Sunday, April 7, 2013

காத்திருப்பு

chinese photo chinese_girl_painting60-1.jpg 

கருநீல  வானின்
நீண்ட விரிப்புக்குள்
விதைக்கபட்ட விண்மீன்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தம் இருப்பினை காண்பிக்க
ஒளிந்து ஒளிர்ந்தவண்ணம் இருந்தது ...

மேக திரள் விலக்கி
மோக முட்களை அனுப்பும்
காம பிரம்மன்
கதிர் அலர்ந்தவனை காணோம் ...

தேக துகள் நுழைந்து
பாகத் தானைக்குள்
போகத்தேனை சுரக்கும்
மெல்லிய தென்றல்
மெல்லிடை தொடும்
நாணக் குடை விரிந்து
வானை அது மறைக்கும் ...

வான் காணா பிறை ஒன்றை
தான் காண விரல் கீறும்
பால் ஊறும் செவ்வாயும்
பல் பதிந்து சொல் குழறும்
வெம்பி தணியும்
கொங்கை குடை நிலத்தில்
தொங்கும் சங்கொன்று தாளம் போடும்

எங்கே எனும் கேள்விக்கு
இங்கே என்று இருப்பினை காட்ட
தடதடக்கும் இதய தாளம்
காதலில் தனிமை இனிமை
மோகம் புதுமை
மேகம் கவிதை
நிலவில் இருளும் இனிமை
பிரிவும் இன்னிமை

இன்னும் காணவில்லை
இருள் கிழிக்கும் என்னவன் ...

நம்பிக்கை

 
உன்னையும் என்னையும்
மீறிய காதல் பயணத்தில்
என்றோ இணைந்த பயணிகள் நாம்
இந்த காதல் பயணத்தின்
முடிவு தெரியவில்லை
இடம் மாறுதல்களும் புரிவதில்லை
தடு மாறுதலும் தெரிவதில்லை

எதிர் எதிராக
வெறும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தோம்
இன்று காதல் எனும் புத்தகத்தை
கை கோர்த்து படிக்கின்றோம்
எதோ ஒரு சந்தர்பத்தில்
கை தன்  இணைப்பை தளர்த்தலாம்
காதல் பாடத்தின் பகுதி மாறலாம்
கல்யாணத்தில் அதன் விகுதி தொடங்கலாம்

அன்றில் பாதை மாறலாம்
பயணங்கள் தோற்கலாம்
உனக்கும் எனக்குமான
உன்னத காதல் சமாந்தரங்கள்
பிரிவினால் இணையாது போகலாம்

வாழ்வு முழுமைக்குமான இந்த அன்பை
வாழ்ந்து முடிக்க
நாம் மட்டுமல்ல
நம்மை போல் பலரும் துடிகின்றனர்
தம் காதல் பயணத்தில்
எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில்
இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்
இணையக் காதல் .

வாழ்க நீ பல்லாண்டு ...

Sad Wedding 

வெட்கத்தை விதைத்துக் கொள்ளும் பொழுதுகளும்
சத்தத்தை அடக்கி சயனித்து பயணிக்கின்றது
எட்டத்தே ஒரு கோட்டான்
எக்கி எக்கி குரல் எழுப்பி
அச்சத்தை இதய சந்துகளில் அலைய வைத்தது

பட்டென்று எங்கோ எதோ
படர்ந்துவிட்ட காற்றின் எதிர்ப்பில்
பயணித்து அலைந்த
முடிகளின் முனையில்
முடியாமை மண்டி இடுகின்றது ...

மரணப் பாதையிலும்
மனதோடு இணைந்து
மகிழ்வில் பயனிப்பாய் என்றிருந்தேன்
மனதோர சுவர்களில்
நிழல்களை பதித்த நீ
நிஜங்களை வேறு ஒருத்திக்கு
மானியம் ஆக்கியதேன் ...?

விசிறியாய் மடியும் இமைகளிலும்
சடுதியாய் வந்தமரும் உன் நினைவுச் சுமைகள்
கடு கதியில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற  வரிவடிவம் புலப்படுகிறது ...

இரவின் தனிமைகளை வெறுமைகள் ஆக்கியபடியே
உன் நினைவுகளின் நகர்வுகள் தொடர்கிறது ..
கனவுகளின் சுமைகளில்
அடிக்கடி நீ கருத் தரித்து குறைப் பிரசவமாகிறாய் ..
ஒரு பாலைவனத்தின் வறண்ட பிளவுகளாய்
வறண்டு தகிக்கும் இதய நாக்குகள்
வடிகிண்ற கண்ணீர் துளிகளை நக்கி நனைகின்றது ...

விடியாத இருளும் முடியாத துன்பமும்
மிரட்டியபடி விரட்டும் கோர இரவின் பிடியில்
கனவுகள் குலைந்த குயிலாய் கூவுகின்றேன் அகாலத்தில் ...
வாழ்க நீ பல்லாண்டு ...