Monday, May 27, 2013

வலி

யாரும் அற்ற
ஓர் பாலை நிலத்தில்
நடக்கிறேன்
எதிரே தெரியும்
நீர் அலைகள் கண்டு
ஒரு கணம் தாகம் கொள்கிறது மனது ...

இருந்தும் கடந்து வந்த
பாலையின் வெம்மையில்
கருகி சிவந்து
பல கான ல்களை கண்டதால்
கணத்தில் ஒதுங்கி கொள்கிறது
கானல் நீரில் மையல் மனது .

சுட்டெரிக்கும்
சுள்ளென்ற சூரியக் கதிர்கள்
என் சுகங்களையெல்லாம்
சுரண்டி உறிஞ்சிய பொழுது
சுருங்கி விடாமல்
தொடர்கிறேன் பயணத்தை

எங்கிருந்தோ ஒரு காற்று
என் இதயக் கதவை
நெகிழ்த்திவிடும் நோக்கத்தில்
பலமாக அடித்து ஓய்ந்தது
அதன் விரக்தியில் விழுந்த
ஒரு சருகு
பிளந்து சென்றது இதயக் கதவை
பிளிர்ந்து வழிந்தது
சட்டென குருதி
மீண்டும் அதே வலிகளை நினைந்து .

இருப்பு

உன் நினைவு சுமந்து
உன் காந்தப் புலங்களை தேடி
கடந்து நகர்கிறது காடுகளை புலன்கள்

கண்ணெட்டும் தூரம் வரை
கரைந்து சிதறும் பனிச் சிதறல்களின்
ஊசிக் கரங்கள் உள் நுழைந்து
உறையத் துடிக்கிறது .
உன் நினைவெனும் நெருப்பு
நீங்காது ஒளிர்வதால்
உறையாது உன்னை தேடுகிறேன் .

காற்றின் திசைக்கு
கடக்கும் ஒவொரு கணப் பொழுதிலும்
உன் வாசத்தை தேடும் சுவாசம்
வஞ்சித்து வருகிறது பெரு மூச்சாக .

ஊசிக் காடுகளின்
ஊசிப் பனிக் கதிர்கள்
உன்னை விடவா
என் உணர்வை பந்தாடிவிடும் ?

தொலைந்து போன
உன் பாத சுவடிகள்
பார்வைக்கு எட்டாது இருக்கலாம்
கடந்து செல்லும் காடுகள் கூட
உன் இருப்பை காட்டாது மறைக்கலாம்
நகந்து செல்லும் பொழுதுகள் கூட
உன் நிழல்களை நெடுஞ தூரம் நகர்த்தலாம்
ஆனால் உன் நினைவு சுமக்கும்
என் இதயம் சொல்லிவிடும்
உன் இருப்பை