Monday, October 7, 2013

" ஊமையாய் "




பசேல் என பரந்து விரிந்த
ஓர் பாலையின் குளிர்மை என
அந்த அமானுஷ்ய வெளி
அகத்தினுள்ளே ஒரு
அமைதியையும்
அதோ தூரத்தில் தெரியும்
ஒற்றையாய் அந்த ஒரு வீட்டின் அமைதி
மனதினுள்ளே பீதியையும்
புரளவிட்டபடி
என் எண்ணக் குளத்தின்
சலன அலைகளை
சலனம் செய்தவண்ணம் ...

நடுநிஷியின் இருள் அடைப்பில்
போர்வைக்குள் புகுந்து கொண்டு
ஒரு திகில் படம் பார்ப்பது போல்
உள்ளத்தில் ஒரு பீதியை
ஒற்றையாய் அந்த வீடு
உருவகித்து செல்கிறது ...
இருந்தும்
ஏதோ ஒரு உணர்வலையின் உந்துதலில்
பின் இழுத்த கால்களை முன் நகர்த்தி
முடிந்தவவரை என் முழுமைகளை திரட்டி
ஒற்றையாய் இருந்த வீடினுள் ......

ஓர் யுத்தக் களத்தின்
விஞ்சிய எச்சமென
உருக்குலைந்து உருமாறி
உடைந்து கிடந்தது அந்த வீடு ..

உள்ளே ஓரடி வைத்ததுதான் தாமதம்
எதுவோ ஓடி ஒளியும் உணர்வு
பாம்பு ? எலி ? பூனை ? எதுவாக இருக்கும் ?
எதுவென்றால் என்ன ?
விதி வரைந்த அந்த வீட்டின்
நரம்புகளை உணர்ந்திவிடும் நோக்கில்
நகர்ந்த என் கால்களுக்கு
இந்த நினைவுகள் எதுவும்
தடை போடவில்லை ..

சுவர்களில் அங்கும் இங்கும்
அலங்கோலமாய் தொங்கிய
அந்த வீட்டின் குடும்பப் படம்
குலைந்திருக்குமோ ?
குடி முழுகிப் போய் இருக்குமோ ?
சுவரில் ஆங்காங்கே இருந்த
கிறுக்கல்களின் எச்சங்களும்
சிதறி கிடந்த பாதி மண் தின்ற
விளையாட்டு பொருட்களும்
அந்த வீட்டின் மழலை செல்வங்களின்
மந்தகாச வாழ்வினை கண்முன் நிகழ்த்தின
இப்பொழுது எங்கே இருப்பார்கள் ?
அகதியாய் ? அனாதையாய் ?
இல்லை பாழும் இவ்வுலகை விட்டு
பறந்திருப்பார்களோ ?

ஆடைகள் , அணிகள்
பாடப் புத்தகங்கள்
பாத்திரம் பண்டங்கள் என
கரையான் தின்ற மிச்சமாய்
இன்னும் கலையாது கரைந்து
கண்களில் நீர் அரும்ப செய்தது ..

இது ஒன்றா ? இல்லை இது போல் பல
இரக்கமற்ற போர்க் காலனின்
அகன்ற வாய்க்குள் அகப்பட்டது போக
எஞ்சி நின்று எமை எல்லாம் வருத்த ...

ஊரவரின் உறவு கலைந்த நிலை கண்டு
உருவம் தொலைந்த கதி கண்டு
கையறு நிலையில்
ஊமையாய் அழுவதை தவிர
இவளால்
என்ன தான் செய்துவிட முடியும் ?

No comments:

Post a Comment