்கள்

 

புரியாத புதிராக
புதைந்துகொண்டே
போகிறது என் காதல்
பூவாய் காதிருந்தும்
புழுதியில் புரளும் வரமோ ..
புன்னகைக்க முயற்சிகின்றேன்
புரியாத உன்னை நினைத்தல்ல
புரிந்தும் புரியாத என்னை நினைத்து

உனக்கான என் எண்ண சிதறல்கள்
எண்ணிலடங்காமல் என்னை சுற்றி
எதிலும் குறைவில்லை
உன் அலட்சியங்களில்
அன்றாடம் சாய்ந்து கொள்வதிலும்தான்
அன்பே அசையாத காதல் என்னிடம்
அநியாயம் பன்னுகின்றாய்
அனுதினம்...........

பித்தனடி

 

வெட்ட வெளியில்
 மெல் ஒளி உமிழும்
ஒற்றை நிலவென
கற்றை கரு முகில் பிரித்து
தொலைந்த தன் காதலனை
பூமியெங்கும் தேடுகிறாள் ..

காதல் பறவைகள் என இணைந்து
உறவுகளின் விலங்குடைத்து
காவியம் பல புனைந்து
கடந்து சென்ற நாட்களின் சுவடுகளில்
பொதிந்த பூக்கள் எல்லாம்
முட்களாய் மாறி
முனைகளை களம் இறக்குகிறதே ..

தினம் தினம் போர்க்களம்
திகட்டி விட்டது அவனுக்கு
விடுதலை வேண்டும் என்று
விண்ணப்பம் கோருகிறான்
விலையாக எது வேண்டும்
விலை உயர்ந்த கார் ?
விண் மீனென மினுங்கும்
அவர்கள் கனவில் கட்டி எழுப்பிய வீடு ?
காலமெல்லாம் உக்கார்ந்து சாப்பிட
ஒரு தொகை பணம் ?
எதுவேண்டும் விடுதலைக்கு ?

வார்த்தையின் வீரியத்தில்
தழுதழுத்த கண்களின் வழி
உயிர் ஒழுகி ஓடி விடுமோ
ஒருபக்கம் திரும்பி நின்று
ஒற்றை விரலால் உள் நிறுத்தி
சட்டென திரும்பி
சடுதியாய் ஒன்று சொன்னாள் ..

பிச்சையாய் இடும் பொருள் வேண்டாம்
என்னிடம் பித்தனாய் நீ இருந்த
அந்த பல நூறு நாட்களில்
பதினைந்து நாள் வேண்டும்
தந்துவிட்டு செல்
போதும் என்றாள் .

என்ன இது புது குழப்பம்
இருந்தாலும் சம்மதித்தான்
விடுதலையின் காற்றென
அவன் விரும்பும்
விவாகரத்து உந்த ..

நாள் ஒன்று நாளிரண்டு
நாளைந்து நாள் எட்டு
எட்டி நின்ற கணவன்
காதலனாய் மாறிவிட்டான்
எந்த கவலைகள் அற்று
கனவுகளின் எல்லைகளை அடைந்தார்கள்
சண்டைகள் இல்லை
சமாதானத்தின் அவசியம் இல்லை
விட்டுக் கொடுத்து கட்டிக் கொண்டார்கள்
அன்றில்களாய் ஒன்றிய பொழுதெல்லாம்
பின்னாளின் அவலங்களை
மனதுக்குள் மறு பரிசீலனை செய்து
தவறென்று கண்டேதெல்லாம்
தனியாக பிரித்தெடுத்து
திருத்தங்களுக்கு தீர்வு கண்டார்கள் .

வானம் வண்ண மயமாகியது
வாழ்க்கை இன்பமயமாகியது
விட்டுக் கொடுப்பதால்
கெட்டுப் போவதில்லை
விழுதுகள் பலம் பெறுகிறது
உணர்ந்தான் உவகை கொண்டான்

பதினைந்து நாள் முடிவில்
பத்திரத்தை கிழித்து
பாசல் இட்டு பாவைக்கு பரிசளிக்க
பட்டுப் புடவை ஒன்றுடன் நாடிய பொழுதில்
கூடை விட்டு குருவி பறந்து
நெடு நேரம் தொலைந்திருந்தது
அவனுக்காய் ஓர் மடல் ..

அன்பே மன்னித்துவிடு
அரைமாதம் உன்னுடன்
அணுவணுவாய் வாழ்ந்துவிட்டேன்
உன்னை பிரிய முடியவில்லை
உயிரை பிரிகிறேன் - உன்னவளாய் .

பூமி அதிரவில்லை பூகம்பம் வரவில்லை
தரை பிளந்து தன்னவளை
கணவனாய் இருந்து
காலனிடம் சேர்த்த தன்னை வைதான்
எங்கு சென்றாய் என் நித்திலமே
நித்தம் உன் நிழலில் நீண்ட என் ஓய்வுகள்
உனிடம் நான் இன்னும்
பித்தன் என்பதை சொல்லவில்லையா ?
விட்டுப் பிரிகையில் வீழ்ந்திடும் என் பார்வை அம்பு
உன் வீணான எண்ண போக்கை வீழ்த்தவில்லையா ?
கட்டிலும் களிப்பிலும் கட்டுண்ட வேளையில்
காமம் மீறிய என் காதலை சொல்லவில்லையா ?

பித்தனடி நான் உன் பித்தனடி
உன் பிரியம் வேண்டுமடி
உள்ளம் வெடிக்கும் உன் பிரிவை
ஒரு அசைவால் தன்னும்
சொல்லிட விரும்பலையோ ?
சொல்லி என்ன ஆகும் என்று நினைத்திருப்பாய்
சுரணை கெட்ட ஆண் பிள்ளை தானே இவன்
எங்கு செல்வேன் ? என்ன செய்வேன் ?
என்னையும் அழைத்துவிடு
இனியொரு ஜென்மம் கொண்டு
உனக்கு தாசனாய் வாழ்ந்து முடிக்க ....

உங்கள்


ஒவொரு வார்த்தையின் விளிம்பிலும்
உருகி வழியும் உங்கள்
புரிதலின் ஊனத்தின் வாடை
யாருக்கும் உவப்பானதாய் இருப்பதில்லை .

விளங்க முடியாதா
விளங்கிக் கொள்ள முடியாத
ஏன் விளங்கி கொள்ள விரும்பாத
ஆதிக்கத்தின் பிடியில்
அடங்கி அமிழ்ந்து ததும்பி
வெளி வரும் உங்கள் வார்த்தைகள்
துப்பிய எசில்களாய் அருவெறுப்பாக ..

கோடுகளாலும் புள்ளிகளாலும்
இணைந்த கோலத்தின் மீது
ஊரும் சர்பெமென
உங்கள் அசைவுகள்
விஷத் தன்மையானதாகவும்
விரும்ப முடியாததாகவும் இருக்கிறது ..

நெடுந் தூர பயனமொன்றின் கை கோர்ப்பில்
அடிக்கடி சுரண்டும் நகங்களின் இடுக்கில்
உறையும் இரதங்களின் துர் நாற்றமென
உங்கள் மீது கொண்ட நம்பிக்கை மணக்கிறது ..

வெற்றிடங்களை நிரப்பும்
காற்றின் துணுக்குகளை
கிழித்து வரும்
உங்கள் குரோதப் பார்வைகள்
உங்கள் மேல் கொண்ட நம்பிகையின்
ஆயுளை அடித்துச் செல்வத்தையும்
தவிர்க்க முடிவதில்லை ...

அலரும் மலரின்
மென்மையை ஸ்பரிசிக்க துடிக்கும்
உங்கள் மனங்களுக்கு
அதன் மேன்மைகள்
என்றுமே உவப்பானாதாக
இருக்கப் போவதில்லை

எனவே விடை பெறுங்கள்
உங்களுக்கென தனியானதொரு
தடம் காத்திருக்கலாம் .

இப்படிதான் வாழ்கிறது மனிதம்

 

மனிதம் கீறும்
மனிதக் கத்திகளின்
முனை தடவி ஒழுகும் குருதி
ஆளுக்கு ஒரு நிறம் காட்டவில்லை ...

இறப்பின் பகை கொளுத்தி
எரியும் தீக் காங்குகள் எதுவும்
ஜாதிக்கு ஒரு சாம்பலைத் தருவதில்லை ..

உடல் அழுகி ஒழுகும் ஊனத்தின் மேல்
புழுத்து நெளியும் துர் நாற்றப் புழுக்கள் என
ஜாதி , இன , மத வெறிகள்
யாராலும் தீண்ட விரும்பப் படாதவையாக இருக்கிறது ..

மதத்தை வளர்கிறேன் என
மனிதனை கொல்வதும்
இனத்தை வளர்கிறேன் என
மொழியை கொல்வதும்
மொழியை வளர்கிறேன் என
இனத்தை அளிப்பவர்களும்
ஏனோ மனிதம் கொன்று
மற்றவைகளை வளர்கின்றனர் ..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
இதை நன்றே சொல்கின்றனர்
நரம்பற்ற நாக்கென்று
வரம்பற்று பேசுகின்ற
நாடி தளர்ந்திட் கிழ பழசுகளும்
ஜாதி வெறிகொண்டு பாயும் நாய்களென ..

மனிதம் விற்று மதத்தை வாங்குபவனே
தன் புனிதம் விற்று வெறியை வாங்குகிறான்
இறைமை விற்று இனத்தை தாங்குபவனே
அவன் முறைமை அற்று முடிவை தேடுகிறான்

தெருவெங்கும் மேடை கட்டி
உருவமிலானுக்கு ஏன் ஒன்பது கோயிலென
ஓலமிடும் அவன் வீட்டில் தங்கத்தில் சாமி சிலை ..
ஜாதிகள் இல்லையடி பாப்பா
என தாரணி முழங்க கூவுகிறான்
அவன் வீடில் ஜாதிக்கு ஒரு கோப்பை ..
யாதும் ஊரே யாவரும் கேளீர்
நீயும் நானும் ஒருதாய் பிள்ளை என்கிறான்
பின்னால் இவன் மதராசி என்கிறான்

இப்படிதான் வாழ்கிறது மனிதம்
இதில் எப்படி ஐயா வாழும் இங்கே புனிதம் ?

ஜாதீ

 

அன்பெனும் ஓடையில் கலந்த
காதல் பண்பெனும் தேன் குடித்த
ஜோடி வண்டுகள் இரண்டு
வாடி கிடந்ததே கிளர்ந்து ...

அகிம்சையும் வீரமும்
அறவே அற்றவர்
வெறும் மேடைப் பேச்சாய்
கொண்டவர் வெறிக்கு
காதல் கொண்டவர் ஆனார் இரை ..

யார் கண்டு பிடித்தது ஜாதி
யாரை கொண்டு புணர்ந்தது ஜாதி
உனக்கும் எனக்கும் குருதி சிவப்புதான்
உனக்கும் எனக்கும் இருதயம் இடப் பக்கம்தான்
நீயும் நானும் உண்பது சோறுதான்
நானும் நீயும் சுவாசிப்பது ஓர் காற்றுத்தான் ..

வாழும் பூமி சாதி பார்க்கவில்லை
வீசும் காற்றும் சாதி பார்ப்பதில்லை
விளையும் விதை சாதி பார்கவில்லை
வேரும் ஓடும் நீரும் உதிரும் இலையும்
ஒன்றுமே சாதி பார்ப்பதில்லை
இதை எல்லாம் நம்பி வாழும்
நீ மட்டும்தான் சாதி பார்க்கிறாய் ..

உயிர் இணைந்த பறவைகளின்
உடல் பிரிக்க வைத்தீர் ஊர் தீ
இன்று உயிர் பிரிந்த
பறவை ஒன்று
உனக்கு வைக்கும் தீ ..

நாய்களுக்கும் உண்டாம் காதல் சுதந்திரம்
பறக்கும் பறவைக்கும் உண்டாம் கலவிச் சுதந்திரம்
ஏன் பேய்களுக்கும் உண்டாம் பூர்வீக பந்தம்
கேவலம் ஆறறிவு ஜீவன் மனிதர்க்கு இல்லையே
அவன் வாழும் சுதந்திரம் ..
மனிதனாய் பிறத்தலிலும் நாய் பேய் மேலடா
நர பலி கேட்கும் சாதி சாமிகளுக்கு
இறுதிச் சடங்கு ஒன்று செய்யடா ..

கரும் புலிகள்

 

நேரம் குறித்து
நிமிடம் குறித்து
காலம் குறித்து
உயிரில் தீ மூட்டி
காலனை அழைக்கும்
கர்ம வீரர் தாம் கரும் புலிகள்

கொண்ட கொள்கைக்காய்
ஈகம் ஈயும் தியாகம் கொண்டவர்
தாகம் தன்னில் தாயகம் அடக்கி
தலைவனை நினைத்து
வெடித்து சிதருவர் ..

ஜாதிக்காக பலி எடுக்கும்
ஈனர்கள் வாழும் பூமியில்
தன இனத்துக்காக
தன்னை உயிர் பலி கொடுக்கும்
உத்தம ஆத்மாக்கள்

இன்று நீ நாளை நான்
இதுதான் இவர்கள் தாரக மந்திரம்
இன்று நான் இல்லையே என
ஏங்கும் இவருள்ளம் கண்டு
உறுதி கண்டு உருகி நெகிழும்
பாறைகள் பலவுண்டு ...

செம் பிழம்பாய் வெடித்து
தீயின் நா சூழ்ந்து
திக்கெட்டும் பகவரை
திகில் சூழ
தில்லாக புறப்படுவார் இவர் ...

மரணம் ஒரு நாள் வரும்
அதை மகத்தானதாய் மாற்றும் திடம்
மறவர் இவர்களுக்கே உரிய வரம்
மாவீரரான ஆன கரிய புலிகளே
உங்கள் மா வீரம் போற்றும் நாள் வரும்
உமை மனம் நிறைய வாழ்த்தும் ஊர் சனம் .