Sunday, February 21, 2021

கற்பிதம் அறியாதவள் ...

 


                                                           தன்னிலை உருகி 

மெய்யது தளர்ந்து 

கையது கொண்டு 

மேகத்துகளின் 

மெய்யுனுள் மறைந்து 

மினு மினுத்து சிரிக்கிறது 

நிலவு ..

உன் மீதான என் காதலை போல ..


உன் விரல்கள் 

இடைத்தொடும் பொழுதெல்லாம் 

இதழ்கள் வேர்க்கிறது 

உன் இதழ் கொண்டு 

என்

வேர்வை துளிகளை 

துடைத்து விடுகிறாய்  ...


துடைத்துப் பிரியும் 

அவசர பொழுதுகளில் 

அவை உணர்வதில்லை 

பரிமாற்றத்தின் 

தடைப்பாடுகள்..

மீண்டும் மீண்டும் 

இதழ்கள் வேர்ப்பதாகவும் 

அதை இதழ் கொண்டு 

நீ துடைப்பதாகவும் 

பேசிக் கொள்கிறது 

சமாதானத்துக்கான 

இருதய துடிப்புகள் ...



நான் முட்டாள் என்றும் 

முத்தத்தின் 

கற்பிதம் அறியாதவள் 

என்றும் 

அடிக்கடி சொல்லிக் கொள்கிறாய் ..

மீண்டும் மீண்டும் 

நான் தெரியாதவளாகவும் 

நீ எல்லாம் தெரிந்தவனாகவும் ..


உன்னிடம் சொல்ல முடியாத 

ரகசியம் ஒன்று 

மெல்லச் சிரிக்கிறது 

எப்படி சொல்வது 

உன் இளம் சூட்டு முத்தத்தில் 

என் உதட்டு எச்சில்  

காய்ந்து கிடப்பதை ...


நழுவிச் செல்லும் 

நாணங்களை படித்து 

உன் நகர்வுகள் 

பெருகிக்கொண்டே போகிறது ..


சர்ப்பம் போல 

அது என் 

உடல் படர்ந்து 

செறிவிழந்த  கைகளில் 

கால் புதைந்து 

இந்த 

நீண்ட பெரும் வான வெளியில் 

சிதறிப்  பறக்கும்

பறவைகள் போல 

இருதயம் 

துடிக்கும் இடத்தில்  

சிதறிப்  பறக்கிறது 

உன் உதட்டு 

வரிகளில் முளைத்த 

முத்தப் பட்டாம் பூச்சிகள் ..

Monday, October 12, 2020

 



அஞ்சனம் பூசும்

அணங்கிவள்

அழகில்

அகல் விளக்கொளி

அலைந்தாடும்...


மஞ்சனம் தூங்கும் 

இவள்

இடை கொண்ட அளவில்

இவள்

மாதனம் தாங்க

ஏங்கும்


குழல் என்று

நீவின்

இவள் கூந்தல்

கொள்ளும் நறுமணம்

உனையீர்க்கும்


குந்தவையோ

குலம் காக்க

வந்தனையோ எனில்

அனல் மின்னும்

கண் வழியில்

வேல் கம்பெறியும்

ராணி மங்கம்மாவோ ..


காற்றிடையே

அசையும்

உன் குழல் இடுக்கில்

மாண்டு விட துடிக்கும்

மன்னவர் பலர்  உண்டு

எனினும்

மாதவி உன் பலத்தில்

மாண்டு விட துடித்தவர்தான்   

கோடியுண்டு...


வாள் விசையும்

விழி விசையும்

வானவில்லை கிழித்து நிற்க

காலனவன்

உன்னை கண்டு

கடுகளவு தயங்கி நிற்பான்  ..


நீ

போர்   முனையில்

புறப்படட புறா அல்ல

வாள் நுனியில்

வந்துதித்த

வல்லூறு அன்றோ ...


கால் நுனியில்

கயவர்தம்

கல் உயிர்கள் மடிந்துருக

வான் அளவி

வளர்ந்து கிடக்கும்

உன் புகழ் ..


சீழ் படிந்த இதயமதை

சீராக்க முடியவில்லை

வாள் பிடித்த உன் கரத்தில்

வந்து உயிர் போக்கி விடு ..


கானகத்தில் ஓர்

கடுகளவு தண்ணியென

உன்மேல் 

காதல் வயப்பட்டு

கொடும் களத்தில்

புலம்புகிறேன்


வேல் தன்னை

வீசி விடு

உன் விசனத்தில்

வீணாக போய்விடு முன்


உன்மத்தம் கொண்ட என்னை

உன் சொந்தம் ஆக்கிவிடு

உன் விழி முனையில்

வீழ்ந்து முடிக்கிறேன்

என் வித்தார கண்ணகியே ...

Tuesday, May 12, 2020

சருகு

இந்த

இரவுக்கும் எனக்கும்
என்ன பந்தம்..
நீண்டு கிடக்கிரது..

நினைவுகளை
கிறுக்குவதை
நிறுத்தி இருந்தேன்
பயனற்றது...

வலிகளே
உணரப் பாடத பொழுது
மொழிகளுக்கு
என்ன தேவை இருந்துவிடும்..?

நினைத்ததை
கிறுக்கும் சுதந்திரம்
நனைவுகளை கிறுக்கி
கொல்வதை விலங்கிட்டிருக்கிறது..

நீண்ட அமானுஷ்ய வெளியில்
இலக்கற்று அலைப்புறும்
காய்ந்த சருகென
கடந்து செல்கிரது காலம்...

இதையும்
கடந்து விடும் சருகு
ஓர் வேகமான காற்றோ
சாலையோர ஊர்திகளோ
கனன்று கொல்லும் தீ காங்குகளோ
இரக்கப்பட்டு உதவலாம்.

காதல்



இரவுகள்

இன்னும்
உறக்கம் கொள்வதாயில்லை..

அந்தகாரத்தின் ...
தனிமைப் பொழுதுகளை
சுவைத்துச் சுவைத்து
இருதயச் சுவர்களின்
நா வறண்டு கிடக்கிறது ..

மனக்கிடங்கில்
மரணிக்கும் தருவாயில்
உன் நினைவுக் கருக்கள் ..
உயிர் கொடுக்க முனையும்
ஒவ்வொரு தருணங்களிலும்
சில உதாசீனங்கள்
சில கோபங்கள்
சிறு முகத்திருப்பல்கள்
கருக்கலைப்பு செய்து விடுகின்றன ..

உனக்காக
புன்னகைக்க முயலும்
உதடுகளிடம்
விலை கேட்கிறாய்
வார்த்தைகள்
வறண்டு கிடக்கிறது ..

என் கோபங்கள்
என் நேசங்கள்
என் தாபங்கள்
பரிச்சயமானவை
இருந்தும்
பழக்கமற்றவையாக
உன் பரீட்சார்த்தங்களுக்கு
உட்படுத்தப் படுகிறது ..

தனிமைக்கும்
எனக்குமான பந்தம்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
அவை நிரந்தரமானவை
ஜீவித பந்தம் .
மீண்டும்
ஒரு பரீட்சார்த்த முடிவில்
எழுதிச் செல்கிறது
காதல் பொருத்தமில்லாதது

மெல்ல நழுவிடுமா காலம் ....

நிலவோடு பகலில்
ஓர் பயணமென்கிராய்..

மென் புன்னகையை
ஒப்புதலாக கொண்டு
ஓரடி வைத்தாய்...

மெல்ல நழுவிடுமா
காலம் ....

யாருமற்ற தனிமை

யாருமற்ற தனிமை

அழகாக இருக்கிரது...

பின்னிரவின்
அமைதி கிளிக்கும்
வாகன இரைச்சல் தவிர
இந்த இரவின் அழகை
எதுவும் கெடுக்கவில்லை...

எண்பதுகளின் பாடல்
சூடான தேனீர்
இதைத்தவிர
வேறெதுவும் தேவையானதாய் இல்லை..

தூக்கம் தொலைவில் இல்லை
கண்மூடினால்
அணைத்துவிடும் அளவுதான்...
இருந்தும்
இன்றைய இரவை
இழந்துவிட விருப்பமில்லை...

நிர்மலமான நினைவுகளில்
தேனீரும் இளைய ராஜாவும்..
இதயம் இளைப்பாற தொடங்கியிருக்கிரது...

சாபம்...

மழை இரவொன்றை

மன இறுக்கத்தோடு
கனந்து கடக்கிறேன்...

இருளை
அதிகம்
நேசிக்கக் கற்றுக் கொண்டவள் தான்...

அரிதாரம் கழைந்து
மனப் பறவை
சிறகுலர்த்தும்
தருணங்கள்
பின்னிரவுகள்...

யாராலும்
நேசிக்கப் படாதது
வரம்

யாவராலும்
நேசிக்கப் படுவது
சாபம்...

சபிக்கப் பட்டவர்கள் பாதையில்
பூக்கள்
என்றும் பூப்பதே இல்லை...