Monday, October 7, 2013

" காதல் இப்படியாம் .. "



ன்னிடமும் உன்னிடமும்
புரண்டு தவழும் காதல் குழந்தை
பல கைகளில் மருண்டு விழிக்கிறது ...
காதல்
கலவிக்கென்பார்
கரைபுரண்ட அன்புக்கு என்பார்
மடை திறந்த உள்ள மருளுக்கு என்பார் ..
இவை அனைத்தும் கலந்த
குழந்தை என்கிறோம்
நீயும் நானும் ...

நெடுந்தூர பயணத்தின்
சக பயணிகள் என
காதல் அவ்வப்பொழுது வந்து
தரிப்பிடங்களில்
இலகுவாக விடை பெறுகிறது இன்று ..

அடுத்த தரிப்பிடத்தில்
அனாவசியம் என உத்தர நினைக்கும்
உள்ளங்களை கூட
மருட்டி மடிய வைத்து ருசிக்கிறது ..

மனதைப் பற்றி பேசும் பலரும்
அதை மரணம் வரை பேசுவதாய் இல்லை
அழகைப்பற்றி பேசும் எவரும்
அழகை ஆராதிப்பவராயும் இல்லை ..
காமம் பற்றி பேசும் எவரும்
களிப்புண்டு தீர்த்தாரில்லை ...

எனில் காதல் என்பது யாது ?
கருத்தொருமித்து
கண்கவர்ந்து
கடைக் கண் பார்வை பகிர்ந்து
உள்வாங்கி உரமான
அன்பென்று சொல்கிறோம் நாம் .

விழி உதிர்க்கும் நீர் மணிகள்
காதல் கறைகளை
கழுவிச் செல்கிறது ...
இதழ் உதிர்க்கும்
புன்னகை ஒன்று
இதயத்தின் வடுக்களை
ஆற்றிச் செல்கிறது
எனவே இன்றெல்லாம்
காதலும் நீடிப்பதில்லை
காதல் தோல்விகளும் நீடிப்பதில்லை ..

இதையும் நாம் தான் சொல்லி கொள்கிறோம்
இங்கே நீயும் நானும்
அவன் , அவள் , அவர்களாகி
அனைவருக்குமான
ஒருவராக
பேசிக் கொள்கிறோம்
இன்றைய காதல் இப்படியாம் ..

No comments:

Post a Comment