Monday, October 7, 2013

"தேவதைகள் மண்ணில் பிறகின்றனர்"




வான் பிளந்து
வர்ண வால் நிலவு
வடிவுகொண்டு
வந்து வாஞ்சை கொள்ளுதடி ..

சின்ன சின்ன குறும்புகள்
சிலிர்த்து பூக்கும்
புன்னகை பூக்களில்
தடுமாறி சிதறும் முத்துக்கள்
ஒவொன்றாக கோர்த்தெடுத்து
கொள்ளை கொண்ட மனதில்
கொலுவிருக்கும் உனக்கு
அலங்கரித்து மகிழ்கிறது மனது ...

இறக்கை இல்லாத தேவதை
என் இயல்போடு இணைந்திட்ட பூவை
வளைந்தாடும் சரிந்தாடும்
நுழைந்தாடும் வண்ண நிலவு

யார் சொன்னது
தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லைஎன்று
தேன்மதுர தமிழ் குழைந்து
தேன் ஒழுகும் வார்த்தைகளில்
நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும்
தேவ மொழியாம் தேவதையே .

" ஊமையாய் "




பசேல் என பரந்து விரிந்த
ஓர் பாலையின் குளிர்மை என
அந்த அமானுஷ்ய வெளி
அகத்தினுள்ளே ஒரு
அமைதியையும்
அதோ தூரத்தில் தெரியும்
ஒற்றையாய் அந்த ஒரு வீட்டின் அமைதி
மனதினுள்ளே பீதியையும்
புரளவிட்டபடி
என் எண்ணக் குளத்தின்
சலன அலைகளை
சலனம் செய்தவண்ணம் ...

நடுநிஷியின் இருள் அடைப்பில்
போர்வைக்குள் புகுந்து கொண்டு
ஒரு திகில் படம் பார்ப்பது போல்
உள்ளத்தில் ஒரு பீதியை
ஒற்றையாய் அந்த வீடு
உருவகித்து செல்கிறது ...
இருந்தும்
ஏதோ ஒரு உணர்வலையின் உந்துதலில்
பின் இழுத்த கால்களை முன் நகர்த்தி
முடிந்தவவரை என் முழுமைகளை திரட்டி
ஒற்றையாய் இருந்த வீடினுள் ......

ஓர் யுத்தக் களத்தின்
விஞ்சிய எச்சமென
உருக்குலைந்து உருமாறி
உடைந்து கிடந்தது அந்த வீடு ..

உள்ளே ஓரடி வைத்ததுதான் தாமதம்
எதுவோ ஓடி ஒளியும் உணர்வு
பாம்பு ? எலி ? பூனை ? எதுவாக இருக்கும் ?
எதுவென்றால் என்ன ?
விதி வரைந்த அந்த வீட்டின்
நரம்புகளை உணர்ந்திவிடும் நோக்கில்
நகர்ந்த என் கால்களுக்கு
இந்த நினைவுகள் எதுவும்
தடை போடவில்லை ..

சுவர்களில் அங்கும் இங்கும்
அலங்கோலமாய் தொங்கிய
அந்த வீட்டின் குடும்பப் படம்
குலைந்திருக்குமோ ?
குடி முழுகிப் போய் இருக்குமோ ?
சுவரில் ஆங்காங்கே இருந்த
கிறுக்கல்களின் எச்சங்களும்
சிதறி கிடந்த பாதி மண் தின்ற
விளையாட்டு பொருட்களும்
அந்த வீட்டின் மழலை செல்வங்களின்
மந்தகாச வாழ்வினை கண்முன் நிகழ்த்தின
இப்பொழுது எங்கே இருப்பார்கள் ?
அகதியாய் ? அனாதையாய் ?
இல்லை பாழும் இவ்வுலகை விட்டு
பறந்திருப்பார்களோ ?

ஆடைகள் , அணிகள்
பாடப் புத்தகங்கள்
பாத்திரம் பண்டங்கள் என
கரையான் தின்ற மிச்சமாய்
இன்னும் கலையாது கரைந்து
கண்களில் நீர் அரும்ப செய்தது ..

இது ஒன்றா ? இல்லை இது போல் பல
இரக்கமற்ற போர்க் காலனின்
அகன்ற வாய்க்குள் அகப்பட்டது போக
எஞ்சி நின்று எமை எல்லாம் வருத்த ...

ஊரவரின் உறவு கலைந்த நிலை கண்டு
உருவம் தொலைந்த கதி கண்டு
கையறு நிலையில்
ஊமையாய் அழுவதை தவிர
இவளால்
என்ன தான் செய்துவிட முடியும் ?

" தற்கொலை "



இயலாமை
தன் இறுதித் தேர்வுக்கு
ஆயத்தமாகிக்கொண்டு இருந்தது ..

ஏதோ ஒரு விடுதலையின்
வேட்கை கொண்டோ ..
ஒரு விடியலின் ஒளியை
புணர்ந்துவிடும் நோக்கிலோ
ஒரு இறுதிக்கான முடிவை நோக்கி
அது பயணிக்க துடிக்கிறது ...

அதன் இழப்புகளின்
வலிகளை அறிந்தும் அறியாமலும் ..
தான் நொடிப்பொழுது விடியலுக்காய்
தன் உறவுகளை உணர்வுகளை
தியாகம் செய்ய துடிக்கிறது ...

அனைவரது கண்ணிலும்
கருத்திலும் பேச்சிலும்
கோழைத்தனம் என கருதப்படும்
முயன்றால் தெரிந்துவிடும்
முயல்பவன் கோழையா
இல்லை முனகுபவன் கோழையா என்று ...

முயன்று முடியாதவன்
இனி முயலவே முயலாத
முனைவு இது ...
முயன்று பார்த்தவர் பலர்
முயலாமல் தோற்றவர பலர்
முடிந்து போனவர் பலரென
பட்டியல்கள் நீன்றாலும்
இதன் பயணங்கள் ஏனோ
ஆங்காங்கே முடுக்கி விடப்படுகின்றன ..

விடுதலைக்கு முயல்பவனே
விடுகதைக்கு விடைதேடு
விடியல் உன் கண்தெரியும் ..
திரும்பாத ஊர் செல்ல
விரும்பும் உன் செயலில்
வருந்தாத உளமுண்டோ ..
தற்கொலைக்கு போராடுபவனே
ஒரு முறை
தன்னம்பிக்கையோடு போராடு
வாழ்வு வசப்படும் ...

" இடைவெளி "




உனக்கும் எனக்குமான
இந்த உறவின்
உருக் குலைந்த நிலையை
உருவாக்கியது இடைவெளி ..

தூரத்து மின்மினியாய்
அவ்வப்பொழுது
ஒளிரும் உன் பாச விளக்கு
போகத ஊருக்கு வழிகாட்டி ..

பல நேரங்களில்
இடைவெளிகள்தான்
தீர்மானிக்கிறது
இதயங்களின் இருப்பை
பிரிவுத் துயர் சுமந்து
பிரியமுடியா நினைவழைந்து
கருகும் காலத்தின் பிடியில்
உதிரும் ஓவிய சுவர்களாய்
இருப்புக்கள் நகரும்
இன்மையினை தேடி ...

சில சுயநலங்கள்
சிதிலம் அடைந்த
குருதி துகளின்
துர்நாற்றமென
தூர தேசம் வரை
வாடை சுமப்பதும்
இந்த இடை வெளிகளின்
இருப்பின் மீது
அவர்கள் கொண்ட
நம்பிக்கையின் பிடிப்பில்தான் ...

வலி சுமந்து வாழும்
பல இன உணர்வு சுமந்த
இதயங்களை
இந்த இடை வெளிகளும்
பிரிப்பதில்லை என்றும்
இறுதி வரை அவர் தம்
வேட்கையும் துறப்பதில்லை ..

அவ்வளவு ஏன்
இந்த நிமிஷம்
உனக்கும் எனக்குமான
இந்த உறவுத் தூரத்தின்
இடை வெளிகளை
நிரப்பி நிக்கும்
இந்த முகப் புத்தகத்தின்
பல முகங்கள்
குரோதம் , வஞ்சம்
அன்பு , காதல்
ஆசை , ஆளுமை
என அனைத்து முகம் கொண்டும்
நிரப்பி விடத் துடிக்கிறது இடைவெளியை ..
நிரம்பி விடுமா இடைவெளி
இல்லை நிரம்ப விடுவாயா இதயத்தில் நீ ...?

" நடைப்பிணம்.... "



அவள் நினைவு மலர்களை
சுகிப்பதிலேயே
சுகம் காணுகிறது மனது ..
தென்றல் சுமக்கும் நறுமணங்களில்
அவள் மன வாசனையை
நுகர்ந்துவிடத் துடிக்கிறது
மரணித்தும் துடிக்கும் இதயம் ...

குருதித் கலன்களின்
ஒவ்வொரு துகளுக்குள்ளும்
துல்லியமாய் உட்புகுந்து
போதையூட்டும்
அவள் நினைவுச் சிற்பங்கள்
கண்களில் மின்னுகின்றது
கண்ணீர் துளிகளென ...

ஒற்றையடிப் பாதையின்
ஓரங்களில்
ஒற்றையாய் வளர்ந்த
கள்ளிப்பூ ஒன்று
அவள் கடினத்தில் பூத்த காதலை
கணத்தில் நினைவுறுத்துகிறது ..

ஒற்றையாய் பறக்கும்
ஓர் வண்ண பறவையும்
தண்ணிலவாய் காயும்
வெண் நிலவின் மென் ஒளியும்
என் நினைவில் அவள் உருவை
செதுக்கி உறைகிறது பனியென ...

கலந்து பிரிந்த
கைகளின் விரல் இடுக்கில்
பிரியாத பிரியங்களின் ரேகைகள்
நம் காதலின் ஆயுளை
கூட்டி குளிர்விக்காதோ ?

இணை பிரிந்த அன்றில் என
உனைப் பிரிந்த நான்
ஒற்றையாய் உலவுகிறேன்
இலை உதிர்த்த
மரத்தின் கிளைகள் எல்லாம்
பசுமைக்கு ஏங்குவது போல்
உன்னை எண்ணி
அனைத்தும் இழந்து தவிக்கும்
என் இருதயம்
உன் நினைவு சுமந்து வாழ்கிறது
நடைப்பிணமென .

" விளிம்பு "


எதிர் பார்ப்புகளின் விளிம்புகளில்
ஏமாற்றங்களையும்
எதிர் விளைவுகளையும்
எழுதிச் செல்கிறது
தோல்வி ....

எண்ணிலடங்காத
எண்ணக் குவியல்கள்
வண்ணம் இழக்கிறது
வாழ்வு
தன்னை இழக்கும் தருணங்களில் ...

இதழ் விளிம்பில்
நெளிந்து குலைந்து
அவிழும் புன்னகை மொட்டுக்கள்
இனம் புரியாத
கிளர்ச்சி ஒன்றினை
இருதயத்தில்
பிரசவித்து பிரவாகித்து கொல்கிறது ...

மேக விளிம்பில்
தட்டிக்கொள்ளும் மேக மூட்டமும்
மின்சாரப் பாய்ச்சல் என
உடைந்து சிதறுகிறது
மழைத் துளிகள் என ...

பேனாவின் விளிம்பில்
கசிந்து உருகும் மை
பொய்மைகளை கிறுக்குவதை விட
ஊமைகளான உண்மைகள் பலவற்றை
உடைத்து எழுதுவதிலே
தன் உயிரை மாய்த்துக் கொள்கிறது
கர்வத்துடன் ..

விடுதலைப் போர்களின்
வீரர்கள் அனைவரும்
தம் சாவின் விளிம்பில்
கையொப்பம் இட்டு செல்கின்றனர்
விடுதலையின் வேட்கையை ...

உதிரும் பூக்களின்
சுமைதாங்கும்
காம்பின் விளிம்புகள்
கர்வம் கொள்கின்றது
தன் தலை தாங்கிய பூவொன்று
தாய் மண் காத்தவனுக்கோ
தலைவன் கை கொண்டு
தலை முடியில் சூடுவதட்கோ
அன்றில்
தன நிகரில்லா பரம்பொருள்
சேர்வதற்கோ
ஒற்றையாய் தவம் செய்ததாக ...

மரணத்தின் விளிம்பிலும் சரி
மயக்கத்தின் விளிம்பிலும் சரி
உன்னதமான காவியம் ஒன்றை
உலகுக்கு கொடுத்து விடலாம்
உறுதிகள் உள்ளத்திருந்தால் ..

" காதல் இப்படியாம் .. "



என்னிடமும் உன்னிடமும்
புரண்டு தவழும் காதல் குழந்தை
பல கைகளில் மருண்டு விழிக்கிறது ...
காதல்
கலவிக்கென்பார்
கரைபுரண்ட அன்புக்கு என்பார்
மடை திறந்த உள்ள மருளுக்கு என்பார் ..
இவை அனைத்தும் கலந்த
குழந்தை என்கிறோம்
நீயும் நானும் ...

நெடுந்தூர பயணத்தின்
சக பயணிகள் என
காதல் அவ்வப்பொழுது வந்து
தரிப்பிடங்களில்
இலகுவாக விடை பெறுகிறது இன்று ..

அடுத்த தரிப்பிடத்தில்
அனாவசியம் என உத்தர நினைக்கும்
உள்ளங்களை கூட
மருட்டி மடிய வைத்து ருசிக்கிறது ..

மனதைப் பற்றி பேசும் பலரும்
அதை மரணம் வரை பேசுவதாய் இல்லை
அழகைப்பற்றி பேசும் எவரும்
அழகை ஆராதிப்பவராயும் இல்லை ..
காமம் பற்றி பேசும் எவரும்
களிப்புண்டு தீர்த்தாரில்லை ...

எனில் காதல் என்பது யாது ?
கருத்தொருமித்து
கண்கவர்ந்து
கடைக் கண் பார்வை பகிர்ந்து
உள்வாங்கி உரமான
அன்பென்று சொல்கிறோம் நாம் .

விழி உதிர்க்கும் நீர் மணிகள்
காதல் கறைகளை
கழுவிச் செல்கிறது ...
இதழ் உதிர்க்கும்
புன்னகை ஒன்று
இதயத்தின் வடுக்களை
ஆற்றிச் செல்கிறது
எனவே இன்றெல்லாம்
காதலும் நீடிப்பதில்லை
காதல் தோல்விகளும் நீடிப்பதில்லை ..

இதையும் நாம் தான் சொல்லி கொள்கிறோம்
இங்கே நீயும் நானும்
அவன் , அவள் , அவர்களாகி
அனைவருக்குமான
ஒருவராக
பேசிக் கொள்கிறோம்
இன்றைய காதல் இப்படியாம் ..