Monday, October 7, 2013

" தேடாதே "



உன் நினைவுகளின் நீட்சியில்
உன் உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
நினைவு மலரென நான் ...

அதன் மகரந்தங்கள்
உன் மனக்கருவறையில்
கடந்து சென்ற
பசுமையான நினைவுகளை
கருக்கொள்ள வைக்கிறது ...

உறை நிலைக் காலமொன்றில்
பாதி
உருகி விட்ட பனிப் பொம்மையென
என் உருவச் சிதலங்கள்
உறைந்து உன்னை
உருக்குலைக்கிறது
இருந்தும் சிலிர்த்து
எனை சிந்திக்க தவறியதில்லை நீ ,,,

பூக்கள் நிறைந்த வனத்தில்
உதிர்ந்துவிட்ட பூவொன்றின்
ஸ்பரிசத்துக்காய்
ஒற்றையாய் தவமிருக்கும் தும்பியென
உன் தவம் இன்னும் தொடர்கிறது ..

உள்ளம் கவர்ந்த ஓவியம் ஒன்று
உயிர் உருவிச் சென்றபின்னும்
அதன் நிழல் தேடி அலையும்
உன் மன விசித்திரம் ..
உனக்கும் எனக்குமான
பிரிவுப் பத்திரம்
உன்னை அறியாது
என்னால்
கைச்சாத்திட்ட பொழுதறிந்து
உடைந்து சிதறிய உன் மனவலி கண்டு
என் ஆத்மா உருகி உன்னை அணைத்தது
நீயறிய வாய்ப்பில்லை ..

காலம் கடந்து சென்றாலும்
கடந்துவிட முடியாத உன் காதல்
அடிக்கடி என்னை கட்டி அனைப்பதனால் தான்
உன் கை வளைவில் இருந்து
என் ஆத்மா கரைந்துவிட முடியுதில்லை ..

எங்கும் எனைத் தேடுகிறாய்
எதிலும் எனை நாடுகிறாய்
உன்னருகே தான்
உனக்கு பிடித்த உடையணிந்து
உனைக் கவரக் கால்க்கொலுசணிந்து
ஒட்டி ஒட்டி நடக்கிறேன் தென்றல் என ..
உணரமுடியாமல் நீ
உருவமற்ற நிலையில் நான் ...

அன்பே எங்கும் எதிலும்
எனைத் தேடாதே
ஒரு தென்றல் என
ஒரு நினைவுத் தீண்டல் என
உன்னுள் நான் அற்றுப் போகும் வரை
உன்னருகே தான் இருப்பேன்
எனவே எதிலும் எனை பார்க்காதே
அது அதுவாகவே இருக்கிறது
திரும்ப முடியாத தொலைவு நகர்ந்த
உன் தேவதையை தவிர ....

No comments:

Post a Comment