Monday, October 7, 2013

" ஒரு கணம் "




ஒரு கணம் சிந்தித்திருக்கலாம்
உணர்வுகளுக்கு ஆட்பட்டு
உயிர் உருவும் உந்துதல் பெறுதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

கன்னி கழல் இழுத்து
கால் கொலுசு அறுத்து
குலம் சிதைக்கும்
கொடும் பாதகத்தை
கூட்டமாய் செய்வதற்கு முன்
ஒரு கணம் சிந்தித்திருக்கலாம் ...

காதலால் கைபிடித்து
காலமெல்லாம் கால் பிடித்து
கடமை செய்யும் மனையாளென
கைகள் நீளும் முன்
ஒரு கணம் நினைத்திருக்கலாம் ...

வாழ வந்த பெண்
வம்ச விளக்கு ஏந்தும் மகள் என
மறு மகள்
அவளை தீக்கிரை ஆக்குமுன்
ஒருகணம் நினைத்திருக்கலாம் ...

ஊர் வெறுத்து உறவறுத்து
உத்தமன் என ஒருவனுடன்
தடை தாண்டிய ஒருவளுக்காய்
ஊரை கொளுத்துமுன்
ஒரு கணம் யோசித்திருக்கலாம்

உனக்கென்று வீடுண்டு
உன் வரவுக்காய் ஏக்கமுண்டு
உன் சகோதரியாய் , மனைவியாய்
அவள் ஈன்ற உன் உயிர்க் கருவாய்
உன்னையே உயிராக மதிக்கும்
உன்னவர்கள் இருப்பாரென்று ...

அவர் உயிர் அறுந்தால்
உணர்வறுந்தால்
உன் உணர்வுகள் எப்படியென்று
ஒரு கணம் நினைத்துவிட்டால்
உலகில் குற்றம் குறைந்துவிடும்
உறவுகளின் கண்ணீரும்
அர்த்தம் பெறும்.

No comments:

Post a Comment