Friday, May 17, 2013

சலன அலைகள்

 
எங்கோ ஒரு துளி
உடையும் ஓசையில்
உன்னை பற்றி படர்திருந்த
என் எண்ண குளத்தின்
சலன அலைகள் வளையங்களாய் ...

அன்று நீ இருந்தாய்
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க
இன்றும் இருக்கிறாய்
வண்ணமிழந்த எண்ணங்களாக ..

எனை கடக்கும்
தென்றலிடம் தேடினேன்
உன் சுவாசங்களை
என்னுள்ளே அவை
புயலாய் வீசிக்கொண்டிருப்பதை அறியாமலே ...

எங்கோ நிலை கொள்ளும்
என் பார்வை வட்டத்துள்
உன் சிரித்த முகம் ,
அது சிலிர்ப்பை ஊட்டினாலும்
உன் இன்னமையை
என்றோ உணர்ந்த இதயம்
இயல்பாகவே துடிக்கிறது .
இருந்தும்
உறை பனிபோல்
மாற்றவும் தயங்கவில்லை .

ஒரு சூரிய பார்வையின்
தீண்டலுக்காய்
தினமும் அது காத்திருக்கிறது
ஏக்கங்களை சுமந்தபடி .

Monday, May 13, 2013

முதல் கரு

 

அவள் கருவுற்றிருந்தாள்
கல்யாணமாகி கால் மாதத்தில்
அவள் கருக்கொண்டு விட்டாளாம் .
கணவன் முகத்தில் சாதித்துவிட்ட பெருமை
அவள் முகத்தில் எதோ ஒரு நின்மதி .

முதல் கரு
அவள் முகமெல்லாம் பூரிக்க வேண்டுமே
ஒரு பூவின் கட்டவிழ்தல் போன்ற புன்னகை மட்டுமே ,
ஒரு மலரின் மலர்ச்சியை மறந்தும் காணவில்லை .

முகமறியா கணவன் தொடுகையில்
அவள் முழுவதும் மலராத பொழுது
சூல் கொண்ட கரு
சுகத்தை அளிக்குமா ...?
அடுத்த பத்து மாதத்தில்
ஆண் வாரிசு வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி
அறியாமலே அச்சுறுத்தும்
அத்தையம்மாள் பேரில்
அரண்டு உருவான கரு
ஆத்மார்த்தமாய் இருக்குமா ?

பெண்மையின் முழுமையையும்
ஆண்மையின் முழுமையும்
ஆதாரப்படுத்த அகல் கொண்ட கரு தீபம்
அகத்தில் ஒளி வீசுமா ?

அவனையும் புரியவில்லை
அவர்களையும் புரியவில்லை
அதற்குள் அவள் கொண்ட சூல்
ஆறுதலை கொடுக்குமா ?
இயற்கையின் தேடுதலில்
இணைந்துவிட்ட இருடலின்
கலவி கடலில் தவறி விழுந்த துளி ஒன்று
முத்தான அதிசயம்
ஆவலைத்தான் தூண்டுமா ?

முதல் கரு ஒன்று
அதை சுமப்பவளை சுமை தாங்கியாகும்
ஆண் பிள்ளை பெறவேண்டும்
அது அவன் , அவர்களைபோல் வேண்டும்
தன் பிள்ளை என்று சொல்ல
தக தகவென மின்னவேண்டும் ..
கூன் குருடு செவிடு நீங்கி
குறையற்று பெறவேண்டும்
குலப்பெருமை காக்க
குறுகிய காலத்தில் குட்டிதனை ஈண வேண்டும் .

அவள் ஆசையாய் கருக் கொள்வதில்லை
அவசியத்தில் கருக் கொள்கிறாள்
ஆண்மையின் பரீட்சார்த்தமும்
பரம்பரையின் பீற்றல்களும்
அவளை அவசியத்துக்கு சூல் கொள்ள வைக்கிறது .
இருந்தும் அவள்
அடுத்த நிமிசத்தில் இருந்தே அன்னையாகிறாள் .

அம்மா

Photo: அம்மா 
********

ஆசை கட்டிலில்  பிறந்த
பாச தொட்டில்
உன் புன்னகை எனும்
நட்சத்திரங்களால் மினு மினுக்கும்
உன் அணைப்பு எனும்
போர்வையினால் கத கதகதக்கும்
உன் ஸ்பரிசம் எனும்
தீண்டலினால் கிளுகிளுக்கும் .
ஒவொரு உச்சி முகர்தலினால்
உயிர் பெற்று ஆடும் .

ஐயிரு திங்கள் சுமந்து
அமாவாசையை பெற்றெடுத்தாலும்
பல பவுர்ணமிகளின் ஜொலிப்பு
உன் பாச முகத்தில் தக தகக்கும் .
பெற்றது பேடாகினும்
என் பெண்ணென்று பெருமை கொள்ளும்
முதல் ஜீவன் நீ .

கற்றது கையளவு ஆகினும்
நீ பெற்றது பெரியதென்று போற்றும்
உன் உத்தம உள்ளம் கண்டு
உருகிடும் உள்ளம் நன்று .
சித்தனாய் , புத்தனாய்
எத்தனாய் வரினும்
பெத்தவள் நானென்று
பேசி மகிழும் உள்ளன்பு .

கோபங்கள் நீ பெறினும்
பசியென்று உரைக்கும் ஓர் கணத்தில்
பறந்திடும் உன் கோபம் முன்னில்
பல காலத்திற்கும் நான் குழந்தையே .
பாசமிகு அன்னையே
உன் பண்புகளில் ஒன்று கொடு
பார்புகழ வாழ்ந்துவிட . 


ஆசை கட்டிலில் பிறந்த
பாச தொட்டில்
உன் புன்னகை எனும்
நட்சத்திரங்களால் மினு மினுக்கும்
உன் அணைப்பு எனும்
போர்வையினால் கத கதகதக்கும்
உன் ஸ்பரிசம் எனும்
தீண்டலினால் கிளுகிளுக்கும் .
ஒவொரு உச்சி முகர்தலினால்
உயிர் பெற்று ஆடும் .

ஐயிரு திங்கள் சுமந்து
அமாவாசையை பெற்றெடுத்தாலும்
பல பவுர்ணமிகளின் ஜொலிப்பு
உன் பாச முகத்தில் தக தகக்கும் .
பெற்றது பேடாகினும்
என் பெண்ணென்று பெருமை கொள்ளும்
முதல் ஜீவன் நீ .

கற்றது கையளவு ஆகினும்
நீ பெற்றது பெரியதென்று போற்றும்
உன் உத்தம உள்ளம் கண்டு
உருகிடும் உள்ளம் நன்று .
சித்தனாய் , புத்தனாய்
எத்தனாய் வரினும்
பெத்தவள் நானென்று
பேசி மகிழும் உள்ளன்பு .

கோபங்கள் நீ பெறினும்
பசியென்று உரைக்கும் ஓர் கணத்தில்
பறந்திடும் உன் கோபம் முன்னில்
பல காலத்திற்கும் நான் குழந்தையே .
பாசமிகு அன்னையே
உன் பண்புகளில் ஒன்று கொடு
பார்புகழ வாழ்ந்துவிட .

Friday, May 3, 2013

புத்தனும்


 photo 521640_353436081420018_1410293788_n_zpsf31a2b9d.jpg 

மோகத் தீயின்
முழுவதுமாய் பிறழ்ந்து
பிறந்த பிறை நிலவென
ஜொலிக்கும் அவள் மேனியின் கீற்றில்
மிதந்து வரும் மெல்லிய ஒளிக் கற்றை
அவள் விம்பத்தை விரகமாக்கி செல்லும் .

காற்றின் திசைக்கு
அசையும் கற்றை கூந்தலின்
கவர்ச்சி விரிப்பில்
ஒளிந்திருந்த உணர்வு பறவைகள்
விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்க துடிக்கும் .

அவள்  வெம்மையில் உருகும் தங்கமென
ஒற்றை துளியொன்று உருவெடுத்து
பிறையென வளைந்த நெற்றியில்
ஒரு கறையென கருக்கொண்டது
காதல் வேள்வியில் ஜொலிக்கும்
இருவிளியிரண்டும் மீன் விழியென
மினு மினுக்கும் .
வில்லென வளைந்த புருவம் தன்னில்
காதல் அம்பென ஒரு ஒற்றை ரோஜா போர் தொடுக்கும் .

வாய் சிவப்பா அன்றில் பூ சிவப்பா
பெண்மை தான் சிவப்பா ..

சங்கென நீளும்
செவிய கழுத்து தொட்டு இறங்கும்
பொன்கல  மாலை ஒன்று
புண்ணியம் செய்ததோ
இவள் கொங்கைகள் தான் தடவி
கொளுப்பென்று கிளு கிளுக்கும் .

வெண்டையென நீளும்
சுட்ட தந்ததின் பழுப்பில்
நர்த்தனமிடும் விரல்  இடுக்கில்
உயிர் சிக்கி  தவிக்கும் .
நூல் கொண்டு தாங்கும்
இடை தோல் கொண்டு போர்த்தும்
ஆடை ஒன்றின் நூல் விடுதலைக்காய்
அலையும் மனது அடம்  பிடிக்கும் .

அவள் அங்கங்கள் யாவும் தங்கமயம்
அதன் விம்பங்கள் யாவும் இன்ப மயம்
பிரம்மன் தேன் சுவைத்து தீட்டிய கன்னியவள்
ஒரு மோகத்தின்  போகம் .

ஆரத் தழுவும் ஒரு அக்டோபஸ் என அவயங்கள்
ஒரு கலவி முடிதலில் ஆதாமும் ஆகலாம்
இல்லை கனி தவிர்த்து ஆத்மாவினால் நீ புத்தனும் ஆகலாம் .

Tuesday, April 30, 2013

யுக யுகமாய்

 

யுக யுகமாய்
உன்னிடம் பரிமாறிக் கொள்வதற்காகவே
உள்ளக் கிடக்கைகளை
உதடு உளறிக் கொள்ளும் பல வேளைகளிலும்
மெல்ல துளிர்த்து
மேனியெங்கும் வியாபிக்கும்
உன் எண்ண அலைகளுக்குள்
சிக்கி மௌனிக்கிறது நெஞ்சம் .

உன் கனவுக் கலவியுடன்
கண் விளிக்கும் என் காலைகள்
ஏதோ களிப்புடன்தான் மிளிர்கிறது
கடந்து செல்லும் பால் கார சிறுவனிடம்
ஏதோ ஒரு பாசம்
உன் பெயரில் அவன் வாழ்வதனாலோ ?

கண் சிமிட்டும் கடிகார முட்கள்
காதலுடன் கூடும்
ஒவ்வொரு மணித் துளியும்
கனக்கும் உன் காதலை சுமந்து

உன் ஒரு புன்னகையில் பூத்த என் உலகம்
இதழ் உதிர்ந்து இருள் கவிந்து கொள்கிறது
நீ இல்லாத இந்த பொழுதுகளில் நுழைந்து

தினமும் ஒரு மடல் வரைகிறேன்
உன்னிடம் கொடுப்பதற்காய்
உமிழும் பேனாவின் குமிழ் முனைகளில்
ஒட்டிக் கொண்டு பிரிய மறுக்கிறது என் பிரியம்
தொலைந்த உன்னை தேடி தவிக்கிறது என் எழுத்தும்
எங்கோ நீ எழுதும் காவியத்துக்கு
இங்கே நான் முகவுரை எழுதுகின்றேன்
முடிவுரை எழுத முடிவுகள் கொண்டாலும்
உன் முகம் வந்து முழுவதுமாய் சிரிக்கும் பொழுது
முடிந்துவிடுகிறது என் முடிவின் ஆயுள் .

யுக யுகமாய் உன்னிடம் பரிமாறிக் கொள்வதற்கே
உருகி உமிழ்ந்து உரு மாறுகிறது என் நினைவுகள் ...

Tuesday, April 23, 2013

மெழுகு

 


தன் ஜீவிதம் அழிவதற்காக
எந்த மெழுகு திரியும்
கவலைப் படுவதில்லை
தான் உருகி
தனை ஏற்றியவனுக்காகவே
உருகி ஒளியை பிரசவித்து
பிரவகித்து மடிகிறது .

உருகும் மெழுகின்
கொதிக்கும் வெம்மை என
மனதின் ஓரங்களில்
வெறுப்பு விரக்தி  மிருகத்தனம்
எல்லாம் தக தகக்கும் அவ்வேளையிலும்
என்றோ ஏற்றப்பட்ட மெழுகு
அதன் கடமையை நினைந்து
இன்று உருகி தீர்த்துவிட்டது .

அதன் வெம்மையில்
குளிர் காய்ந்த பட்சி ஒன்று
அதன் இணைதேடி இரை தேடி பறக்கிறது
உயிர் கொடுத்த மெழுகோ
உருகி ஒழிந்துவிட்டது .

இழப்பிலும் ஒரு
இனிய காவியம் எழதிய திருப்தியில்
உருகிய மெழுகும் அதன் மென்மையும்
விடை பெறுகிறது .

Sunday, April 21, 2013

பயணம்

 
உடைந்து சிதறும்
என் உள்ள கனவுகள்
உணர்விழந்து
உரிமை துறந்து
ஒருக்களித்து துடிக்கிறது

இந்த இரவு
வராமலே போயிருக்க கூடாதா
இந்த உணர்வு
என்னை தொடாமலே போயிருக்க கூடாதா
யாருமற்ற பாலை நிலத்தில்
எறியபட்ட பூவென கிடக்கிறேன்
என் நீரெல்லாம்
உன் நினைவுகளால் உறிஞ்சப் பட்டு
உமிழப்படுகிறது

என்ன செய்வாய் இந்நேரம்
எதிரே இருப்பவள் இன்பத்தில் இருப்பாளா
உன்னை இழந்து உணர்வை கொடுப்பாயா
என்னை மறந்து இயைந்து இணைவாயா
சொல்லிவிடு
மரண சாசனத்தில் உனக்கான
மறக்கபடாத தண்டனை ஒன்றை நான் எழுத .

உன் உதடுகளின் ஒற்றுதலுக்காயும்
உன் கரங்களின் அத்து மீறலுக்காயும்
ஆன்மாவின் கலவிக்காய்
அத்து மீறி என் இதயம் துடிக்கும் இதே வேளையில்
அனைத்தையும்
இன்னொருத்திக்கு என் சமதமின்றியே
தாரை வார்கின்றாயா ..?

உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு
முற்றுப் புள்ளி தேடி மூச்சு திணறி தவிக்கின்றது
நீ இருந்த இதயம் உன் நினைவு சுமந்த இதயம்
வெளிநடப்பு செய்கிறது ..இன்னும் உன்னை நினைகின்றேனாம் .
முடிந்துவிட்ட காதல் பயணத்தின்
முகாரிகள் இன்னும் முனகியவண்ணம் மனக்கூட்டில் .

என் காதல் இறுதி பயணத்தின் பிரியாவிடை கொடு
முத்தத்தால் வேண்டாம்  அது எச்சில்
முடிந்தால் என் நினைவுகளை எரித்து .
முடிந்துவிடும் பயணம் .