Saturday, December 28, 2013

பரிதவிப்பு..


****
ஊன் தடவும்
மெல்லிய தென்றலில்
உன் சுகம் தேடி
சலிக்கிறது எண்ணப் பறவை ..

இருதயத்தில் கருக்கொள்ளும்
எண்ணற்ற ஆசைக் குழந்தை
உதடுகளில்
குறை மாதக் குழந்தையென
பிறப்பெடுத்து
பெரிதும் தவிக்கிறது
அதன் குறை களைந்து
நிறை பகிர ...

பிரிய முடியாத குறை நிமிடங்கள்
பகிர முடியாத ஒன்றை
தினம் சுமக்கிறது
பரிச்சயமான
பாதசுவடுகளின்
பள்ளங்களில்
வீழ்ந்து அமிழ்கிறது
ஒற்றை ரோஜா இதழ்கள் ..

உன் சிரிப்பில் சிக்கிவிடும்
சிறு சிந்தனை நரம்புகள் எங்கும்
மோகத்தை
நிரப்பி வழிகிறது உன் புன்னகை ...
கடந்துவிட துடிக்கும்
கால்கள் இரண்டை
கட்டிக் கொள்கிறாய்
சிறு குழந்தை என ...
காணாமல் போய்விடுகிறது
எண்ணங்கள் ...

சிதறிய முத்துக்களை
எடுத்து வைக்க
எத்தணிக்கும்
சிப்பிக்கு தெரியாது
சிப்பிக்குள் முத்தல்ல
சிப்பிக்குள் வைரம் ஒன்று
தெரியாமல் குடி கொண்டது ...

நீளும் கைகளுக்குள்
நெருங்கும் உன் மனது
உதடுகளை கொண்டு
கடிவாளம் இடுகிறது
உன்னதமான உறவொன்றை சொல்லி
உள்ளத்தின் தவிப்புகள்
உடைப்பெடுக்கு முன்
உறங்கி விடு
விடிவதற்குள்
ஏதாவது ஆகலாம் ...

No comments:

Post a Comment