எதிர் பார்ப்புகளின் விளிம்புகளில்
ஏமாற்றங்களையும்
எதிர் விளைவுகளையும்
எழுதிச் செல்கிறது
தோல்வி ....
எண்ணிலடங்காத
எண்ணக் குவியல்கள்
வண்ணம் இழக்கிறது
வாழ்வு
தன்னை இழக்கும் தருணங்களில் ...
இதழ் விளிம்பில்
நெளிந்து குலைந்து
அவிழும் புன்னகை மொட்டுக்கள்
இனம் புரியாத
கிளர்ச்சி ஒன்றினை
இருதயத்தில்
பிரசவித்து பிரவாகித்து கொல்கிறது ...
மேக விளிம்பில்
தட்டிக்கொள்ளும் மேக மூட்டமும்
மின்சாரப் பாய்ச்சல் என
உடைந்து சிதறுகிறது
மழைத் துளிகள் என ...
பேனாவின் விளிம்பில்
கசிந்து உருகும் மை
பொய்மைகளை கிறுக்குவதை விட
ஊமைகளான உண்மைகள் பலவற்றை
உடைத்து எழுதுவதிலே
தன் உயிரை மாய்த்துக் கொள்கிறது
கர்வத்துடன் ..
விடுதலைப் போர்களின்
வீரர்கள் அனைவரும்
தம் சாவின் விளிம்பில்
கையொப்பம் இட்டு செல்கின்றனர்
விடுதலையின் வேட்கையை ...
உதிரும் பூக்களின்
சுமைதாங்கும்
காம்பின் விளிம்புகள்
கர்வம் கொள்கின்றது
தன் தலை தாங்கிய பூவொன்று
தாய் மண் காத்தவனுக்கோ
தலைவன் கை கொண்டு
தலை முடியில் சூடுவதட்கோ
அன்றில்
தன நிகரில்லா பரம்பொருள்
சேர்வதற்கோ
ஒற்றையாய் தவம் செய்ததாக ...
மரணத்தின் விளிம்பிலும் சரி
மயக்கத்தின் விளிம்பிலும் சரி
உன்னதமான காவியம் ஒன்றை
உலகுக்கு கொடுத்து விடலாம்
உறுதிகள் உள்ளத்திருந்தால் ..
No comments:
Post a Comment