Sunday, February 21, 2021

கற்பிதம் அறியாதவள் ...

 


                                                           தன்னிலை உருகி 

மெய்யது தளர்ந்து 

கையது கொண்டு 

மேகத்துகளின் 

மெய்யுனுள் மறைந்து 

மினு மினுத்து சிரிக்கிறது 

நிலவு ..

உன் மீதான என் காதலை போல ..


உன் விரல்கள் 

இடைத்தொடும் பொழுதெல்லாம் 

இதழ்கள் வேர்க்கிறது 

உன் இதழ் கொண்டு 

என்

வேர்வை துளிகளை 

துடைத்து விடுகிறாய்  ...


துடைத்துப் பிரியும் 

அவசர பொழுதுகளில் 

அவை உணர்வதில்லை 

பரிமாற்றத்தின் 

தடைப்பாடுகள்..

மீண்டும் மீண்டும் 

இதழ்கள் வேர்ப்பதாகவும் 

அதை இதழ் கொண்டு 

நீ துடைப்பதாகவும் 

பேசிக் கொள்கிறது 

சமாதானத்துக்கான 

இருதய துடிப்புகள் ...



நான் முட்டாள் என்றும் 

முத்தத்தின் 

கற்பிதம் அறியாதவள் 

என்றும் 

அடிக்கடி சொல்லிக் கொள்கிறாய் ..

மீண்டும் மீண்டும் 

நான் தெரியாதவளாகவும் 

நீ எல்லாம் தெரிந்தவனாகவும் ..


உன்னிடம் சொல்ல முடியாத 

ரகசியம் ஒன்று 

மெல்லச் சிரிக்கிறது 

எப்படி சொல்வது 

உன் இளம் சூட்டு முத்தத்தில் 

என் உதட்டு எச்சில்  

காய்ந்து கிடப்பதை ...


நழுவிச் செல்லும் 

நாணங்களை படித்து 

உன் நகர்வுகள் 

பெருகிக்கொண்டே போகிறது ..


சர்ப்பம் போல 

அது என் 

உடல் படர்ந்து 

செறிவிழந்த  கைகளில் 

கால் புதைந்து 

இந்த 

நீண்ட பெரும் வான வெளியில் 

சிதறிப்  பறக்கும்

பறவைகள் போல 

இருதயம் 

துடிக்கும் இடத்தில்  

சிதறிப்  பறக்கிறது 

உன் உதட்டு 

வரிகளில் முளைத்த 

முத்தப் பட்டாம் பூச்சிகள் ..