Monday, October 7, 2013

" வரதட்சனை "



சுட்டெரிக்கும் சூரியன்
தன் தணல் நாக்கை
கட்டுக்குள் கொண்டுவந்து
கனிவாக மாறிக்கொண்டிருந்த
ஓர் மாலை வேளை ..
வீடு பரபரப்பில்
ஆழ்ந்து வண்ணம் இருந்தது ...

கரை பெயர்ந்துவிட சுவரின்
காட்டமான பல்லிளிப்பை
காலண்டர் வைத்து
மறைத்துக் கொண்டிருந்த தம்பி ...
சமையல் அறையில்
சுடப்பட்ட பஜ்ஜியில் மிச்சரில்
தன் வியர்வை துளிகளை
அலட்சியம் செய்து
எண்ணெய் ஒற்றி எடுத்துகொண்டிருந்த அம்மா ,,
ஒரு மெத்தனத்தோடு
தோளில் துண்டை உதறிப் போட்டவண்ணம் அப்பா
தங்கை .....எங்கே ?
சிறிது காலமாக
இந்தமாதிரி நேரத்தில்
காணாமல் போய்க்கொண்டிருந்த அவள் தரிசனம் ...
வரும் மாப்பிள்ளை
தங்கையை கேட்டுவிட்டால் ...?

சிந்தனையின் போக்கை
சிதறடித்த அன்னையின் குரல்
தங்கம் ... அலங்காரம் பண்ணலியோ
நேரமாகிட்டுது ....!!
பாத ரசம் பெயர்ந்த
அந்த பழையகால கண்ணாடி முன்
முகம் தெரியும் இடங்களை தேடி
உயர்ந்து குனிந்து சரிந்து
விழிகளுக்கு அஞ்சனமிட்டு
இயற்கையாய் சிவந்த உதடுகளை
சிறிது எண்ணெய் தடவி மினுங்க வைத்து
குண்டு மல்லி சரத்தை கொத்தாக வைத்து
நாகரீக போர்வையில் கலர் வளையல்கள்
கழுத்தாரம் ஜிமிக்கி மாட்டி
மெல்லிய மஞ்சள் நூல் சேலையில்
தங்கம் , தங்கமின்றியே ஜொலித்தாள் ...

நிறைவாக பார்த்தவள் முன்
பழைய நினைவுகள் நிழல் ஆடியது ..
என் பொண்ணு அழகுக்கு
ஆயிரம் மாப்பிள்ளை வருவாங்கள்
அவளை விரும்பி மணக்கக் கேட்ட
அவனின் பொருளாதார திருப்தியின்மையில்
தந்தையின் வாக்கு அது ..
ஆமாம் இன்னும் இரண்டு வருடங்களில்
அவர் சொன்ன கணக்கே எட்டிவிடும்...

அழகுக்கு குறைவற்ற அவளிடம்
ஆஸ்திக்கு குறைவைத்த
ஆண்டவன் குற்றமா ?
அந்தஸ்து அந்தஸ்த்து என
அகம் மகிழ்ந்த வரன் அனைத்தும்
ஆரம்பத்தில் தட்டிக் கழித்த
அசட்டுக் கவுரவ தந்தையின் குற்றமா ?
படித்து வேலை பார்க்கும்
ஒரே காரணத்துக்காக
படிவைத்து அளக்க முடியாத அளவு
பொன் பொருள் வாகன ஆசை கொள்ளும்
மாப்பிள்ளையை பெற்றவள் குற்றமா ?
பெண்ணை பிடித்திருந்தாலும்
பெற்றவள் வார்த்தைக்கு கட்டுப் படும்
மாப்பிள்ளை குற்றமா ?

அழகுண்டு அறிவுண்டு
குணமுண்டு நலமுண்டு
குடும்பம் நடத்தும் பாங்குண்டு
வெள்ளிக் குத்துவிளக்கு
கொண்டு வர வசதியில்லையே
வக்கற்றவர்களுக்கு வாழ்க்கை எதற்கு
வறண்டு போன அவள் உள்ளத்தில்
வற்றாத ஜீவ நதியாக
வரதட்சனை வேண்டாம் என எவன் வருவான் ?

வந்தார்கள் நின்றாள் கொலு பொம்மையென
அழகை வியந்தார்கள்
பலகாரம் பெண் செய்தால் எனும்
பொய்யை புகழ்ந்தார்கள் ..
எங்கள் தாத்தா அப்படி அப்பா இப்படி
என்ற தந்தையின் வரட்டு
கவுரவத்தை கேட்டார்கள் ..
வழக்கம் போல் லிஸ்ட் போட்டு
சீதனமும் கேட்டார்கள்

ஊர் போய் கடிதமிடுவதாய்
உரக்கச் சொல்லி சென்றவர்கள் பட்டியலில்
இவர்களும் உக்காந்து விட ..
அன்னையின் புலம்பல் ஆரம்பமானது
இரவுகளின் பிடியில்
இறைஞ்சும் அன்னையின் குரலுக்கு
தந்தையும் இறங்கி வந்தார் ..

புரோக்கர் பரமசிவத்திடம்
ஒரு பிள்ளையின் குறிப்பிருக்காம்
பையன் பொண்டாட்டி
இறந்து ரெண்டு வருசமாம் ...


இனி தங்கத்துக்கு திருமணம் நடந்துவிடும் .......

No comments:

Post a Comment