Tuesday, August 28, 2012

காதல் பரிசாக



எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....


அன்றிலாய் உன்னுள்
ஒன்றிட நினைத்து
தென்றலாய் தழுவினேன்
மனம் கன்றலாய் போனது மிச்சம் ..


ஒரு மனதாய் காதலித்தோம்
நீ மட்டும்
ஓர வஞ்சனை செய்ததேனோ ..
மனப் பந்தலில்
மாலை இட்ட என்னை
மரண பந்தலுக்குள் தள்ளவா
மணச் செய்தி தந்தாய் ..


குருதிக் கிடங்கில்
குளித்து கிடக்கும்
குட்டி இதயம்
குடை சாய்ந்து குமுறுகிறதே
கண்களுக்கு குற்றாலமும்
மனதுக்கு மயானமும்
நினைவுக்கு நிழலையும்
காதல் பரிசாக தந்தவனே


உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...
உன்னை தழுவும்
நினைவு காற்றுக்குள்
என்றும் தென்றலாய் நான் இருப்பேன்

எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....
 

நம் காதல்





தொலையாத இரவிலும்
தொலைகின்ற நினைவிலும்
தொடராய் தொலைகிறது - என் காதல்


பால் நிலவும் பருவத்து அடிமை
பகல் நிலவு இவளும்
பருவத்து காதலுக்கு அடிமை
தினம் ஒரு பார்வையில்
தித்திக்கும் நினைவு
தீப்பற்றி கொள்ள வாழ்கிறது -நம் காதல்


முத்தமிட்டு செல்லும் -உன்
மூச்சு காற்றை சுமந்த
தென்றல் சொல்கிறது நீ
சுமக்கும் நம் காதலை ...


நீ சிந்தும் சிரிப்பில்
சிதறி தவிக்கிறது என் மோகம்
பற்றிக் கொள்ள பலதடவை ஏங்கினாலும்
சில முகத்திருப்பலில் முழுமை அடைகிறது மோகம்..