Sunday, November 11, 2012

இருள்வானும் எழில்கொள்ள

 


 உறவுகளின் உரசல்களில்
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களை பற்றவைத்துக்கொண்டது
ஏக்கங்கள் எட்டி நின்று வதைத்தது போய்
கிட்ட வந்து ஆடை தொட்டு இழுத்தது
இடறி விழுந்து எந்திரித்த பொழுதுகளில்
எக்காளமிட்டு சிரித்து மகிழ்ந்தது
பிறள் மனது ...

மனமெங்கும் இருள் சூழ
தனமிங்கு பகையாக
கனமென்று இதயம் துடிக்க
பிணமன்று சொல்ல
பகைமார்பும் எம்பி தணிய
பிடுங்கி எறிந்த கொடியாய்
பேதை உயிருடல் சோர
ஏக்கம் கலந்த பார்வையில்
பல தேக்கம் கலந்து காத்திருந்தபோது

இருள்வானும் எழில்கொள்ள
மருள் கதிரும் உருக்கொள்ள
கருக்கொண்ட மேகம் தனை
கதிர் கொண்டு அணைததுவோ...
நீல வானும் எழில்கோலம் கொள்ள
கதிரவன் கதிர்கரம் கொண்டு
முகில் தனை புறம்தள்ள
ஒளிக்கரம் வானை தழுவுவது போல்
உள்ள இருளும் ஓடி ஒளிவதுபோல்
எங்கோ ஒரு குரல்
எட்டி தழுவியது செவிகளை
விட்டு விலகியது இருள் மட்டுமல்ல
இதயத்தின் இருப்பின்மையின்
உறுதியற்ற நிலைபாடுக்களும்தான்

No comments:

Post a Comment