Tuesday, April 30, 2013

யுக யுகமாய்

 

யுக யுகமாய்
உன்னிடம் பரிமாறிக் கொள்வதற்காகவே
உள்ளக் கிடக்கைகளை
உதடு உளறிக் கொள்ளும் பல வேளைகளிலும்
மெல்ல துளிர்த்து
மேனியெங்கும் வியாபிக்கும்
உன் எண்ண அலைகளுக்குள்
சிக்கி மௌனிக்கிறது நெஞ்சம் .

உன் கனவுக் கலவியுடன்
கண் விளிக்கும் என் காலைகள்
ஏதோ களிப்புடன்தான் மிளிர்கிறது
கடந்து செல்லும் பால் கார சிறுவனிடம்
ஏதோ ஒரு பாசம்
உன் பெயரில் அவன் வாழ்வதனாலோ ?

கண் சிமிட்டும் கடிகார முட்கள்
காதலுடன் கூடும்
ஒவ்வொரு மணித் துளியும்
கனக்கும் உன் காதலை சுமந்து

உன் ஒரு புன்னகையில் பூத்த என் உலகம்
இதழ் உதிர்ந்து இருள் கவிந்து கொள்கிறது
நீ இல்லாத இந்த பொழுதுகளில் நுழைந்து

தினமும் ஒரு மடல் வரைகிறேன்
உன்னிடம் கொடுப்பதற்காய்
உமிழும் பேனாவின் குமிழ் முனைகளில்
ஒட்டிக் கொண்டு பிரிய மறுக்கிறது என் பிரியம்
தொலைந்த உன்னை தேடி தவிக்கிறது என் எழுத்தும்
எங்கோ நீ எழுதும் காவியத்துக்கு
இங்கே நான் முகவுரை எழுதுகின்றேன்
முடிவுரை எழுத முடிவுகள் கொண்டாலும்
உன் முகம் வந்து முழுவதுமாய் சிரிக்கும் பொழுது
முடிந்துவிடுகிறது என் முடிவின் ஆயுள் .

யுக யுகமாய் உன்னிடம் பரிமாறிக் கொள்வதற்கே
உருகி உமிழ்ந்து உரு மாறுகிறது என் நினைவுகள் ...

Tuesday, April 23, 2013

மெழுகு

 


தன் ஜீவிதம் அழிவதற்காக
எந்த மெழுகு திரியும்
கவலைப் படுவதில்லை
தான் உருகி
தனை ஏற்றியவனுக்காகவே
உருகி ஒளியை பிரசவித்து
பிரவகித்து மடிகிறது .

உருகும் மெழுகின்
கொதிக்கும் வெம்மை என
மனதின் ஓரங்களில்
வெறுப்பு விரக்தி  மிருகத்தனம்
எல்லாம் தக தகக்கும் அவ்வேளையிலும்
என்றோ ஏற்றப்பட்ட மெழுகு
அதன் கடமையை நினைந்து
இன்று உருகி தீர்த்துவிட்டது .

அதன் வெம்மையில்
குளிர் காய்ந்த பட்சி ஒன்று
அதன் இணைதேடி இரை தேடி பறக்கிறது
உயிர் கொடுத்த மெழுகோ
உருகி ஒழிந்துவிட்டது .

இழப்பிலும் ஒரு
இனிய காவியம் எழதிய திருப்தியில்
உருகிய மெழுகும் அதன் மென்மையும்
விடை பெறுகிறது .

Sunday, April 21, 2013

பயணம்

 
உடைந்து சிதறும்
என் உள்ள கனவுகள்
உணர்விழந்து
உரிமை துறந்து
ஒருக்களித்து துடிக்கிறது

இந்த இரவு
வராமலே போயிருக்க கூடாதா
இந்த உணர்வு
என்னை தொடாமலே போயிருக்க கூடாதா
யாருமற்ற பாலை நிலத்தில்
எறியபட்ட பூவென கிடக்கிறேன்
என் நீரெல்லாம்
உன் நினைவுகளால் உறிஞ்சப் பட்டு
உமிழப்படுகிறது

என்ன செய்வாய் இந்நேரம்
எதிரே இருப்பவள் இன்பத்தில் இருப்பாளா
உன்னை இழந்து உணர்வை கொடுப்பாயா
என்னை மறந்து இயைந்து இணைவாயா
சொல்லிவிடு
மரண சாசனத்தில் உனக்கான
மறக்கபடாத தண்டனை ஒன்றை நான் எழுத .

உன் உதடுகளின் ஒற்றுதலுக்காயும்
உன் கரங்களின் அத்து மீறலுக்காயும்
ஆன்மாவின் கலவிக்காய்
அத்து மீறி என் இதயம் துடிக்கும் இதே வேளையில்
அனைத்தையும்
இன்னொருத்திக்கு என் சமதமின்றியே
தாரை வார்கின்றாயா ..?

உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு
முற்றுப் புள்ளி தேடி மூச்சு திணறி தவிக்கின்றது
நீ இருந்த இதயம் உன் நினைவு சுமந்த இதயம்
வெளிநடப்பு செய்கிறது ..இன்னும் உன்னை நினைகின்றேனாம் .
முடிந்துவிட்ட காதல் பயணத்தின்
முகாரிகள் இன்னும் முனகியவண்ணம் மனக்கூட்டில் .

என் காதல் இறுதி பயணத்தின் பிரியாவிடை கொடு
முத்தத்தால் வேண்டாம்  அது எச்சில்
முடிந்தால் என் நினைவுகளை எரித்து .
முடிந்துவிடும் பயணம் .

என் இந்த சாபங்கள் ...


நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே ...

Saturday, April 20, 2013

தனிமை

 

இறுக பற்றி
இறுக்கி இழுக்கிறது
தடுக்கி விழுந்து எந்திரித்து பார்த்தபொழுது
என்னை சூழ யாருமில்லை
அது கோரத்தனமான முட்களால்
கீறி உடலெங்கும் உதிரம் உதிர்ந்துகொண்டிருந்தது .

ஒரு கை நீட்டி துளாவுகின்றேன்
உதவிக்கு ஒருவராவது வருவாரென்ற நம்பிக்கையில்
யாரும் தென்படவில்லை
அது  தன் வேலையை தொடர்ந்தது .

கீறிய வடு எங்கினும்
மரண வலியை  பிறப்பித்து சிரித்தது அது .
விடுதலைக்காக ஓர் வழியை தேடினேன்
எல்லா கதவுகளும் அடைபட்டு கிடக்கிறது .
அது தன் வேலையை தொடர்கிறது

அழுதேன்.. உரக்க அழமுடியாத சூழலில்
உதவி தேடி அழுதேன்
ஒருவரையும் காணோம்
என் உயிர் துடிப்பு ஒருவர் காதுக்கும் எட்டவில்லை
விம்மலில் முடிந்தது தேடல்
அது தன் கரம்கொண்டு குரல் வளையை நசித்து ..

சண்டை காரன் காலில் வீழ்வதே மேல்
சரணாகதி அடைந்தேன்
எனை ஆரத் தழுவியது
அது என்னை அரவணைத்து கொண்டது .

சமாதி

 

எங்கோ தொலைவினில்
என் நினைவுகளின் படர்தல்
நிச்சயப் படுத்திக் கொள்கிறது
என்னுள் உன் இருப்பை

உறையும் பனிப் பாறை என
உன் நினைவுகளின் இருப்பும்
உன் நிஜங்களின்  இல்லாமையும்
இறுகி உறைகிறது இதயமெங்கும்

நீ வேண்டும்
என் ஆன்மாக்கு  உயிரூட்ட
உலர்ந்து உதிரும்
ஒற்றை ரோஜா இதழ் போல
என் எண்ணக் கனவுகள் அனைத்தும்
ஒவோன்றாய் உத்திர ஆரம்பித்து விட்டது
இன்னும் சில மணித் துளிகளில்
அவற்றின் சமாதி நிர்ணயிக்கப் பட்டுவிடும் .

ஓர் ஜாமத்தில்
ஒற்றையாய் காய்கின்ற இந்த நிலவு
என்னுள் உன் விம்பத்தை
வார்த்து மௌனிக்கின்றது
ஆசைகளும் ஆர்வங்களும்
எரிந்து கருகும் வேளையிலும்
ஒற்றை தலையணை
உன் பெயர் சொல்லி நனைகிறது .

ஒரு கணம் உன் அணைப்பை தேடும் உள்ளம்
மறு கணம் உன் இன்மையின் நிஜத்தில் எரிகின்றது
இந்த தவிப்புக்கள் எல்லாம்
எட்டி நின்று தன்  கூரிய நகங்களால்
என் இதயக் கூட்டை பிய்த்து
வடியும் உதிரத்தை உறிஞ்சும் பேய்கள் என
வதைத்து சிதைகின்றது ..

இந்த இரவை பற்றி பிடித்திருக்கும்
வெண் பணியை போல
என்னை பற்றி படரும் உன் நினைவுகள்
மெல்ல மெல்ல படந்து உறைகிறது உணர்வுகளில்

பாதைகள் அற்ற
என் இதய வீடுக்குள்
நீ வந்து போகும் ஒற்றையடி பாதை கூட
மெல்ல அடைபடும் ஓசை கேட்கிறது ..
தனிமைகளை விதைத்து செல்லும்
உன் பயணம் தொடங்கிவிட்டது
தடுமாறி தடம் மாறி என் பயணம்
அதை பற்றி படர்கிறது .

Thursday, April 18, 2013

வா வீரா எழுந்து வா

http://upload.wikimedia.org/wikipedia/commons/4/44/Prabhakaran_-_Thamizhar_eluchiyin_vadivam.jpg 


தானை ஒன்று கொண்டு
வானை வெல்ல புறபட்டான்
காளை அவன் வீரம் தன்னில்
கயவர் வீழ்ந்தார் மண்ணில்
கண்படும் அவன் சோபை தன்னில்
வரிப் புலியது வாழும் உள்ளில் ..

சேரனும் சோழனும்
நாம் காணா வரலாற்று நாயகராம்
இவர்தம் இழையங்கள் வரம்பெற்று
எழுந்தவந்தான் காலம் தந்த கரிகாலன்

அன்னையை பார்த்திடலாம் அரவணைப்பில்
தந்தையை பார்த்திடலாம் பாசத்தில்
அண்ணனை பார்த்திடலாம் நன் நெறியில்
தம்பியை பார்த்திடலாம் தயைகளில்
வள்ளலை பார்த்திடலாம் எண்ணம் தன்னில்
மாமனை பார்த்திடலாம் புன்னகையில்
நண்பனை பார்த்திடலாம் தோள் கொடுப்பதில்

உறவென்று வேண்டுமென்றால்  இவை நீ கண்டிடலாம்
உறுமல் தான் வேண்டுமென்றால் பகை நீ கொண்டிடலாம்
உறுமல் தான் கொண்டுவிட்டால் உறக்கம் தான் மறந்திடுவான்
பகைவர் உதிரம்தான் காணாது ஒரு மிடறு அருந்திவிடான் .

தமிழ்  மொழி காக்க இனம் காக்க தன்  மானம் காக்க
வீட்டுகொருவர் நாடி நின்றான்
தன் வீட்டினையே தந்துவிட்டான்
மகத்தான தலைவன் தன்னை  மாவீரன் என்று சொன்னார்
மரணம் தான் தழுவாமல் மாவீரன் ஏது என்றான் ..
மகளுக்கும் மகனுக்கும் மடங்காக பணம் கொள்ளும் தலைவர் தன்னுள்
மறவர்தம் வாழ்வுக்காய் மகவு அனைத்தும் தந்தான்  ..

வள்ளலில் சிறந்தவனாம் கர்ணன்
அவனை விஞ்சி வாழ்தலில் சிறந்த நீ எம் மன்னன்
கள்வராய் இனம் சூறை கொள்ள
இனம் காணாது வளர்ந்த புல்லுரிவி
கரிகாலன் உன் சேனை தனை காவு கொள்ள
காலனும் கொண்டானையா மரணவலி .

மாவீரன் இறப்பதில்லை மரணம் அவனை கொள்வதில்லை
வா வீரா எழுந்து வா
வாஞ்சை கொண்ட தமிழ் புலிகள்
வானரம் போல் அணை  செய்வோம்
எதிரி வான் அடைய வழி சமைப்போம் .

Wednesday, April 17, 2013

விழிகளின் சிவப்பு

http://www.catholicchapterhouse.com/blog/wp-content/uploads/2011/11/crying-eye.jpg 


உன் கை பிடித்து நடந்த
கனவு நிமிடங்கள்
கரைகின்றது கண்ணீரில்
கரையேற துடுப்பு தேடும்
விழியின் ஈர்ப்பில்
விரிந்து அமிழ்ந்து
உதிர்கிறது ஒரு துளி நீர் உன் இருப்பு தேடி .

முடியாத தனிமை
முதிராத இளமை
கனியாத காதல்
காணாத கோலம்
ஒற்றை ரோஜாவின் இதழ் உதிர்வில்
ஓய்ந்து உறைகின்றது
கனவின் கை கலப்பில்
கலைந்த உறக்க விரிப்பில்
உதிர்ந்து சிதறும் கண்ணீர் முத்துக்கள்
கை கோர்த்து பெரும் வெள்ளத்தில்
விதைத்து செல்லும் சோக விம்பங்கள்
உடைந்து ஊறும் கன்னங்களில் ..

என்று எங்கு எப்போது எப்படி
விடை தெரியாத வினாக்களின்
விகுதிகளாய் விழிகளின் சிவப்பு
விடியலுக்காய் இருக்கலாம்
அன்றில் வீழ்வதட்காயும் இருக்காலாம் ..

Sunday, April 7, 2013

காத்திருப்பு

chinese photo chinese_girl_painting60-1.jpg 

கருநீல  வானின்
நீண்ட விரிப்புக்குள்
விதைக்கபட்ட விண்மீன்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தம் இருப்பினை காண்பிக்க
ஒளிந்து ஒளிர்ந்தவண்ணம் இருந்தது ...

மேக திரள் விலக்கி
மோக முட்களை அனுப்பும்
காம பிரம்மன்
கதிர் அலர்ந்தவனை காணோம் ...

தேக துகள் நுழைந்து
பாகத் தானைக்குள்
போகத்தேனை சுரக்கும்
மெல்லிய தென்றல்
மெல்லிடை தொடும்
நாணக் குடை விரிந்து
வானை அது மறைக்கும் ...

வான் காணா பிறை ஒன்றை
தான் காண விரல் கீறும்
பால் ஊறும் செவ்வாயும்
பல் பதிந்து சொல் குழறும்
வெம்பி தணியும்
கொங்கை குடை நிலத்தில்
தொங்கும் சங்கொன்று தாளம் போடும்

எங்கே எனும் கேள்விக்கு
இங்கே என்று இருப்பினை காட்ட
தடதடக்கும் இதய தாளம்
காதலில் தனிமை இனிமை
மோகம் புதுமை
மேகம் கவிதை
நிலவில் இருளும் இனிமை
பிரிவும் இன்னிமை

இன்னும் காணவில்லை
இருள் கிழிக்கும் என்னவன் ...

நம்பிக்கை

 
உன்னையும் என்னையும்
மீறிய காதல் பயணத்தில்
என்றோ இணைந்த பயணிகள் நாம்
இந்த காதல் பயணத்தின்
முடிவு தெரியவில்லை
இடம் மாறுதல்களும் புரிவதில்லை
தடு மாறுதலும் தெரிவதில்லை

எதிர் எதிராக
வெறும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தோம்
இன்று காதல் எனும் புத்தகத்தை
கை கோர்த்து படிக்கின்றோம்
எதோ ஒரு சந்தர்பத்தில்
கை தன்  இணைப்பை தளர்த்தலாம்
காதல் பாடத்தின் பகுதி மாறலாம்
கல்யாணத்தில் அதன் விகுதி தொடங்கலாம்

அன்றில் பாதை மாறலாம்
பயணங்கள் தோற்கலாம்
உனக்கும் எனக்குமான
உன்னத காதல் சமாந்தரங்கள்
பிரிவினால் இணையாது போகலாம்

வாழ்வு முழுமைக்குமான இந்த அன்பை
வாழ்ந்து முடிக்க
நாம் மட்டுமல்ல
நம்மை போல் பலரும் துடிகின்றனர்
தம் காதல் பயணத்தில்
எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில்
இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்
இணையக் காதல் .

வாழ்க நீ பல்லாண்டு ...

Sad Wedding 

வெட்கத்தை விதைத்துக் கொள்ளும் பொழுதுகளும்
சத்தத்தை அடக்கி சயனித்து பயணிக்கின்றது
எட்டத்தே ஒரு கோட்டான்
எக்கி எக்கி குரல் எழுப்பி
அச்சத்தை இதய சந்துகளில் அலைய வைத்தது

பட்டென்று எங்கோ எதோ
படர்ந்துவிட்ட காற்றின் எதிர்ப்பில்
பயணித்து அலைந்த
முடிகளின் முனையில்
முடியாமை மண்டி இடுகின்றது ...

மரணப் பாதையிலும்
மனதோடு இணைந்து
மகிழ்வில் பயனிப்பாய் என்றிருந்தேன்
மனதோர சுவர்களில்
நிழல்களை பதித்த நீ
நிஜங்களை வேறு ஒருத்திக்கு
மானியம் ஆக்கியதேன் ...?

விசிறியாய் மடியும் இமைகளிலும்
சடுதியாய் வந்தமரும் உன் நினைவுச் சுமைகள்
கடு கதியில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற  வரிவடிவம் புலப்படுகிறது ...

இரவின் தனிமைகளை வெறுமைகள் ஆக்கியபடியே
உன் நினைவுகளின் நகர்வுகள் தொடர்கிறது ..
கனவுகளின் சுமைகளில்
அடிக்கடி நீ கருத் தரித்து குறைப் பிரசவமாகிறாய் ..
ஒரு பாலைவனத்தின் வறண்ட பிளவுகளாய்
வறண்டு தகிக்கும் இதய நாக்குகள்
வடிகிண்ற கண்ணீர் துளிகளை நக்கி நனைகின்றது ...

விடியாத இருளும் முடியாத துன்பமும்
மிரட்டியபடி விரட்டும் கோர இரவின் பிடியில்
கனவுகள் குலைந்த குயிலாய் கூவுகின்றேன் அகாலத்தில் ...
வாழ்க நீ பல்லாண்டு ...