Monday, October 7, 2013

" ஒரு கணம் "




ஒரு கணம் சிந்தித்திருக்கலாம்
உணர்வுகளுக்கு ஆட்பட்டு
உயிர் உருவும் உந்துதல் பெறுதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

கன்னி கழல் இழுத்து
கால் கொலுசு அறுத்து
குலம் சிதைக்கும்
கொடும் பாதகத்தை
கூட்டமாய் செய்வதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

காதலால் கைபிடித்து
காலமெல்லாம் கால் பிடித்து
கடமை செய்யும் மனையாளென
கைகள் நீளும் முன்
ஒரு கணம் நினைத்திருக்கலாம் ...

வாழ வந்த பெண்
வம்ச விளக்கு ஏந்தும் மகள் என
மறு மகள்
அவளை தீக்கிரை ஆக்குமுன்
ஒருகணம் நினைத்திருக்கலாம் ...

ஊர் வெறுத்து உறவறுத்து
உத்தமன் என ஒருவனுடன்
தடை தாண்டிய ஒருவளுக்காய்
ஊரை கொளுத்துமுன்
ஒரு கணம் யோசித்திருக்கலாம்

உனக்கென்று வீடுண்டு
உன் வரவுக்காய் ஏக்கமுண்டு
உன் சகோதரியாய் , மனைவியாய்
அவள் ஈன்ற உன் உயிர்க் கருவாய்
உன்னையே உயிராக மதிக்கும்
உன்னவர்கள் இருப்பாரென்று ...

அவர் உயிர் அறுந்தால்
உணர்வறுந்தால்
உன் உணர்வுகள் எப்படியென்று
ஒரு கணம் நினைத்துவிட்டால்
உலகில் குற்றம் குறைந்துவிடும்
உறவுகளின் கண்ணீரும்
அர்த்தம் பெறும்.

" வரதட்சனை "



சுட்டெரிக்கும் சூரியன்
தன் தணல் நாக்கை
கட்டுக்குள் கொண்டுவந்து
கனிவாக மாறிக்கொண்டிருந்த
ஓர் மாலை வேளை ..
வீடு பரபரப்பில்
ஆழ்ந்து வண்ணம் இருந்தது ...

கரை பெயர்ந்துவிட சுவரின்
காட்டமான பல்லிளிப்பை
காலண்டர் வைத்து
மறைத்துக் கொண்டிருந்த தம்பி ...
சமையல் அறையில்
சுடப்பட்ட பஜ்ஜியில் மிச்சரில்
தன் வியர்வை துளிகளை
அலட்சியம் செய்து
எண்ணெய் ஒற்றி எடுத்துகொண்டிருந்த அம்மா ,,
ஒரு மெத்தனத்தோடு
தோளில் துண்டை உதறிப் போட்டவண்ணம் அப்பா
தங்கை .....எங்கே ?
சிறிது காலமாக
இந்தமாதிரி நேரத்தில்
காணாமல் போய்க்கொண்டிருந்த அவள் தரிசனம் ...
வரும் மாப்பிள்ளை
தங்கையை கேட்டுவிட்டால் ...?

சிந்தனையின் போக்கை
சிதறடித்த அன்னையின் குரல்
தங்கம் ... அலங்காரம் பண்ணலியோ
நேரமாகிட்டுது ....!!
பாத ரசம் பெயர்ந்த
அந்த பழையகால கண்ணாடி முன்
முகம் தெரியும் இடங்களை தேடி
உயர்ந்து குனிந்து சரிந்து
விழிகளுக்கு அஞ்சனமிட்டு
இயற்கையாய் சிவந்த உதடுகளை
சிறிது எண்ணெய் தடவி மினுங்க வைத்து
குண்டு மல்லி சரத்தை கொத்தாக வைத்து
நாகரீக போர்வையில் கலர் வளையல்கள்
கழுத்தாரம் ஜிமிக்கி மாட்டி
மெல்லிய மஞ்சள் நூல் சேலையில்
தங்கம் , தங்கமின்றியே ஜொலித்தாள் ...

நிறைவாக பார்த்தவள் முன்
பழைய நினைவுகள் நிழல் ஆடியது ..
என் பொண்ணு அழகுக்கு
ஆயிரம் மாப்பிள்ளை வருவாங்கள்
அவளை விரும்பி மணக்கக் கேட்ட
அவனின் பொருளாதார திருப்தியின்மையில்
தந்தையின் வாக்கு அது ..
ஆமாம் இன்னும் இரண்டு வருடங்களில்
அவர் சொன்ன கணக்கே எட்டிவிடும்...

அழகுக்கு குறைவற்ற அவளிடம்
ஆஸ்திக்கு குறைவைத்த
ஆண்டவன் குற்றமா ?
அந்தஸ்து அந்தஸ்த்து என
அகம் மகிழ்ந்த வரன் அனைத்தும்
ஆரம்பத்தில் தட்டிக் கழித்த
அசட்டுக் கவுரவ தந்தையின் குற்றமா ?
படித்து வேலை பார்க்கும்
ஒரே காரணத்துக்காக
படிவைத்து அளக்க முடியாத அளவு
பொன் பொருள் வாகன ஆசை கொள்ளும்
மாப்பிள்ளையை பெற்றவள் குற்றமா ?
பெண்ணை பிடித்திருந்தாலும்
பெற்றவள் வார்த்தைக்கு கட்டுப் படும்
மாப்பிள்ளை குற்றமா ?

அழகுண்டு அறிவுண்டு
குணமுண்டு நலமுண்டு
குடும்பம் நடத்தும் பாங்குண்டு
வெள்ளிக் குத்துவிளக்கு
கொண்டு வர வசதியில்லையே
வக்கற்றவர்களுக்கு வாழ்க்கை எதற்கு
வறண்டு போன அவள் உள்ளத்தில்
வற்றாத ஜீவ நதியாக
வரதட்சனை வேண்டாம் என எவன் வருவான் ?

வந்தார்கள் நின்றாள் கொலு பொம்மையென
அழகை வியந்தார்கள்
பலகாரம் பெண் செய்தால் எனும்
பொய்யை புகழ்ந்தார்கள் ..
எங்கள் தாத்தா அப்படி அப்பா இப்படி
என்ற தந்தையின் வரட்டு
கவுரவத்தை கேட்டார்கள் ..
வழக்கம் போல் லிஸ்ட் போட்டு
சீதனமும் கேட்டார்கள்

ஊர் போய் கடிதமிடுவதாய்
உரக்கச் சொல்லி சென்றவர்கள் பட்டியலில்
இவர்களும் உக்காந்து விட ..
அன்னையின் புலம்பல் ஆரம்பமானது
இரவுகளின் பிடியில்
இறைஞ்சும் அன்னையின் குரலுக்கு
தந்தையும் இறங்கி வந்தார் ..

புரோக்கர் பரமசிவத்திடம்
ஒரு பிள்ளையின் குறிப்பிருக்காம்
பையன் பொண்டாட்டி
இறந்து ரெண்டு வருசமாம் ...


இனி தங்கத்துக்கு திருமணம் நடந்துவிடும் .......

" தேடாதே "



உன் நினைவுகளின் நீட்சியில்
உன் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
நினைவு மலரென நான் ...

அதன் மகரந்தங்கள்
உன் மனக்கருவறையில்
கடந்து சென்ற
பசுமையான நினைவுகளை
கருக்கொள்ள வைக்கிறது ...

உறை நிலைக் காலமொன்றில்
பாதி
உருகி விட்ட பனிப் பொம்மையென
என் உருவச் சிதலங்கள்
உறைந்து உன்னை
உருக்குலைக்கிறது
இருந்தும் சிலிர்த்து
எனை சிந்திக்க தவறியதில்லை நீ ,,,

பூக்கள் நிறைந்த வனத்தில்
உதிர்ந்துவிட்ட பூவொன்றின்
ஸ்பரிசத்துக்காய்
ஒற்றையாய் தவமிருக்கும் தும்பியென
உன் தவம் இன்னும் தொடர்கிறது ..

உள்ளம் கவர்ந்த ஓவியம் ஒன்று
உயிர் உருவிச் சென்றபின்னும்
அதன் நிழல் தேடி அலையும்
உன் மன விசித்திரம் ..
உனக்கும் எனக்குமான
பிரிவுப் பத்திரம்
உன்னை அறியாது
என்னால்
கைச்சாத்திட்ட பொழுதறிந்து
உடைந்து சிதறிய உன் மனவலி கண்டு
என் ஆத்மா உருகி உன்னை அணைத்தது
நீயறிய வாய்ப்பில்லை ..

காலம் கடந்து சென்றாலும்
கடந்துவிட முடியாத உன் காதல்
அடிக்கடி என்னை கட்டி அனைப்பதனால் தான்
உன் கை வளைவில் இருந்து
என் ஆத்மா கரைந்துவிட முடியுதில்லை ..

எங்கும் எனைத் தேடுகிறாய்
எதிலும் எனை நாடுகிறாய்
உன்னருகே தான்
உனக்கு பிடித்த உடையணிந்து
உனைக் கவரக் கால்க்கொலுசணிந்து
ஒட்டி ஒட்டி நடக்கிறேன் தென்றல் என ..
உணரமுடியாமல் நீ
உருவமற்ற நிலையில் நான் ...

அன்பே எங்கும் எதிலும்
எனைத் தேடாதே
ஒரு தென்றல் என
ஒரு நினைவுத் தீண்டல் என
உன்னுள் நான் அற்றுப் போகும் வரை
உன்னருகே தான் இருப்பேன்
எனவே எதிலும் எனை பார்க்காதே
அது அதுவாகவே இருக்கிறது
திரும்ப முடியாத தொலைவு நகர்ந்த
உன் தேவதையை தவிர ....

" விடுபட்ட இதயம் "



பரந்து விரிந்த இரவில்
கவிந்திருந்த இருளின்
இருண்மை கிழித்து
துழாவும் விழிகளின் தேடல்
ஏனோ வெளிச்சத்தின் துணையின்றி
தோல்விகளை தழுவிக் கொள்கிறது ....

முட்கள் நிறைந்த மலர்க்காட்டில்
இடறிக் கொள்கின்ற இதயங்கள்
பூவின் மென்மையை விட
முள்ளின் கூர்மையையே
சட்டென உணர்ந்துவிடுகிறது
கூரிய நாக்கினால்
கிளித்துவிடப்பட்ட இதயம்
குருதிக் கசிவுடன்
அதன் எரிவை தவிர்க்க
குளிரும் நீர்க் குளம் தேடி அலைகிறது ...

எதிர்ப்பட்ட நீர் நிலைகளெல்லாம்
அதன் குளிர்மையை
கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில்
புரண்டு அமிழ்ந்து மிதந்து
நடக்கிறது ....
ஒட்டியதெல்லாம் சேறும் சகதியும்
உலர்ந்த மணலும் தான் ,,,

என்றாகிலும் எப்பிடியாகிலும்
வலியை தீர்க்கும்
எரிவைப் போக்கும்
ஏரியின் தரிசனம் நோக்கிய அதன் பயணத்தில்
எதேச்சையாய் தெரிந்த
ஆர்பரிக்கும் நீர் திவலைகளின்
தரிசனம் கண்டு
அணைத்துவிடும் ஆவல் நோக்கி
கால் நனைத்த பொழுது ஈன்றது
கனல் தகிக்கும் உணர்வை
அதன் உப்புகளை
ஊன் உறிஞ்சி
உவகை துறந்து
விதிர் விதிர்த்து நின்றது
விடுபட்ட இதயம் ஒன்று ...

" காகிதப் பூக்கள் "




மலர்ந்த மொடுகள்
மௌனித்து இருக்கும்
சிவந்த இதழ்களும்
வர்ணம் கலையாது சிரிக்கும்
சிறகுகள் இருந்தும்
தேவதைகள்
அங்கு பறக்காது இருக்கும் ...

வலிவும் வனப்புமாய்
வாடாமல் இருக்கும்
வண்ண வண்ண மலர்கள்
ஜிகினா சகிதம் பளபளக்கும்
பாப்பவரை சுண்டி இழுத்தாலும்
ஏனோ பருவம் எய்தாத
பாவையர் போன்று
பல தோற்றம் காட்டிவிடும் ..

கேலிக்கு ஆளானாலும்
கேள்விக் குறியாய்
நின்று சலித்தாலும்
சந்ததிகள் தாங்கா விட்டாலும்
தன் காலில் நிற்கும் பூக்கள்
வசந்தங்கள் வருவதில்லை
வாசனையும் தெரிவதில்லை
கண்டுகொள்ளும் மனிதருள்ளும்
கறை படிந்த கண்கள் பல
வண்டுகள் தேடா மலர்
மகரந்தம் இல்லாத பூக்கள்
மலர்வதும் இல்லை
மனதை இழுப்பதுமில்லை

ஆசைகள் தோன்றும் வயது
ஆண் பெண் இல்லாத பிறப்பு
தான் என்று நின்றுவிட்டாலும்
தள்ளி வைத்தே பார்க்கும் உலகு
வா என்று அழைத்துச் சென்று
வஞ்சம் எல்லாம் தீர்த்துக் கொள்வார்
பார் என்று சிந்தும் கண் நீரில்
பாரெல்லாம் நனைந்தாலும்
பார்ப்பவர் உள்ளம் கரைவதில்லை ..

காட்சிக்காக அலர்ந்த பூக்கள்
கருக்கொள்ளாத
மலட்டு மலர்கள்
அசைவுகளில் மலர்ந்திட்டாலும்
காகிதப் பூக்கள் மணப்பதில்லை .

Monday, August 12, 2013

தூக்கம் வரவில்லை

Photo: கண்ணதாசன் கருணாகரன் கொடுத்த தலைப்பு இது " எனக்கு உறக்கம் வரவில்லை "

நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்  
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம் 
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி 
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் . 
நாடு நிசியின் இருள் கதவை
விடி நிலவு மெல்ல
தட்டி திறக்க முயல்கிறது
கோபம் கொண்ட மனையாளின்
சீற்றமென முகில் போர்வை
நிலவின் முகம் மறைத்து
அவ்வப்போது நகர்ந்து
எட்டிப் பார்க்கிறது தாள் திறக்க ..

எங்கோ ஒரு மணி அடித்து ஓய்கிறது
இது ஒரு மணியா ....?
இல்லை ஒரு மணியில் அரை மணியா ?
எதுவாக இருக்கும் ?
தவறி உட்புகுந்த கொசு ஒன்று
குறுக்கும் நெடுக்குமாய்
நிசப்தத்தை கிளித்தவண்ணம்
செவியருகில் என் தூக்கத்தை
நிச்சயப் படுத்திக் கொள்ள முனைந்த வண்ணம் ..

அவ்வபோது இரையும் வாகனத்தின் இரைச்சல்
அகால வேளையின் அடையாள ஓசைகளென ...
அடுத்த அறையில் கோடையின் வெப்பத்தை
விரட்டிவிடும் நோக்கில்
வேகமாய் விசிறிக் கொண்டிருந்த காத்தாடியின்
இறக்கைகளின் மெல்லிய ஒலி ...

எங்கோ ஒரு பூனை ..
அல்லது நாயாக கூட இருக்கலாம்
அதன் வேதனை சொல்லும் தீனக் குரல்
செவியில் மெலிதாய் ஊடுருவிய வண்ணம் ....

இவை அனைத்தும் கடந்து
அவ்வப்பொழுது
முகப் புத்தகத்தில் விழும்
அறிவுப்பு ஓலையின் ஓசை
எதிர்பார்ப்புகளின் விசையை அழுத்தி
இமை ரெண்டையும் இணைய விடாது
இறுக்கிப் பிடித்த வண்ணம் ...

எனக்கு தூக்கம் வரவில்லை
இதை படிக்கும் உனக்கும் தூக்கம் வரவில்லை
எதுவரை போகிறது பார்க்கலாம்
அதுவரை உறக்கமும்
உறங்காமல் விழித்திடுமா நோக்கலாம் .

முனைந்து முனைந்து

Photo: முனைந்து முனைந்து 
முடியாமையின் 
விளிம்புகள் நோக்கி 
முனைந்து பயணிக்கிறது இயலாமை ..

மூழ்கி முக்குளித்து 
முனைந்து முடியாமல் 
பலர் எழுதும் காதல் கவிதைகளில் 
முனைந்து வழிகிறது 
காதல் மீதான அவர்கள் வெறுப்பு ..

தினம் தினம் 
திருவோடு ஏந்தும் 
தெரு நாய்களோடு கூடும் 
பிச்சைகாரர்களின் தட்டில் விழும் 
பருக்கை சோற்றில் 
முனைந்து நகர்கிறது 
பசித்த வயிற்றின் அதிருப்தி ...

தினம் கருவாகா வயிற்ரை 
கடிந்து உமிழும் வெஞ்சினம் 
முனைந்து கடக்கிறது 
காமக் குளத்தை ...

உருவாக வேண்டி 
உருப் பெற்ற போராட்டம் 
சதிகாரர் வலையில் சிக்கி 
முயன்று முனைந்து 
சுவாசிக்க துடிக்கிறது 
சுதந்திர காற்றை ...

தினம் அழியாத கோலமிட்டு 
அலங்கார தீபமிட்டு 
இவைக்கான காத்திருப்புகள் 
இன்னும் முயன்று பயணிக்கின்றன 
அதன் முடிவை தேடி 
முனைந்து முனைந்து
முடியாமையின்
விளிம்புகள் நோக்கி
முனைந்து பயணிக்கிறது இயலாமை ..

மூழ்கி முக்குளித்து
முனைந்து முடியாமல்
பலர் எழுதும் காதல் கவிதைகளில்
முனைந்து வழிகிறது
காதல் மீதான அவர்கள் வெறுப்பு ..

தினம் தினம்
திருவோடு ஏந்தும்
தெரு நாய்களோடு கூடும்
பிச்சைகாரர்களின் தட்டில் விழும்
பருக்கை சோற்றில்
முனைந்து நகர்கிறது
பசித்த வயிற்றின் அதிருப்தி ...

தினம் கருவாகா வயிற்ரை
கடிந்து உமிழும் வெஞ்சினம்
முனைந்து கடக்கிறது
காமக் குளத்தை ...

உருவாக வேண்டி
உருப் பெற்ற போராட்டம்
சதிகாரர் வலையில் சிக்கி
முயன்று முனைந்து
சுவாசிக்க துடிக்கிறது
சுதந்திர காற்றை ...

தினம் அழியாத கோலமிட்டு
அலங்கார தீபமிட்டு
இவைக்கான காத்திருப்புகள்
இன்னும் முயன்று பயணிக்கின்றன
அதன் முடிவை தேடி