Monday, April 28, 2014

மகரந்தங்கள்...





உன்னால்
புரிந்து கொள்ள முடியாத
என் பக்கங்கள்
புரட்டப் படும் பொழுதெல்லாம்
அதன் எழுத்துக்கள்
விசும்பித் தணிகிறது
விளங்கிட எத்தணிக்காத
அவசர அலட்சியங்களை உணர்ந்தா
இல்லை
விளங்கியும் வீம்பு கொள்ளும்
வெறுப்பினை சுமந்தா ...

பனி உறையும்
இந்த இராக் காலத்தின்
உறை நிலையை தாண்டிப்
பயணிக்கிறது
உன் உதாசீனங்கள்
உதடுறையும் குளிர் நகர்ந்து
உளம் உறைத்து
உள் உறையும் .

கடல் கடந்த - என்
சுவாசக் காற்றும்
உன் கனல் திறந்த
உஷ்ணம் தாளாது
நிழல் வேண்டி
மீண்டு வந்து சேர்ந்தது
திரை விலகும் நிகழ்வின் தாக்கம்
நுரை கடல் தாண்டி
நுண்ணுயிர் பிரிக்கும் ...

வசந்தகால சோலையொன்றில்
வாசம் தொலைத்த பூவொன்றில்
மலர்ந்து மடிந்தது
அதன் மகரந்தங்கள் .

No comments:

Post a Comment