Tuesday, May 12, 2020

பயணங்கள்..



சிலுவையோடான
பயணங்கள்..

கர்த்தரிடம்
ஒரு விண்ணப்பம்
சிறிது நேரம்
நம் சிலுவைகளை
இடம் மாற்றி
சுமக்கலாமா...

காடு கடக்கும்
பயணங்கள்
கருகிக் கிடக்கும்
கனத்த உள்ளங்கள்..
வாழ்தலின் சாபமெல்லாம்
வரமாக வாங்கியபின்
வாழ்க்கையை
விமர்சிப்பதில் அர்தமில்லை..

போகிற வரை போகட்டும்..
என் வழியில்
பூக்களுக்கு இடமில்லை.

இவள் இப்படித்தான்.

அமானுஷ்யத்தின்

அழகியல் புரிந்தவள்தான்..
ஆர்ப்பரிக்கும்
கடலாக மனது
அலைகளை புரட்டிப் போட்டாலும்
அதன் விளைவுகளை
ரசிக்கப் பழகியதால்
அமானுஷ்ய ரசிகை இவள்.

ஒர் பாலைவனப் பயணத்தின்
பல்லிளிக்கும்
பாம்புகளை
சட்டை உரித்து
சற்றும் சலனமின்றி
கடந்துகொண்டிருப்பவள்...

வாழ்கை..
அவ்வளவு இலகுவல்ல
வாழ்ந்தவரை ....
எண்ணும் அளவுக்கு
அது இயல்புகளை
பறித்திருக்கும்.

தனக்காக வாழ
தகுதியற்ற படைப்புத்தான்
பெண்.
படைத்தவன் ப்ரம்மன் இல்லயா..

யாருக்காகவாவது
இவள் தேவைப்படுவாள்
ஆனால்
இவளுக்கு தேவைகள்
இருப்பது
உணர்வதுமில்லை
கிடைப்பதுமில்லை.

ஏதோ ஒர் நம்பிக்கை
சிறு ஒளிக்கற்றை
பின்பற்றி நடந்துவிட
புரிவதில்லை
சில மணி நேரம் தான்
சிறுக சிறுக
கலைந்து விடும்.

புரிந்த பிற்பாடு
இழந்தவை
திரும்புவதே இல்லை.

இவள் இப்படித்தான்.

உன் நினைவு

இந்த

மழை நாளின்
கவிந்த இருள்களின்
சில்லீர்ப்புகள்
ஏனோ
உன் நினைவுகளின்
ஈர்ப்பை எய்திருக்கவில்லை ..

ஏதிலியாய்
இரவுகளை
எந்திக் கழிக்கிறேன்
உன் நினைவு முகங்களில்
என் பொழுதுக்கான
புரிதல்களின் தேடல் ..

புன்னகைக்கிறாய்
புல்லரிக்கச் செய்கிறாய்
புணர்தல் பற்றி
பொழுதெல்லாம் பேசுகிறாய்
வெட்கம் நிரம்பி வழிகின்ற
வேட்கை குரல் ததும்பி
உன்
விரல் பிடித்து கூறுகிறேன்
நீ வேண்டும் எனக்கு .

மெல்லிய தூறலென
உன் ஓரக் கண் பார்வைக்குள்
உறைந்து சிலிர்க்கிறது
என் வெட்கப் பதுமை
சிறு புன்னகை தவழ்ந்த
உன் உதட்டு சுழிப்பில்
அமிழ்ந்துகொண்டிருகிறேன் ..

இந்த இரவுகளை
உன் நினைவு முகங்களால்
நிரப்பி ...

என்னோடு நீ இருந்தாய்.

அந்த நாட்கள்

மிகவும் ரம்மியமானவை..
என் விடியல்களில்
உன் பெயர்
எழுதி இருந்த
நாட்களவை...

தினமொரு நாளாய்
புதிதாய் பிறந்த
மகிழ்வோடானது
அந்த நாட்கள்..
நேசித்தலின்
இறுக்கங்களோ
சில விலகுதலின்
நெகிழ்வுகளோ
மனதை பிறழ்வாக்கா
நாட்களவை...

வாழ்வோடான
பற்றுதல்களை
கற்பித்து தந்த
பொழுதுகள் அவை...

யாரோடும் ஒத்துவராத
உடன்படாத எண்ணங்கள்
சிந்தனைகள்
ஆசைகள் தேவைகள்
அனைத்துக்குமான
வடிகாலாய் வாழ்ந்த
நாட்கள் அவை...

தூரங்கள் தொலைத்து
என்
தூக்கங்களோடும்
நீ
விலகாத நாட்கள் அவை..

ஆம்
அந்த நாட்கள் மட்டும்தான்
ரம்யமானவை..
என்னோடு நீ இருந்தாய்.

எதிலும் நீயாக ..

வா

வாள் முனையில்

என் உயிர் தடவு

போ

என் உயிர் உருவி

உடன் கொண்டு போ ..

தா

உன் இதழ் தடவும்

இனியமுதம்

இதழ்க் கடையெங்கும்

பிழிந்து ஒழுகவோர்

முத்தம் ..

எடு

என் கனிகொண்ட

கள்ளதனை

கடுகளவும் சிந்திடாது

கொடு

இறுக்கி கொள்ளும்

இரு இதயம்

இணை பிரிந்திடாத

வரம் ஒன்று ..

கேள் ..

என்னிடத்தில்

என்னை ...

மீள்

உன்னிடத்தில்

என்னை ...

வாழ்

என்னோடு

இணை பிரியாது நீ

நில்

என்னோடு கூட

எதிலும் ..

மீண்டும்

வா

தந்தெடுத்து

கொடுத்து கேட்டு மீள்

வாழ்ந்து நில்

என்னோடு

எதிலும் இவையாவும்

நீயாக ..

Wednesday, November 8, 2017

உனைத் தந்தேன்..

கலவி கொள்ளாது
கருவினில் சுமக்காது
மகவாக உருமாறிய
காதல் நீ..

உனக்காக
உனை தந்தேன்
உருமாறி
நான் நின்றேன்
எனக்காக
எதை தந்தாய்
ஏமாற்றம்
அதையீந்தாய்...

மதிப்பிழந்த
மாந்தளானேன்
மனமுடைந்து
பேதையானேன்
கொதித்தெழுந்து
குமைந்தொரு
வார்த்தை பெயர்ந்தால்
குலைந்துவிடும்
உன் குலம் நாசம்..

வேண்டாம்
வாழ்ந்துவிட்டுப் போ
வாழ்த்தி விடை பெறுகிரேன்.

Friday, October 6, 2017

( என் )மரணம்.

விரும்பியோ
விருப்பமின்றியோ
ஒர் வேண்டுதலாலோ
இரந்தோ
எனை தீண்டி இருக்கும்...

நம்பிக்கைக்கு அப்பால்
அவநம்பிக்கையின்
சில கரங்கள்
என் இருப்பினை
நிச்சயப் படுத்த எத்தணிக்கும்..

நெஞ்சுக் கூட்டின்
ஈரம் உலர
சுமந்த வயிறு
சுடுகாட்டு தீ சுமக்கும்..

ஆண்பிள்ளை அழக்கூடாது...
யார் சொல்லி கேளாமல்
உடன் பிறந்தது
ஊன் உருக
உளறி அலரும்..

தலைமுறை மூத்த
தலைநரையெல்லாம்
தம் இருப்பினை சொல்லி
அங்கலாய்கும்..

கூடப் படித்தவரும்
குளம் குட்டை துழைந்வரும்
மாசில்லா தோழி என
மகுடம் சூட்டி கண்ணீருகுப்பர்..

எங்கோ ஓர் மூலையில்
இழப்பறியா இருமலர்கள்
இயல்பாக கடந்து சென்று
எங்கே நான் என்று
எல்லோரிடமும் வினவக் கூடும்..

கண்ணீர் அஞ்சலியில்
கனத்து கடந்து
நாட்கள் மாதங்களாகி
ஆண்டுக்கொருமுறையென
அளவாக நினைவு கூர்ந்து
அதுவும் அருகி மருவி கடந்திருக்கும்.

இருந்தும்
மாறத புன்னகையோடு
மலர்களின் நடுவில்
என் இருப்பு
இன்னும் பல ஆண்டுகள்
கடந்தும்
சுவர்களில் மட்டும்
நிச்சயப் பட்டிருக்கும்.