Tuesday, May 6, 2014

நினைவு...



உன் விலகுதல்கள்
நினைவுகளால்
நிரப்பப் படுகிறது ..
அதன் நிறைதலிலும்
வழிதலிலும்
உடைந்து சிதறுகிறது
புன்னகை பூக்கள் .

ஓர் நிலாக் கால
வெகு தூர பயணத்தில்
அமானுஷ்ய கணங்களாக
உன் பிரிவுகள் சுமந்து
நகர்கிறது பொழுது ..

அடிக்கடி
நினைவுகள்
கிள்ளிப்பார்கிறது
வாழ்தலின் நிச்சயத்தை
உன் விலகுதலிலும்
உயிர் வாழ்கிறதா என ..

உன் உறக்கங்களை
மௌனமாய் ரசிக்கிறேன்
ஒரு நிலவென நுழைந்து
நிறைகிறாய் ஒளியென ..
வரைகிறேன் உன்னை
வளைகிறாய்
என் நினைவுகளில் மட்டும் .

நிஜங்களை தொலைத்து
நினைவுகள் தேடிய பயணத்தில்
உதிரிகளாய் நிறைகிறாய்
உளமெங்கும் ..
உன் வளமெங்கும் வாழ்ந்துவிட
மனம் ஏங்கும் இவள் ....

Sunday, May 4, 2014

மோகம் --



உன்
இறுகிய அணைப்பில்
திமிறிய மார்புக்குள்
நுழைந்து நுகர்கிறாய்
நிமிர்ந்து வளைகிறது
தளிர்ந்த பென்மைகளின் மென்மை ...

இருள் சூழ்ந்த
கரு மேகம் தலைமுடிக்குள்
நுழைந்து இழுத்துக்கொள்கிறது
கரை உடைத்த மோகம் ..

வெகு நேர தாகத்தில்
வெகுண்ட வெண் குடங்கள்
மிரண்டு சிவக்கிறது
உன் வேகத்தில் ..

முகுள் கொண்ட
உன் என் மோகவெப்பத்தில்
மெழுகாகி
உருகி வழிகிறது  மோகம்

இதழ் கொண்ட தாகத்தில்
இமை கொண்டு மூடும்
விழி வரையும்
எழுதப்படாத காவியம்
தீண்டலில்
தீட்டப் படுகிறது
ஒரு மோகன சித்திரமாய் ...

Tuesday, April 29, 2014

தனிமைகள் ...



இந்த இரவின் நீள்தலில்
எங்கும் விரவிக் கிடக்கிறது
தனிமைகள் ..

இமைகள் தீண்டப் படாமலே
இழந்து கிடக்கிறது
உறக்கத்தை ..

நினைவுகள்
தொலைவுகள் நோக்கிய
அதன் பயணத்தை
இனிதே நடத்தி சோர்கிறது ..

எந்த வேளையும்
தன்னிலை மீறக் கூடிய
கண்ணிமை வழி
நீர்த்துருத்தல்கள் ..

விடிந்துவிடாதா ..
இது முடிந்துவிடாதா ...
சாதலிலும் வாழ்தல் மேல்
உன் வலிகளை சுமந்து ..

உறக்கங்களுடன்
எந்த உடன்பாடும்
நிறை பெறவில்லை
தனிமைகளின் நீள்தல்
தன்வசமாக்கி
தொடந்தவண்ணம் ...

Monday, April 28, 2014

"பன்னீர் நதியில் கண்ணீர் புஷ்பங்கள்.."




இதழ் கடந்தும்
இனிக்கிறது உன் முத்தம்
இயல்பிழந்து
தவிக்கிறது இதயம் ..

உன் விரல்களின் விளிம்பில்
விரகம் தடவி
விளைகிறாய நகம் தீண்ட
கணுக்கள் தோறும்
ஊற்றெடுக்கிறது
பன்னீர் நதிகள் ..

விளங்க முடியாத
உன் பார்வைக்கும்
விரசம் கொள்ளவைக்கும்
உன் புன்னகைக்கும்
விலாகத உன் அன்புக்கும்
இடையில் பாய்கிறது
ஒரு மிதமான சுகந்தத்துடன் அது ..

கைசேர முடியாத காதலுடன்
கண நேரம் பிரியா நேசமுடன்
ஒரு மின்னலென
பூத்து மறைகிறது
கண்ணீர் புஷ்பங்கள் ...

அணைத்து அர்ச்சிக்க
அணுவளவு வாய்ப்பு
அற்றுப் போனாலும் - என்
கண்ணீரால் அர்ச்சிப்பேன்
மறைந்தாலும்
உனக்காய் மலர்ந்து மறையும்
உன் பாசமெனும்
பன்னீர் நதியில் அலர்ந்த
கண்ணீர் புஷ்ப்பங்கள் .

கனவு...




என் கனவுத் தொழிற்சாலையில்
கணநேர இடைவெளியின்றி
பிரசவித்து சிரிக்கிறது
உன் நினைவுக் குழந்தை ...

தூரம் தொடர்ந்த
உன் நினைவுக் கரங்களில்
தினம் ஒரு குழந்தையாய்
குழைந்து குலைந்து கிடக்கிறேன்

மையல் கொண்ட சிற்ப்பிஎன
மையம் திறந்து கொள்கிறது
உன் முத்தினை
சொத்தெனக் கொள்ள

உன் அருகாமைகள்
குறுகிய பொழுதும்
குறுகாமல் வாழும்
குன்றில் ஒளிரும்
காதல் விளக்கு.

தென்றலாக வா
உன்னை
தீண்டும் பேறு
அந்த சுடர் பெறட்டும் .

நேசம்...



வரம்பு மீறிய
உன் மீதான நேசம்
வரவழைக்கிறது
விழிகளில் மழை ...

வாழ்ந்த காதல்
வாழ்க்கைக்கும்
வாழுகின்ற
சோக வாழ்க்கைக்கும்
வாழப் போகும்
ஏக்க வாழ்க்கைக்கும்
இன்றைய கண்ணீர்
போதுமானதாக இருக்கட்டும் ...

உதாசீனங்களால்
உடைக்கப்டும் உள்ளம்
என்றும்
உயிர் வாழ விரும்புவதில்லை

உனக்கான பார்வை
உனக்கான நேசம்
உனக்கான வார்த்தை
உனக்கான முத்தம்
உனக்கான அணைப்பு
..........
உனக்கான எல்லாமே
இன்னும் உனக்காக ...
ஆனால் நீ இல்லை
எனக்காக ...

களையாத மோகம் ..




போர்வை களைந்த பின்னும்
களையாத மோகம்
கனிந்து வழிந்து
மொழிகிறது
உன் மீதான
என் ஆசைகளை ..

உறக்கங்கள் முயல்கிறது
உன் அதரங்கள்
என் அந்தரங்கங்களை
அளவிடுவதை ரசிக்க

அடிக்கடி கலையும்
உறக்க நிலைகள்
அதீதமாக அலைகிறது
உன் அருகாமையை
ருசிபார்க்க ...

ஒரு மழைத்துளிக்கு
ஏங்கும் பாலை நிலமென
உன் மதத் துளிக்காய்
ஏங்கும் மலர் மொட்டு

விரகங்கள் பகிரும்
உன் விசித்திர
புன்னகைக்கு தெரிவதில்லை
விடியும் வரை
விரதங்கள் விலைபேசப்படுவது ...