Monday, April 28, 2014

வர்ணம் தொலைத்த இதயம்..



சிதறிக் கிடந்த
எண்ண வர்ணங்களை
நினைவுத் தூரிகை தடவி
கிறுக்கல் சித்திரமாக
வரைந்து நிறைந்தது
இதயச்சுவர் ..

வழிந்து உறைந்திருந்த
வசந்த கால நினைவுகள்
தூசி படிந்து
துலங்காமல் துருத்தி நிற்கிறது ..

கை நிறைத்த வெண் சிப்பிகள்
கருமை படிந்து
கலைந்து கிடக்கிறது
அதில் ஊரும்
அட்டைகளின் நகர்வுகளில்
அருவெறுப்பை
உணரா நிலை சுமந்து
கவிழ்ந்த படி அவை ...

காக்கை இறகுலர்த்தி
தெறித்த நீருக்காய்
தவம் கிடந்தது சோர்ந்த
பல செண்பகப் பறவைகள்
தம் இறகிடுங்கி
இரத்தம் கசிதிருந்தன ..

மலர் இடுக்கில்
மனம் தொலைத்த வண்டுகள்
அவை மலர் வளையமான
வாழ்வு கண்டு
மணம் தொலைத்திருந்தன ..

வானக் கூரையின்
அடர் சிவப்பில்
அமிழ்ந்து விழித்த
ஆதவன் கண்களில்
நிராசைகளோடு
ஒரு நிர்மலமும்
போட்டி போட்டவண்ணம் ..

அள்ளி தெளித்த
அத்தனை வர்ணங்களையும்
வரைந்து வழிந்து கிடந்தது
வர்ணம் தொலைத்த இதயம் .

No comments:

Post a Comment