Tuesday, April 29, 2014

தனிமைகள் ...



இந்த இரவின் நீள்தலில்
எங்கும் விரவிக் கிடக்கிறது
தனிமைகள் ..

இமைகள் தீண்டப் படாமலே
இழந்து கிடக்கிறது
உறக்கத்தை ..

நினைவுகள்
தொலைவுகள் நோக்கிய
அதன் பயணத்தை
இனிதே நடத்தி சோர்கிறது ..

எந்த வேளையும்
தன்னிலை மீறக் கூடிய
கண்ணிமை வழி
நீர்த்துருத்தல்கள் ..

விடிந்துவிடாதா ..
இது முடிந்துவிடாதா ...
சாதலிலும் வாழ்தல் மேல்
உன் வலிகளை சுமந்து ..

உறக்கங்களுடன்
எந்த உடன்பாடும்
நிறை பெறவில்லை
தனிமைகளின் நீள்தல்
தன்வசமாக்கி
தொடந்தவண்ணம் ...

Monday, April 28, 2014

"பன்னீர் நதியில் கண்ணீர் புஷ்பங்கள்.."




இதழ் கடந்தும்
இனிக்கிறது உன் முத்தம்
இயல்பிழந்து
தவிக்கிறது இதயம் ..

உன் விரல்களின் விளிம்பில்
விரகம் தடவி
விளைகிறாய நகம் தீண்ட
கணுக்கள் தோறும்
ஊற்றெடுக்கிறது
பன்னீர் நதிகள் ..

விளங்க முடியாத
உன் பார்வைக்கும்
விரசம் கொள்ளவைக்கும்
உன் புன்னகைக்கும்
விலாகத உன் அன்புக்கும்
இடையில் பாய்கிறது
ஒரு மிதமான சுகந்தத்துடன் அது ..

கைசேர முடியாத காதலுடன்
கண நேரம் பிரியா நேசமுடன்
ஒரு மின்னலென
பூத்து மறைகிறது
கண்ணீர் புஷ்பங்கள் ...

அணைத்து அர்ச்சிக்க
அணுவளவு வாய்ப்பு
அற்றுப் போனாலும் - என்
கண்ணீரால் அர்ச்சிப்பேன்
மறைந்தாலும்
உனக்காய் மலர்ந்து மறையும்
உன் பாசமெனும்
பன்னீர் நதியில் அலர்ந்த
கண்ணீர் புஷ்ப்பங்கள் .

கனவு...




என் கனவுத் தொழிற்சாலையில்
கணநேர இடைவெளியின்றி
பிரசவித்து சிரிக்கிறது
உன் நினைவுக் குழந்தை ...

தூரம் தொடர்ந்த
உன் நினைவுக் கரங்களில்
தினம் ஒரு குழந்தையாய்
குழைந்து குலைந்து கிடக்கிறேன்

மையல் கொண்ட சிற்ப்பிஎன
மையம் திறந்து கொள்கிறது
உன் முத்தினை
சொத்தெனக் கொள்ள

உன் அருகாமைகள்
குறுகிய பொழுதும்
குறுகாமல் வாழும்
குன்றில் ஒளிரும்
காதல் விளக்கு.

தென்றலாக வா
உன்னை
தீண்டும் பேறு
அந்த சுடர் பெறட்டும் .

நேசம்...



வரம்பு மீறிய
உன் மீதான நேசம்
வரவழைக்கிறது
விழிகளில் மழை ...

வாழ்ந்த காதல்
வாழ்க்கைக்கும்
வாழுகின்ற
சோக வாழ்க்கைக்கும்
வாழப் போகும்
ஏக்க வாழ்க்கைக்கும்
இன்றைய கண்ணீர்
போதுமானதாக இருக்கட்டும் ...

உதாசீனங்களால்
உடைக்கப்டும் உள்ளம்
என்றும்
உயிர் வாழ விரும்புவதில்லை

உனக்கான பார்வை
உனக்கான நேசம்
உனக்கான வார்த்தை
உனக்கான முத்தம்
உனக்கான அணைப்பு
..........
உனக்கான எல்லாமே
இன்னும் உனக்காக ...
ஆனால் நீ இல்லை
எனக்காக ...

களையாத மோகம் ..




போர்வை களைந்த பின்னும்
களையாத மோகம்
கனிந்து வழிந்து
மொழிகிறது
உன் மீதான
என் ஆசைகளை ..

உறக்கங்கள் முயல்கிறது
உன் அதரங்கள்
என் அந்தரங்கங்களை
அளவிடுவதை ரசிக்க

அடிக்கடி கலையும்
உறக்க நிலைகள்
அதீதமாக அலைகிறது
உன் அருகாமையை
ருசிபார்க்க ...

ஒரு மழைத்துளிக்கு
ஏங்கும் பாலை நிலமென
உன் மதத் துளிக்காய்
ஏங்கும் மலர் மொட்டு

விரகங்கள் பகிரும்
உன் விசித்திர
புன்னகைக்கு தெரிவதில்லை
விடியும் வரை
விரதங்கள் விலைபேசப்படுவது ...

எண்ணங்களின் கேள்வி ..




விலகி போன உன்னிடம்
விலகமுடியாத என்
எண்ணங்களின் கேள்வி ..

நாம் ஸ்ருஷ்டித்த
நகர முடியாத தருணங்கள்
நரகமாகி போனதா ?

விலக முடியாத
விழிகளின் பார்வையில்
விரகம் வழிந்தொளிந்து
வெறுப்பு ஊற்று கண்டதா ..?

தவிர்க்க முடியாத
தருணமென்று
தானாய் தழுவிய கரங்கள்
தளர்வுற்று போனதா ?

வாழா இருடி என
வழவழக்கும்
வாய் தொட்டு
இதழ் அழைந்த
மோகம் தீர்ந்ததா ?

இடை படர்ந்த
இளையகரம்
இதழ் நீவும்
இதம் தொலைத்து
இறுமாந்த செயல் இன்று
இசைவிழந்து போனதேன் ?

இதழ் தீண்ட நீ வேண்டாம்
இதம் கொடுக்க நீ வேண்டாம்
இன்பம் தேட நீ வேண்டாம்
இந்த இம்மைக்கும் நீ வேண்டாம் ..

இதுகாறும் நீ இருந்த நெஞ்சை
என்ன செய்ய சொல்லிச் செல்
இதயம் அமைதி பெற
வழியுண்டா காண்கிறேன் ..

" உயிர் எங்கே ? உன்னில் உண்டா ?..




எண்ணிலடங்கும்
என் இதய துடிப்புகள்
எண்ணிலடங்கா
உன் நினைவுகளை
சுமந்து கடக்கிறது
கணங்களை ..

என்னில் வண்ணம் தெளித்த
வர்ணத் தூரிகையே
வரைந்து செல்
வருங்கால வழிகாட்டியை

தொலைவுகள் குறுகாத
நினைவுகளை மட்டும்
நிரந்தரமாய் பிரசவிக்கிறது
கருக்கொண்ட காதல்

கைகள் நீட்டுகிறேன்
இணைகின்ற விரல்களில்
பிரிவின் சுவடுகளை
எழுதி செல்கிறாய் நீ

தொலைந்து போன என்னுயிரை
தொடர்ந்தும் தேடுகிறேன்
அது உன்னில் உண்டா
திருப்பி கொடு
திருந்தாத ஜென்மம் அதை
உன் பிரிவெழுதி வஞ்சிக்க .