Monday, January 28, 2013

கயல்விழி

 
வான் மகளும்
மஞ்சள் பூசும்
பொன்மாலை வேளை
வண்டுகள் திருடிய
தேன் எல்லாம்
வகை வகையாய் பதுக்கும்
தேன்  மாலை ...
ஆதவனும் வீடு திரும்புவான்
ஆடு மேய்த்த
அருக்கானியும் வீடு திரும்புவாள்
பார்மகளும் மஞ்சள்
போர்வை கொண்டு
பொழுதை மூடுவாள்

கார் குழலில்
பூச்சூடி
கண்ணிரண்டில் மை தீட்டி
கமகமக்கும் அத்தர் இட்டு
கையிரண்டில் வளையல் மாட்டி
காதுகளில் ஜிமிக்கி ஆட
கன்னமதில் வெட்கம் பூக்க
நில மகளும் நாணும்
நீள் விழிகள் தொலை நோக்கும்

வண்டி கட்டி குதிரை பூட்டி
வருவேன் என சொன்னவர்தாம்
வருகின்றாரோ
அன்றில் வெறும்
வண்டினமாகி
மலர் விட்டு மலர் தாவி
மருகும் உளம் காணாது
ஒரு பொழுது தவிக்க விடுவானோ ..

வெறும் அகம் நோக்கின்
அகுது கெஞ்சும்
புறம் நோக்கின்
அகல்கள் கெஞ்சும்
இதழ் நோக்கின்
இனிமை கொஞ்சும்
உன் முகம் நோக்கின்
முழுதும் அஞ்சும்
என் முளுமைகளும் கெஞ்சும் ..

நிலவு கண்டு கூசும் வெண்மை
நினைவு கொண்டு தேடும் பெண்மை
கனவு கண்டு காளையர் பிதற்றும்
கட்டழகி கயல்விழி
தொட்டனைக்க வருவாரோ என
காத்திருக்கும் வேளைதனில்
எட்டி நின்றே வதைதிடுவானோ
இல்லை அருகில் வந்து
அணைத்திடுவானோ  ...?
 

Sunday, January 27, 2013

துணுக்கு

 

உன் நினைவுகளின் இருப்பு
உன் மீதான காதல்
நம் பிரிவு
நிமிடத்தில் எழுதியவை

வெறுமைகளின்
வறண்ட நிலத்தில்
சில பசுமை விதைகளாய்
உன் புன்னகை
தூறல்

என் கனவுத்தேரை
கடுகதியில் அழைத்து
இழுத்து செல்லும்
நினைவுகளே நீங்கள்
சில்லுகள்

விரைந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை வனத்தினுள்
வழிகாட்டியாக
அவ்வப்போது உன் வார்த்தைகள்
கொசுத் தூறல்

மனம்தெருவோரம் நின்று திரும்பி பார்த்தேன்
என் மனவோரத்தை போல
பல மேடு பள்ளங்கள்
குப்பை கூளங்கள்
குட்டைகள்
கோவில்
சுடுகாடு
பூவனம்
என நிறைந்து வழிந்து கொண்டிருந்தது ..

Monday, January 21, 2013

அழகிய நிலா

 

அழகிய நிலவாய்
உன்னை போல்
அரும்பாய் இருந்திருந்தால்
அனைவர் மனதிலும்
அழகாய் சிம்மாசனம் இட்டிருக்கலாம் ...

அளவில்லா கொஞ்சலும்
அன்பான கெஞ்சலும்
அட்ச்யமாய் கிடைத்திருக்கும்
பூ பூவாய் சிரிப்பும்
புன்னகையின் தேடல்களும்
உன் பிஞ்சு மனதின் கள்ளமில்லா சிரிப்பில்
கல கலவென பூத்து கமழ்ந்திருக்கும் .

வஞ்சமிலா நெஞ்சணைத்து
வளவளக்கும்  பாஷை கேட்டு
ஒவொரு உளறல்களுக்கும்
உருப்படியாய் வார்த்தை  தேடி
உவகை கொண்டு மகிழ்ந்திருப்பர்

சிரி இபொழுது மொத்தமாய் சிரி
வயதானால் உன் வாயை அடைக்க
வாலிபர்கள் காத்திருப்பர்
உன் வனப்பு மீது மோகம் கொண்டு
காமுகர்கள் வலை விரிப்பார்
காதலனால் நீ ஏமாற்ற படலாம்
கணவனால் வஞ்சிக்க படலாம்
நண்பனால் துரோகிக்க படலாம்
நயவஞ்சகங்கள் சூழ்ந்து
நலுங்கு பாடலாம் ..
ஆதலால் இன்றே சிரித்துவிடு
எதிர் காலம் உனக்கு எப்படி இருக்குமோ ..!!!

Thursday, January 10, 2013

சிறு பருவம்

 


நீயும் நானும்
நிழலாடிய மரங்களும்
நினைவாடிய செயல்களும்
குழைந்தாடிய  வனப்பும்
நுழைந்தடிய புனலும்
மனதெங்கும் நினைந்தாடுகிறது ...

நாம் கடந்து வந்த
நம் சிறு பருவம் எல்லாம்
பெரும் பொக்கிசங்களாக
மனதின் ஓரத்தில்
மகிழ்வினை பிரசவித்து கொண்டிருகிறது
நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் ...

நுண்ணிய எறும்பு பிடித்தோம்
நூல் கொண்டு பட்டம் விட்டோம்
தெள்ளிய ஓடையிலே
தெவிட்டாது மீன் பிடித்தோம்
துள்ளிய  கன்றடக்கி
தூய்மையாய் நீராட்டினோம்
மெல்லிய சிரிபொலியில்
மகிழ்வின் எல்லைகள் தொட்டோம் ...

பிஞ்சு பருவம்
நஞ்சற்ற அமுதம் ..
வஞ்சகங்கள் தெரிவதில்லை
வன் செயல்களும் புரிவதில்லை
வருந்தி எதிலும் வாயடியதில்லை
எண்ணியதை செய்தோம்
அதில் ஏற்றதாழ்வு இல்லை
கண்ணியம் குறைந்ததில்லை
களவு ஏதும் இருந்ததில்லை ..

இன்று நாம் வளர்ந்து விட்டோம்
நம் இன்பங்கள் எல்லாம் தொலைத்து விட்டோம்
வெறும் வம்பர்கள் மத்தியல்
எய்யும் அம்பென்று ஆகிவிட்டோம் ..
அது எம்மையும் தாக்கலாம்
பிறரையும் தாக்கலாம்
தாக்கங்கள் நிச்சயிக்கபட்டவை
தடங்கல் இன்றி தன் பயணம் அது தொடரும் ...

இருந்தும் ஆழ்மனதின் ஆசை ஒன்று
ஓசை எழுப்புகிறது
மீண்டும் அந்த பால்ய பருவம்
மீள் எழுச்சி கொள்ளாதோ ...

Tuesday, January 1, 2013

நெருஞ்சி..

 

 தவிர்க்க முடியாத
பல பொழுதுகளை
களவாடி செல்லும்
உன் நினைவு விம்பங்களுக்கு
உருவம் கொடுத்து பார்க்கின்றேன் ..
ஓவொன்றும் என்னுள் உடைகின்றன ...

என்னை சூழ்ந்திருக்கும்
இந்த அமானுஷ்யத்திலும்
அருவமாய் உன் உருவமே தெரிகிறது
கண் மூடி துயில நினைக்கிறேன்
இணையும் இமைகளின் ஊடே
உள்  நுழைந்து உருவம் கொள்கிறாய் கனவாக ..

அணு அணுவாய் இம்சித்து
அனைத்தையும்
உன் வசப்படுத்த
உன் நினைவு கரங்களின்
ஆத்தம பிடிப்பில் அடங்கி அமிழ்கிறேன் ..

ஏக்கமாய் ஒரு வார்த்தை
என்னில் இருந்து பிறக்க
உன்னில் இருந்து
கணமும் தயக்கமிண்டி பிறந்தது
அது நான்தானா ...?
உடைந்து சிதறிய
கண்ணாடி கோப்பை என
பரவி தெறித்தது இதயம் ..
பரிதாபம் ..
சிதறிய ஒவொரு துண்டிலும்
தெரிந்தாய் விம்பமாக...

நெருஞ்சியாய் வார்த்தைகள்
நெஞ்சை தைப்பதை அறிதும்
சிதறிய துகள்களில்
உன்னை பார்க்க தவறவில்லை இதயம் ..