Monday, October 7, 2013

" காகிதப் பூக்கள் "




மலர்ந்த மொடுகள்
மௌனித்து இருக்கும்
சிவந்த இதழ்களும்
வர்ணம் கலையாது சிரிக்கும்
சிறகுகள் இருந்தும்
தேவதைகள்
அங்கு பறக்காது இருக்கும் ...

வலிவும் வனப்புமாய்
வாடாமல் இருக்கும்
வண்ண வண்ண மலர்கள்
ஜிகினா சகிதம் பளபளக்கும்
பாப்பவரை சுண்டி இழுத்தாலும்
ஏனோ பருவம் எய்தாத
பாவையர் போன்று
பல தோற்றம் காட்டிவிடும் ..

கேலிக்கு ஆளானாலும்
கேள்விக் குறியாய்
நின்று சலித்தாலும்
சந்ததிகள் தாங்கா விட்டாலும்
தன் காலில் நிற்கும் பூக்கள்
வசந்தங்கள் வருவதில்லை
வாசனையும் தெரிவதில்லை
கண்டுகொள்ளும் மனிதருள்ளும்
கறை படிந்த கண்கள் பல
வண்டுகள் தேடா மலர்
மகரந்தம் இல்லாத பூக்கள்
மலர்வதும் இல்லை
மனதை இழுப்பதுமில்லை

ஆசைகள் தோன்றும் வயது
ஆண் பெண் இல்லாத பிறப்பு
தான் என்று நின்றுவிட்டாலும்
தள்ளி வைத்தே பார்க்கும் உலகு
வா என்று அழைத்துச் சென்று
வஞ்சம் எல்லாம் தீர்த்துக் கொள்வார்
பார் என்று சிந்தும் கண் நீரில்
பாரெல்லாம் நனைந்தாலும்
பார்ப்பவர் உள்ளம் கரைவதில்லை ..

காட்சிக்காக அலர்ந்த பூக்கள்
கருக்கொள்ளாத
மலட்டு மலர்கள்
அசைவுகளில் மலர்ந்திட்டாலும்
காகிதப் பூக்கள் மணப்பதில்லை .

No comments:

Post a Comment