Monday, April 28, 2014

முதிராத ஒரு குழந்தை...



முதிராத ஒரு குழந்தை
முதிர்ந்துவிட்ட தோற்றம்
கதிரான களம் தான்
காரணமோ காரியமோ ?

அழகான வெள்ளை அம்மாவின்
பாசம் எனும் கயிற்றில்
பற்றித் தொங்கும்
பால்வடியும்
பருவம் தாண்டிய மகன் ..

ஊன் வளர்ந்து
உடல் வளர்ந்து
எது வளர்ந்தென்ன
மூளை வளராத
முதிர்ந்த குழந்தை இவன் ..

ஆட்சிக் கட்டில்
இவன் ஆடல் ஊஞ்சல்
மிக்சர் தலைவர்
விளையாட்டு கொரங்கு
அன்னை கையில்
பச்சை மண்
அவர் பிடித்தால்
பிள்ளையாரும் இவன் தான்
தொல்லைகளும் இவன்தான் ..

காந்தி பரம்பரையில்
ஒரு சாந்தியை தொடாத
சத்திய புருஷனாம்
தந்தை இழப்புக்கு
ஒரு சந்ததியை காவுகொண்ட
அகிம்ஷா புருஷர்
காந்தி வழித் தோன்றலடா

இத்தாலிக்கு இந்தியாவை
இரவோடு இரவாக
கைமாற்றும் காலம் வரும்
அன்று ..
இன்று கால் பிடிக்கும்
காங்கிரஸ் அறியும்
துரோகத்தின் வாதை .

அவனறியா உலகமிது
அம்மா சொல்தான்
மந்திரமது ..
அவனுக்கும் தெரியவில்லை
தாய்ப்பாசம்
பேய்க்கு கிடையாதென்று ..
நீயும் வெடித்து சிதறலாம்
ஆனால்
வீண்பழி சுமக்க
வீரர்தான் இல்லை ...

இந்த இரவு ..

 
 
இந்த இரவு
என்னால்
சபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது

எதற்குமே பயன்படாத
ஏதோ ஒன்றைப் போல்
யாராலும் தீண்டப் படாத
இன்னொன்றைப் போல்
முகம் சுழிக்கப் படும்
நிலையை ஒத்திருக்கிறது
நிகழ்வுகள் ..

அன்பு பாசம்
காதல் காமம்
எல்லாம் கடந்த
நிலையொன்றா என்றால்
எதற்குமே பதில் இல்லை

ஒதுக்கமா
ஒதுங்கலா
விலகலா
வீண் பிடிவாதங்களா
வீணான கற்பனைகளா
எதுவாக இருந்த பொழுதும்
இந்த இரவு
என்னால் சபிக்கப் படுகிறது ..

வர்ணம் தொலைத்த இதயம்..



சிதறிக் கிடந்த
எண்ண வர்ணங்களை
நினைவுத் தூரிகை தடவி
கிறுக்கல் சித்திரமாக
வரைந்து நிறைந்தது
இதயச்சுவர் ..

வழிந்து உறைந்திருந்த
வசந்த கால நினைவுகள்
தூசி படிந்து
துலங்காமல் துருத்தி நிற்கிறது ..

கை நிறைத்த வெண் சிப்பிகள்
கருமை படிந்து
கலைந்து கிடக்கிறது
அதில் ஊரும்
அட்டைகளின் நகர்வுகளில்
அருவெறுப்பை
உணரா நிலை சுமந்து
கவிழ்ந்த படி அவை ...

காக்கை இறகுலர்த்தி
தெறித்த நீருக்காய்
தவம் கிடந்தது சோர்ந்த
பல செண்பகப் பறவைகள்
தம் இறகிடுங்கி
இரத்தம் கசிதிருந்தன ..

மலர் இடுக்கில்
மனம் தொலைத்த வண்டுகள்
அவை மலர் வளையமான
வாழ்வு கண்டு
மணம் தொலைத்திருந்தன ..

வானக் கூரையின்
அடர் சிவப்பில்
அமிழ்ந்து விழித்த
ஆதவன் கண்களில்
நிராசைகளோடு
ஒரு நிர்மலமும்
போட்டி போட்டவண்ணம் ..

அள்ளி தெளித்த
அத்தனை வர்ணங்களையும்
வரைந்து வழிந்து கிடந்தது
வர்ணம் தொலைத்த இதயம் .

விடி வெள்ளி...

 
 
 
மினுக் மினுக்கென
மின்னும்
அமாவசை இரவின்
விண்மீன்களை
மல்லார்ந்து
மனக்கணக்கு போடும்
மூளைக்கு ஏனோ
அந்த இரவின் விடியல்கள்
விரும்பப் படாததாக இருந்தது ...

மூடுவதும் திறப்பதுமாக
நித்திரா தேவியுடன்
சண்டையிட்டு
சலித்துக் கொண்டிருந்தது
கண் இமைகள் ...

எழுதிய தேர்வுக்கான
மதிப்பெண்களை
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்
மாணவனைப் போன்றதா இந்த உணர்வு
இல்லை...
தேர்வுதான் எழுதப்படவில்லையே ..
அப்போ
அதிசுவை மிட்டாய் ஒன்றை உண்ண
அனுமதிக்காக காத்திருக்கும்
ஐந்துவயது சிறுவனை ஒத்ததா இந்நிலை ...
உலை நிலை மன நிலை
இரவின் பிடியில்
ஒருவரும் துணையிலை ..

ஒருக்களித்துப் படுத்தவன் கண்களில்
சிறு காற்றில் அசைந்த
ஒற்றைச் சுடர் தீபம்
ஓயாத அதன் போராட்டம்
இன்னும் தீராது தொடர்வது
திடம் ஒன்றை தந்தது ..

ஒரு நாளிகை வாழவே
ஒரு தீபம் போராடும் பொழுது
ஓராயிரம் நாளிகை தாண்டி வாழ
ஒருநாளாவது போராட வேண்டாமோ ...

மல்லார்ந்த கண்களில்
மீண்டும் விண்மீன்கள் படையெடுப்பு
அதில் விடி வெள்ளி ஒன்று
புதிதாய் முளைத்திருந்தது ..
விடியலை நோக்கி ...

மகரந்தங்கள்...





உன்னால்
புரிந்து கொள்ள முடியாத
என் பக்கங்கள்
புரட்டப் படும் பொழுதெல்லாம்
அதன் எழுத்துக்கள்
விசும்பித் தணிகிறது
விளங்கிட எத்தணிக்காத
அவசர அலட்சியங்களை உணர்ந்தா
இல்லை
விளங்கியும் வீம்பு கொள்ளும்
வெறுப்பினை சுமந்தா ...

பனி உறையும்
இந்த இராக் காலத்தின்
உறை நிலையை தாண்டிப்
பயணிக்கிறது
உன் உதாசீனங்கள்
உதடுறையும் குளிர் நகர்ந்து
உளம் உறைத்து
உள் உறையும் .

கடல் கடந்த - என்
சுவாசக் காற்றும்
உன் கனல் திறந்த
உஷ்ணம் தாளாது
நிழல் வேண்டி
மீண்டு வந்து சேர்ந்தது
திரை விலகும் நிகழ்வின் தாக்கம்
நுரை கடல் தாண்டி
நுண்ணுயிர் பிரிக்கும் ...

வசந்தகால சோலையொன்றில்
வாசம் தொலைத்த பூவொன்றில்
மலர்ந்து மடிந்தது
அதன் மகரந்தங்கள் .

அலர்ந்த மலர்..




அந்த வனாந்தரத்தின்
எழில் கொழித்த
சோலை ஒன்றின்
மெல் மாலைப் பொழுதின்
ரம்மியங்களை
இழுத்து ஆடையென
சூடியிருந்த
கொன்றை மர நிழல்கூடில்
அன்றிலாய் இணைந்திருந்த
கரம் நான்கும்
காதல் மிகுந்து
களிப்புக் கண்டிருந்த
அந்தகார பொன்மாலையொன்று,,,

மஞ்சள் பூசிய
மான் விழியால்
மன்னவன் வரவு நோக்கி
தன் எழில் குழல் கலைந்தாட
நடை பயில்வதுபோல்
மெல்லிய தென்றலுக்கு
இயைவாய் மெல்லன
தொங்கு சரம் ஆடிய பூக்களை பார்த்து
இச்சரம் மென்மையோ
என்மேல் படர்ந்திருக்கும்
இச்சரம் மென்மையோ
இவள் மேனிதான் கொன்றையொ
இவள் மேல் நீ தான் கொன்றையோ
என மனம் இச்சகம் புரிய
எக்கணமும் மீளாது
அக்கணமே அவன்
ஆய்வுகள் தொடர்ந்தது ..

ஓர் மெல்லிய சர்ப்பமென
மேனியெங்கும் ஊர்ந்த
அவன் திண்ணிய கரம் பிடித்து
போதும் என சலித்து
போதாமல் மனம் கெலித்து
மது உண்ட மலர் என
மயங்கி சரியும்
மெல்லாடை பாரம் தாங்காது
இடை துவள சரியும்
இடது கரம் அதை ஏந்தும் ...
மீறும் மதுக்கரம் தனை பிடித்து
வலக்கரம் ஏதோ கூறும்..

மெல் முகில் களைந்த
நிலவென
மோகம் குழைத்த
முக எழில் நோக்கும்
அவன் கவி மலர்க் கண்கள்
கவிகொள்ள கருத்தேடும்..
கழல் கண்ட கொலுசு
ஒற்றை தொடைகாணும்
அவன் கனிவாயும்
மலர்த்தோளில் ல் மது தேடும் ..

கருக்கொண்ட முகிலென
குழல் அவிழ்ந்தாடும்
அதில் சரம் கொண்ட மழையென
அவனவள் இதழ் தூறும் ..
சொர்க்கத்தின் தாள் திறக்கும்
சுகபோக தருணத்தில்
தேவி என்றான் ..
அத்தனையும் திகட்டிவிட
அலர்ந்த மலர் கூம்பி நின்றாள்
அவள் தேவி அல்ல ..

உயிரே உறவாடு..




நிலவொழுகும்
நடுநிஷிகளின்
நீள் கரங்களுக்குள்
நிதமும்
சிக்கித் தவிக்கும் பொழுதுகளும் ..

நீளமான உன் கரங்களுக்குள்
நிமிட நொடிகளேனும்
அடங்கிவிட துடிக்கும்
ஆசை மனது.

அணைந்து மிளிரும்
அழகிய மின் விளக்குகளென
ஒளிரும் மின்மினிகள்
உள்ளத்தில் அழகாய்
ஒழிந்து ஒளிரும்
உன் மீதான
காதல் கணங்களுடன்
போட்டியிட்டு சலிக்கிறது ...


தளிர் மேனி படும்
குளிர் தென்றல் சுடும்
உன் அருகாமைக்காய்
உள்ளம் அலைபாயும்

தணியாத காதல்
தளிர் கொண்ட மோகம்
பிரியாத ஆசை
பிறழாத நேசம்
நெஞ்சில்
கருவான உன்னை
கணம்தோறும் நோங்கும்..

வருவாய் என் உயிரே
வரம் தா உன் மனதே ..
உருகிடும் என் உயிரோடு
உயிரே உறவாடு...