Saturday, December 28, 2013

பந்தம்...


****

இந்த இரவின் நீட்சியில்
உன் இன்மைகள்
வெறுமையை
விதைத்து செல்கிறது ...

எழுதப்படாத
ஒரு கற்பனை சித்திரம்
வண்ணமிழந்து
கருக்குலைந்து கலைகிறது

உன் அருகாமைக்காக
அலைகின்ற
மனக்கரங்களின் பிடியில்
உவப்பானதாய்
எதுவுமே அகப்படுவதாயில்லை ...

மழிக்கப்படாத
உன் இருநாள் முக முடியின்
கறுகறுத்த உரசல்களுக்காய்
தவமிருந்து சலித்த உதடுகள்
உரக்க சாபமிட்டுக் கொள்கிறது
முத்த அத்தியாயம்
முடிவடைந்து போனதாம் ...

ஏக்கங்கள்
எண்ணிலடங்கா தாபங்கள்
எழுத முடியா கற்பனைகள்
விசும்பி அழுகிறது
தனிமைகளுடன் இணங்க மறுத்து ...
இருந்தும்
தனிமைக்கும் எனக்குமான பந்தம்
மிக நெருங்கியதாகவே இருக்கிறது ..

மலர் இதழ்கள்..


****

இரவு நேரத்து மின் மினிகள் என
மினு மினுத்து சிரிக்கிறது
என் மீதான உன் அன்பு ....
அடங்காத காதலுக்குள்
அமிழ்ந்துவிட்ட மோக முட்கள்
ஒவோன்றின் மேலும்
ஊசிமுனைத் தவம் செய்கிறது மனம் ...

கழல் தீண்டும்
கரிய தேக்குகள் என
மினு மினுத்த கரம் தன்னில்
சிக்கிய கால்கள் இரண்டும்
உன் கைக்கியைவாய்
நர்த்தனம் ஆடுவது விந்தை ...

கொடியை படர்ந்த அரியென
பிடரிக் குழல் நுழைந்து
கோதி இழுக்கும்
விரகம் பகிர்ந்து நிமிர்ந்து
திமிறும் கட்டுடல்
களைந்து சிதறும்
உப்புநீர் சுவைக்கும்
ஒரு மலர் ....

திண்ணிய மெல் மலை படர்ந்து
ஊறும் அமுது துளைந்து
அருவி மருவும்
கள்ளேன போதை ஏறும்
கருவிழி கலந்து காமுறும் ..

இதழ் மடல் கவிழ்ந்து மூடி
இருதயம் இழுத்துப் பூட்டி
குடத்தினுள் ஏற்றும்
குறுகிய ஒளியென
பற்கள் இடையிடை ஒளிர்ந்து
இன்ப லகரியை
இதழில் மீட்டும் ...

கதவுகள் திறந்து கொள்ள
காமனின் வரவு கூறி
காற்றினில் மிதக்கும் சுகந்தம்
களம் காண விளைகின்ற ஏக்கம்
இதுகாறும் கடந்த மென்மை
இலையென்று உரைத்துடைத்து
மடை திறக்கும் ....
மலர் இதழ்கள் .....

கனவுகள் மீள...


****

உனக்காக கழிந்த
ஒவ்வொரு நிமிடத்தின்
உருகிய மனத் துளிகள்
மணித்துளியின் இறுதியில்
மதிப்பிழந்து போனது ஏன் ... ?

கடக்கின்ற காற்றை கேட்டேன்
தழுவிச் செல்லும் தென்றலை கேட்டேன்
மனதில் வீசும் புயல்
மருந்தளவேனும் தெரிகிறதா ?
சுழலில் சிக்கி
அசையாமல் அமர்ந்து சிரிக்கும்
அவன் புன்னகை
அணுவேனும் கலைகிறதா ?

உதட்டுக்கும் மனதுக்கும்
அணுவேனும் சமந்தமுண்டோ
மனதின் வலிகள் எதுவும்
உதட்டில் தெரிவதில்லை ..
உதடுகள் உதிர்த்த சொல்
உள்ளத்தை கிழிக்காமல் இல்லை ...

மங்கி விட்ட மாலை வெயிலில்
மறைந்துவிட்ட உன்
வரவு என்னுள் எழுதிச் செல்கிறது
வருங்கால வசந்தம்
மலர்கள் உதிர்க்கும்
மரக் கிளை என்று ..

கடந்த கால கவலைகள் பெரிதா
நிகழ கால நினைவுகள் இனிதா
எதிர்கால ஏக்கங்கள் எனதா
உள்ளத் தவிப்பு எழுதும்
உருக்கமான மடல் திறந்து
கன்னக் குழி நிரப்பும்
கனிவான முத்தமொன்று பகிர்ந்துவிடு ...
கனவுகள் மீள ...

திறக்காத உதடுகள் ...





உன்னை தாண்டும் தென்றல் என
உன் வாசம் சுமக்கிறது என் சுவாசம்
வரைந்து வைத்த ஓவியமென
நெஞ்சத்தில்
புனைந்து வைத்தகாவியம் நீ
வெகு தூரத்தில் இருப்பினும்
உன்னை விலகாது
நுகரும்
நினைவுப்பசி ...

புகழ் பெற்ற ஓவியர்கள்
தீட்டிய களங்கமற்ற ஓவியம்போன்ற
உன் வரிவடிவில்
வாழ்ந்துவிட துடிக்கிறது
ஒரு நிமிடம்
சிறகடிக்கும் இருதயப்பறவை ...

வண்டுகள் நுகரா மொட்டென
மலர மறுக்கும்
உன் இதழ்க் கடையில்
வழியும் அமுத மொழியில்
சிறகுலர்த்த தவிக்கிறது
இதுகாறும்
இன்மைஎனும்
வெம்மையில் குளித்த மனப்பறவை ...

திறக்காத உதடுகள் திறக்கும்
என்றோ ஒரு நாள் ஒரு பொழுது
ஒரு நொடியில் ...
அதைக் காண அன்று
திறக்காமல் போகலாம்
இமைக் கதவு ...

முத்தச் சுவை ...


கனவுகள் சுமக்கின்ற
அதிகாலைகள் பூக்கின்றன
நினைவு மலர்களை ,
இதழ் சிந்தும்
சிறு துளி நீரில்
மலரின்
ஏக்கம் கலந்து சிதறும் ..

அவிழாத மொட்டின்
அவிழ்தளுக்காக
ஆங்காங்கே ரீங்காரமிடும்
வண்டுகளின் சத்தம்
மலர் மௌனம் கலைக்கும் ...

பிரியாத இருள் களைந்து
மெல்ல விடிகாலை
ஆடையுடுத்தும்
பச்சை பகலவள்
மேனியெங்கும்
ஒளிரும் வைரமென
மிளிரும் பனித்துளி...

செந்தாள் சந்தனமென
குழைத்து மேனியெங்கும்
மிளிரும் மஞ்சள்
வர்ணம் விரவி
புரவி ஏறி
புகார் கலைக்கும் கதிரவன் ..

எங்கும் புலர்தலின் வர்ணம்
புதிதாக தெளித்துச் செல்லும்
குளிர்கால விடியல் ஒன்றில்
எண்ணம் வடியாது மையலுறும்
தையலிவள் கன்னமெங்கும்
குளிர் காற்று எழுதி செல்லும்
சில எச்சில் தெறித்த
முத்தச் சுவை ...


அவனுக்கு மட்டும்....




வெள்ளி வீழ்ந்த
ஓர் அமாவசை இரவு ..
அமானுஷ்யம் கூட
அரண்டு கொள்ளும்
அந்தகாரம் ..
அவனுக்கு மட்டும்
அது எதுவும் தெரியவில்லை ...

ஆங்காங்கே தெரியும்
வீதி விளக்கின்
குமுள் உதிர்க்கும்
குறுகிய ஒளியினுள்
தன இருண்ட வாழ்வை
சிறிது
ஒளியூட்டி உறங்குகின்றான் ...

வறுமையின் ரேகை
வலுவாக தெரிகிறது ..
செருப்பில் இருக்கும்
சிறிது செருக்கு கூட
அவன் தோற்றத்தில் காணோம்
அருகிருக்கும் நீர் பாட்டில்
அவனதாய் இருக்குமா ...
ஐயோ பாவம் என
ஆராவது கொடுத்திருப்பாரோ .....

புண்ணியவான்களும்
இந்த பூமியில் உண்டா ?
இருந்தால் புழுதியில் புரளும்
புருஷனாய் உன்
அவதாரம் இங்கு எப்படி சாத்தியம் ?

வல்லரசு கனவு
வகை வகையாய் சுக போக உணவு
வாரி கொடுக்கும் கஜானா கதவு
சொப்பன லோகத்து
அரசர்களுக்கு ஏது
நாயோடு சேர்ந்து
நடு வீதியில் உறங்கும்
நம்மவர்கள் நிலை புரியும் ... ?

நாய் கூட நன்றாக இருக்குது ..
நாய்க்கும் கெட்ட பொழப்பு உனக்கு ..
நாட்டினை நன்றி கெட்ட இதுகள் ஆண்டால்
நாளை நமக்கும் நிலை இதுதான் ...

கவலையின்றி உறங்குபவனே
கவனமாய் உறங்கு
காலனை விட கொடியவர்க்கு
உன்னைப்போல் அப்பாவிகள் தேவையாம்
அவர்கள் தப்பிக்க ...

விருட்சங்களே ...



இனம் காக்க
விதையான விருட்சங்களே
வீழ்தலில் எழுதல்
வீர மறவர்க்கே சாத்தியம்
வீழ்ந்தாலும் விதையாவது
உங்களுக்கே சாத்தியம் ...

வானளாவும் உங்கள் தியாகம்
வாழ்வு கொடுத்த
உங்கள் ஈகம் ...
உங்கள் உறுதியும் பாசமும்
உள்ளவர்க்கும் இருந்திருந்தால்
உருவாகி இருக்குமாடா தமிழ் ஈழம் ...

உனக்கென்றுதாயுண்டு
உறவாட சொந்தமுண்டு
உளம் பகிர நட்புமுண்டு
இருந்தும்
உருவாகும் தமிழ் ஈழம்
உன் கைபட்டு கருக்கொள்ள
களம் புகுந்து விதை ஆனாய் ..

கார்த்திகை பூக்களே
என்றும் நெஞ்சினில் நீங்களே ..
மயானம் சிதைத்த
மடையர்களுக்கு தெரியவில்லை
நீங்கள் விதையானது அங்கல்ல
விருட்சம் என மனதுள் என்று ...

கரிய புலிகள் என
கடல் கொண்ட வேங்கை என
கயவர் களமாடி
காவியமான
கர்ம வீரர்களே ..
கானல் ஆகுமோ உம் ஈகம்
கடந்து போகுமோ உம் கனவு ..

சாவுக்கு மனுப்போடும்
சரித்திர புருஷர்களே
உங்கள் ஆவி பிரிந்திடினும்
ஆரத் தழுவிய உங்கள்
தாய் மண்ணின் பாசம்
தலை முறைக்கும் சுமக்கும்
உங்கள் தியாகங்களை ..

உங்கள் ஆத்மா உறங்கிவிட கூடாது
உங்கள் கூக்குரல் ஓய்ந்துவிட கூடாது
உங்கள் வேகம் தீர்ந்துவிட கூடாது
உங்கள் தியாகம் முடிந்துவிட கூடாது
விதியான வீரா விளைந்து வா
வீணே காலம் கடக்குது பார் ..
நெஞ்சில் நிலையாகி போன எம்முறவே
உம நினைவை நித்தமும் சுமப்பர் ஈழவரே ...

நினைந்துருகும் இன்றைய நாள்
உன் கனவுகளை சுமந்தவண்ணம்
கார் இருளை கிழித்து
விடியலை பிரசவிக்காதோ ..
உங்கள் கனவுகளை சுமந்து
கடல் கடந்து கண்ணீர் சிந்தும்
இவள் ...