Monday, October 7, 2013

" நடைப்பிணம்.... "



அவள் நினைவு மலர்களை
சுகிப்பதிலேயே
சுகம் காணுகிறது மனது ..
தென்றல் சுமக்கும் நறுமணங்களில்
அவள் மன வாசனையை
நுகர்ந்துவிடத் துடிக்கிறது
மரணித்தும் துடிக்கும் இதயம் ...

குருதித் கலன்களின்
ஒவ்வொரு துகளுக்குள்ளும்
துல்லியமாய் உட்புகுந்து
போதையூட்டும்
அவள் நினைவுச் சிற்பங்கள்
கண்களில் மின்னுகின்றது
கண்ணீர் துளிகளென ...

ஒற்றையடிப் பாதையின்
ஓரங்களில்
ஒற்றையாய் வளர்ந்த
கள்ளிப்பூ ஒன்று
அவள் கடினத்தில் பூத்த காதலை
கணத்தில் நினைவுறுத்துகிறது ..

ஒற்றையாய் பறக்கும்
ஓர் வண்ண பறவையும்
தண்ணிலவாய் காயும்
வெண் நிலவின் மென் ஒளியும்
என் நினைவில் அவள் உருவை
செதுக்கி உறைகிறது பனியென ...

கலந்து பிரிந்த
கைகளின் விரல் இடுக்கில்
பிரியாத பிரியங்களின் ரேகைகள்
நம் காதலின் ஆயுளை
கூட்டி குளிர்விக்காதோ ?

இணை பிரிந்த அன்றில் என
உனைப் பிரிந்த நான்
ஒற்றையாய் உலவுகிறேன்
இலை உதிர்த்த
மரத்தின் கிளைகள் எல்லாம்
பசுமைக்கு ஏங்குவது போல்
உன்னை எண்ணி
அனைத்தும் இழந்து தவிக்கும்
என் இருதயம்
உன் நினைவு சுமந்து வாழ்கிறது
நடைப்பிணமென .

No comments:

Post a Comment