Monday, October 7, 2013

" கலைந்த பொய்கள் "



எழுத்துப் பிழை இன்றி
இலக்கணமாக
இலக்கியமாக
இன்னும் பலவாக
வடித்து விடுகிறாய்
என் மீதான
உன் ஆசைகளை ....

கோடுகளாலும்
புள்ளிகளாலும்
வர்ணத் தெளிப்புகளாலும்
எதுவோ ஒன்றை வரைந்து
அதற்க்கு என் பெயர் சூடி
வழிபடுகிறதாக சொல்கிறாய் ...

மொட்டவிழும் முடிச்சுக்களில்
கட்டழகு கவிந்து
குலைந்து குவிவதாக
பட்டழகு மேனியின்மேல்
போர்த்திக்கொள்ளும்
பாவை என்
பாலாடையன்ன மேலாடையாக
படர்ந்துவிட
ஆசை கொள்வதாக
பிதற்றிக் கொள்கிறாய் ...

எண்ணிக் கொள்ளும்
நிமிட மணித் துளிகளும்
எண்ணி எண்ணுகின்ற
அனைத்துக் கால துளிகளும்
ஓர் குளிர்ந்த நீரோடையின்
பிரவாகம் போல்
உன்னை படர்ந்து
ஸ்பரிசிக்கும் என
கற்பனைகள் விரிக்கிறாய் ...

மெல்ல நடக்கும் தென்றல் என
என் மேனி உருக் கொண்டு
தத்தி தவழும் கிள்ளை முகத்தில்
உன் பிள்ளை முகம் தேடி
சலிப்பதாய் சலித்துக் கொள்கிறாய் ...

வெள்ளிக் கம்பிகளென
மேல் படரும் நரை முடியும்
என் முதுமையின் கம்பீரம் கொண்டு
மினு மினுத்து சிரிக்கும் பொழுது
உன் கரம் கொண்டு
மென்மையாய்
மெல் சுகந்தம் அள்ளும்
மல்லிகையின் சரம் கொண்டு
குழலாடும் தருணங்களிலும்
உன் கூட இருப்பேன் என
என் நெஞ்சள்ளி சிரிக்கிறாய் நீ ...

என் மறுப்புகள் எல்லாம்
என்னை மறுதலித்து
உன் கரம்பற்றி
என் காதலை கிறுக்கி செல்கிறது
ஒரு முத்த ஒற்றுதலில் ...
கலைந்த பொய்கள்
கலகலத்துச் சிரிக்கிறது
துகில் கலைந்த நாணத்துடன் .

No comments:

Post a Comment