Wednesday, July 17, 2013

வலி



 
வழி எங்கினும்
முறிந்து தொங்கிய வண்ணம்
இன்னும் அதன்
பச்சை படர்ந்த கிளைகள் ..
அதன் இருப்பின் இழப்பை
நிச்சயித்து ஓங்கி வளர்கிறது மரம் ..

பல நிச்சயங்கள்
பல பரீச்சயங்கள்
இழப்புகளின் முகவரியில்
எழுதிச் செல்கிறது
வலிகளின் வரிகளை ..

நேற்றுவரை அருகருகே இருந்து
அனைத்து கதைகளையும்
பேசி மகிழ்ந்த
அந்த மரத்தின் கிளை
தன் பிரிவின் தழும்புகளை
அந்த மரத்தில் எழுதிச் செல்ல
எந்த நொடியும் காத்திருக்கிறது ..
பிரிக்க முடியாத
பிரிக்க விரும்பாத
அதன் இருப்பு ஏனோ
பார்பவருக்கு எல்லாம்
பரிகாசமாய் இருந்தாலும்
பற்றுக் கொண்ட கிளைக்கு
அது கொண்ட பாசம் மட்டுமே வலிக்கிறது ...

உதிர்ந்து விட ஒவொரு கணமும்
உருக் குலைந்து உருகும் கிளை
அதன் உளம் கவர்ந்த மரத்தினுக்கே
உக்கி உரமாக காத்திருக்கிறது
அதன் உளம் கவர்ந்த உயிருக்காய் ..

புனிதம் ..


Disabled child in a wheelchair 
 
வான்வெளியின் வண்ணங்களை
வாரித் தழுவும் மேகங்களை
ஊன் தடவும் பேறு பெறவில்லை
எனினும் பெங்குவின் சாதனைப் பறவை ..

ஓங்கி வளர முடியாத பொழுதும்
ஒரு கிளை பிடித்து தான் பரவி
தளிர்திடும் முசுட்டை கொடுக்கும்
பல நோய் நிவாரணி ..

ரெட்டைக் கிளையோடு பிறந்த பனை
பழம் தரத் தவறியதில்லை
ஓட்டிபிறந்த வாழை
சுவை தர மறுத்ததில்லை

மாறுதல்களோடு காணும்
மனிதன் வணங்கும்
இறைவனும் சிங்க முகனாம்
மச்ச அவதாரமாம்
அவர்கள் எச்சங்களாய் பிறந்த
எம்மவர் எல்லாம்
இறைவன் அன்றோ ..

புலன் ஒன்று இழந்து
புறம் தன்னில் தவழ்ந்தாலும்
புலனெங்கும் அறிவு மயம்
இவர்கள் அகம் எங்கும் அன்பு மயம் .

இழந்தவைகளை நினையாது
இருப்பவைகளை வாரி வழங்கும்
இவர்கள் இருதயம் வேண்டும் ..
கறை ஒன்று படியாது கரம் கொண்டு
தலை நீவும் கணம் ஒன்று
இவர்கரம் தன்னில் பெற வேண்டும் ..

மழை நீர் காணா
புனிதம் இவர் கண்ணீர்
மனம் தான் சோர்வுறா
தீரம் இவர் நெஞ்சம் ..
இறைவன் குடியிருக்கும்
இனிய ஆலயம் இவர்கள் இதயம்
ஒருமுறை உட் புகுந்து பார்
எங்கும் காணா
இனிமையும் அமைதியும்
இயல்பில் இணைந்திடும் .

உன் தோழியாக நான்




ஒவொரு நிமிடத்தையும்
நீ எனக்காகவே செதுக்குகின்றாய்
உன் பக்கங்கள்
புரட்டப் படும்போதெல்லாம்
என் பாதிப்பின் வடுக்கள் பதுங்குகிறது
எட்டி நின்று கை குலுக்கும்
என் எண்ண அலைகளை
சட்டென்று கட்டிப் போடுகிறாய்
ஒரு புள்ளியில் .

எதற்கும் அடங்காத
குதிரையின் கடிவாளங்கள்
உன் கைக்கு சொந்தமாகவேண்டும் என
உன் ஒவ்வொரு நகர்விலும்
உணர்த்துகிறாய் ..

எனக்காக சுவாசிக்கும்
எனக்காக வாசிக்கும்
எனக்காக வசிக்கும்
உன் எண்ணங்களுக்கு சொந்தமாக
ஒரு வண்ணக் கிளியை தேடுகிறேன்
உன்னை வட்டமடிக்க
உன் வளங்களை வாரி கொள்ள

எத்தனை காலம்
என் இதயத்தின் அருகில்
காவல் இருப்பாய்
இரவல் கேட்கிறார்கள்
கொஞ்சம் இளைப்பாறி போக ..
கிளைகளற்ற மரம் இது
கிள்ளைகள் பாடா மரமிது
கிளர்சிகளில்லா அசைவிது
இருந்தும் ஒரு பாலைவனத்தின்
பாதுகாக்கும் காவல் என நீ

எனக்காக காவல் காக்கிறாய்
எனக்காக கண்ணீர் சிந்துகிறாய்
எனக்காக கற்பனை காண்கிறாய்
இது எதற்கும் தகுதிகள் அற்றவளாய்
உன் தோழியாக நான் .
 
 

Monday, May 27, 2013

வலி

யாரும் அற்ற
ஓர் பாலை நிலத்தில்
நடக்கிறேன்
எதிரே தெரியும்
நீர் அலைகள் கண்டு
ஒரு கணம் தாகம் கொள்கிறது மனது ...

இருந்தும் கடந்து வந்த
பாலையின் வெம்மையில்
கருகி சிவந்து
பல கான ல்களை கண்டதால்
கணத்தில் ஒதுங்கி கொள்கிறது
கானல் நீரில் மையல் மனது .

சுட்டெரிக்கும்
சுள்ளென்ற சூரியக் கதிர்கள்
என் சுகங்களையெல்லாம்
சுரண்டி உறிஞ்சிய பொழுது
சுருங்கி விடாமல்
தொடர்கிறேன் பயணத்தை

எங்கிருந்தோ ஒரு காற்று
என் இதயக் கதவை
நெகிழ்த்திவிடும் நோக்கத்தில்
பலமாக அடித்து ஓய்ந்தது
அதன் விரக்தியில் விழுந்த
ஒரு சருகு
பிளந்து சென்றது இதயக் கதவை
பிளிர்ந்து வழிந்தது
சட்டென குருதி
மீண்டும் அதே வலிகளை நினைந்து .

இருப்பு

உன் நினைவு சுமந்து
உன் காந்தப் புலங்களை தேடி
கடந்து நகர்கிறது காடுகளை புலன்கள்

கண்ணெட்டும் தூரம் வரை
கரைந்து சிதறும் பனிச் சிதறல்களின்
ஊசிக் கரங்கள் உள் நுழைந்து
உறையத் துடிக்கிறது .
உன் நினைவெனும் நெருப்பு
நீங்காது ஒளிர்வதால்
உறையாது உன்னை தேடுகிறேன் .

காற்றின் திசைக்கு
கடக்கும் ஒவொரு கணப் பொழுதிலும்
உன் வாசத்தை தேடும் சுவாசம்
வஞ்சித்து வருகிறது பெரு மூச்சாக .

ஊசிக் காடுகளின்
ஊசிப் பனிக் கதிர்கள்
உன்னை விடவா
என் உணர்வை பந்தாடிவிடும் ?

தொலைந்து போன
உன் பாத சுவடிகள்
பார்வைக்கு எட்டாது இருக்கலாம்
கடந்து செல்லும் காடுகள் கூட
உன் இருப்பை காட்டாது மறைக்கலாம்
நகந்து செல்லும் பொழுதுகள் கூட
உன் நிழல்களை நெடுஞ தூரம் நகர்த்தலாம்
ஆனால் உன் நினைவு சுமக்கும்
என் இதயம் சொல்லிவிடும்
உன் இருப்பை

Friday, May 17, 2013

சலன அலைகள்

 
எங்கோ ஒரு துளி
உடையும் ஓசையில்
உன்னை பற்றி படர்திருந்த
என் எண்ண குளத்தின்
சலன அலைகள் வளையங்களாய் ...

அன்று நீ இருந்தாய்
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க
இன்றும் இருக்கிறாய்
வண்ணமிழந்த எண்ணங்களாக ..

எனை கடக்கும்
தென்றலிடம் தேடினேன்
உன் சுவாசங்களை
என்னுள்ளே அவை
புயலாய் வீசிக்கொண்டிருப்பதை அறியாமலே ...

எங்கோ நிலை கொள்ளும்
என் பார்வை வட்டத்துள்
உன் சிரித்த முகம் ,
அது சிலிர்ப்பை ஊட்டினாலும்
உன் இன்னமையை
என்றோ உணர்ந்த இதயம்
இயல்பாகவே துடிக்கிறது .
இருந்தும்
உறை பனிபோல்
மாற்றவும் தயங்கவில்லை .

ஒரு சூரிய பார்வையின்
தீண்டலுக்காய்
தினமும் அது காத்திருக்கிறது
ஏக்கங்களை சுமந்தபடி .

Monday, May 13, 2013

முதல் கரு

 

அவள் கருவுற்றிருந்தாள்
கல்யாணமாகி கால் மாதத்தில்
அவள் கருக்கொண்டு விட்டாளாம் .
கணவன் முகத்தில் சாதித்துவிட்ட பெருமை
அவள் முகத்தில் எதோ ஒரு நின்மதி .

முதல் கரு
அவள் முகமெல்லாம் பூரிக்க வேண்டுமே
ஒரு பூவின் கட்டவிழ்தல் போன்ற புன்னகை மட்டுமே ,
ஒரு மலரின் மலர்ச்சியை மறந்தும் காணவில்லை .

முகமறியா கணவன் தொடுகையில்
அவள் முழுவதும் மலராத பொழுது
சூல் கொண்ட கரு
சுகத்தை அளிக்குமா ...?
அடுத்த பத்து மாதத்தில்
ஆண் வாரிசு வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி
அறியாமலே அச்சுறுத்தும்
அத்தையம்மாள் பேரில்
அரண்டு உருவான கரு
ஆத்மார்த்தமாய் இருக்குமா ?

பெண்மையின் முழுமையையும்
ஆண்மையின் முழுமையும்
ஆதாரப்படுத்த அகல் கொண்ட கரு தீபம்
அகத்தில் ஒளி வீசுமா ?

அவனையும் புரியவில்லை
அவர்களையும் புரியவில்லை
அதற்குள் அவள் கொண்ட சூல்
ஆறுதலை கொடுக்குமா ?
இயற்கையின் தேடுதலில்
இணைந்துவிட்ட இருடலின்
கலவி கடலில் தவறி விழுந்த துளி ஒன்று
முத்தான அதிசயம்
ஆவலைத்தான் தூண்டுமா ?

முதல் கரு ஒன்று
அதை சுமப்பவளை சுமை தாங்கியாகும்
ஆண் பிள்ளை பெறவேண்டும்
அது அவன் , அவர்களைபோல் வேண்டும்
தன் பிள்ளை என்று சொல்ல
தக தகவென மின்னவேண்டும் ..
கூன் குருடு செவிடு நீங்கி
குறையற்று பெறவேண்டும்
குலப்பெருமை காக்க
குறுகிய காலத்தில் குட்டிதனை ஈண வேண்டும் .

அவள் ஆசையாய் கருக் கொள்வதில்லை
அவசியத்தில் கருக் கொள்கிறாள்
ஆண்மையின் பரீட்சார்த்தமும்
பரம்பரையின் பீற்றல்களும்
அவளை அவசியத்துக்கு சூல் கொள்ள வைக்கிறது .
இருந்தும் அவள்
அடுத்த நிமிசத்தில் இருந்தே அன்னையாகிறாள் .