Thursday, March 28, 2013

நம்பிக்கை

 


தெருவோரமாய்
ஒரு ஒற்றை காகிதம்
காற்றின் திசை எங்கும்
பறந்து கிழிந்து
ஓரங்கள் சிதைந்து
ஒழுக்குகளில் நனைந்து
இன்னும்
காற்றின் திசைக்கு ஈடு கொடுப்பதற்காய்
தன்னை தயார் செய்தவண்ணம் படபடக்கிறது ...

அது இறைவனுக்கு எழுதபட்ட
வேண்டுதல் கடிதமாய் இருக்கலாம்
தலைவனுக்கு தொண்டன் எழுதிய
தயை நிறைந்த கடிதமாய் இருக்கலாம்
மகனுக்கு தாய் எழுதிய
வயோதிப விண்ணப்பமாய் இருக்கலாம்
காதலனுக்கு கொடுபதட்காய்
பலகாலமாய் காத்துகிடந்த
காதல் மடலாக இருக்கலாம்
நிந்திக்கப்பட்டு
நிராகரிக்கபட்டு
வஞ்சிக்கப்பட்டு
கிழித்து எறியப்பட்ட ஒரு நகலாக இருக்கலாம்

இன்னும் அது வாழத் துடிக்கிறது
காற்று ஓய்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்

Saturday, March 23, 2013

இளவேனில்

 

இருள் மெல்ல துயில் களையும்
காலைப் பொழுது
பகல் கொண்ட வெம்மை தணிக்க
பனி கொண்டு மூடி
படுத்துறங்கிய பகலவனும்
மெல்ல துயில் கலைவான் ..

மெல்லிய புல்தரையில்
சிந்திய பனி துளிகள் பட்டு
சில்லென சிலிர்த்தது புல்வெளி
கள்ளென போதை கொண்டு
தன் கண்களை மூடிக்கொள்ளும்
காற்று வெளி ..
கண்களை திறந்து
காண்பவை எல்லாம்
கண் நிறையும் கற்பனையில்
இறகுகளின் போர்வைக்குள்
இன்னும் ஒருக்களித்து
உறங்கும் ஒரு பட்சி ..

விரிகின்ற ஒளிக்காய்
படர்ந்து பரிதவிக்கும்
பனிப்புகார் தன்னுள்
மறைந்து விசிக்கும்
மரங்களின் குளிர்மை சொல்லும்
இதுவொரு இளவேனில் காலம் .

இயற்கையின் எழில் களையும்
இரும்பு மனம் கொண்டவர்க்காய்
வெளிகளுக்கு வேலிகள்
மரங்களுக்கு மரத்தடுப்பு
மனங்கள்போல்
மரமும் மடை மாறுமோ ..?

Friday, March 8, 2013

நிலவுக்கும் குடை பிடிப்பேன்

http://muslimvillage.com/wp-content/uploads/2012/08/Muslim-Women-sad.jpg
ஏக்கங்களும் எண்ணங்களும்
தனிமைகளை சுகமாக
சுரண்டி தின்னுகின்றது
எட்டாத நிலவு
எரிகின்ற நெருப்பு
கை கொள்ளா கடல்
கை கூடா காதல்
அனைத்தையும்
கட்டி அணைக்க துடிக்கும்
எண்ண அதிர்வுகளுக்கு
வெறும் வண்ண கனவுகள்தான் மீதம் ...

கனவுகளை விதைத்து
கண்ணீரை அறுவடை செயும்
எண்ண அரக்கனை
எளிதில் கொன்றால்
வற்றாத ஜீவ நதியாகி
ஓடிகொண்டிருக்கும் உல்லாசமாய் உள்ளம் ...

உனக்காக ஒரு தாஜ்மஹாலை
உள்ளத்தில் மட்டுமே கட்ட முடிந்தது
உலகுக்கு கொடுத்த சாஜஹான் கூட
அதை நனையாது காக்க எந்த வழியும் செயவில்லை ...
உனக்காக நான் பிடிக்கும்
இந்த ஒற்றை கருங் குடையின் கீழ்
என் உலகமே உனக்காய்
விரிந்து பரந்து காத்திருகிறது
நிழல் கொடுக்க ..
என்று வருவாய் ...
உன் பிடிவாதங்களையும்
வீண் பிதற்றல்களையும்
வீணென்று தூக்கி வீசி ..?

நிலவுக்கும் குடை பிடிப்பேன்
நீ அங்கு இருப்பாய் என்றால்
உன் நினைக்கும் குடை பிடிப்பேன்
என் கனவுகளில் மழை நாள் என்றால்
கனவுகளில் நீந்தி
கலவரம் செய்யாது
என் கண்களில் நீந்த வா
காலம் எல்லாம்
உனக்கு நான் நிழல் கொடுப்பேன் ..

ஆயுதம் செய்வோம்

 
 

நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
பெண்ணின் இலக்கணமாம்
நிரந்து நடந்தால் திமிர்
நேர்கொண்டு பார்த்தால்
வெட்கம் அற்றவள்
பாரதியே பார் இந்த சதியே ..

காலம் காலமாய்
பெண்ணின் கனவுகளை
காவு கொண்டவர் தாம்
கண்ணியமாக
பெண்கள் தினத்தை பற்றி
வெகுவாக சொல்கிறார்கள்
எத்தனை பெண்களுக்கு தெரியும்
இன்று தமக்குரிய நாள் என்று ..?

ஓடி ஆடி களைத்து ஓய்ந்தவளுக்கு
ஒரு மிடறு தண்ணீர்
யாரவது இன்று கொடுத்தீர்களா ?
குழம்புக்கு புளி  இல்லை
சோறுக்கு உப்பில்லை என்பீர்
துப்புக் கேட்டவரே ...

தாயை தாயக பார்க்கும் நீங்கள்
மனைவியை பேயாய் பார்பதேனோ ?
பெண்ணுக்கு எதிரி பெண்தான்
பெண்மையை போற்ற சொல்வதில்
பெரிதாய் குறை காண ஒன்றில்லை
பெண்மை என்பதை இனம் கண்டால்தானே
நீவீர் பெண் என்பவளை மதிக்க .

மாவு அட்டும் அம்மி கல்லு அவள்
அதனால்தான் எதுவென்றாலும்
உறைக்காது என்று உளறி கொட்டுகின்றனர்
வக்கிர எண்ணம் கொண்ட வாழ்க்கை துணைகள் .

துவைத்து போடும் வாஷிங்  மிசின் அவள்
அதனால்தான் தானோ
உங்கள் அழுக்கெல்லாம் அவளால்
தினம் தினம் அகற்றப் படுகிறது ..

கூலி இல்லா சமையல் காரி இவள்
தாலி என்று வேலி  போட்டு
கேலி பேசி வருத்துகின்றீர்கள் .

பெண்ணாய் பிறந்ததானலோ
ஆண் கொள்ளும் போக பொருள் ஆனாள் ?
வன் புணர்வு கொள்ளும் வக்கிரங்களே
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்
உங்களை உலகுக்கு தந்த வாசல் ஒன்றை
உருக்குலைப்பது உமக்கு தெரியும் .

பெண்கள் பிரதமராகலாம்
வீராங்கனைகலாகலாம்
வெற்றி வாகை சூடும் முயற்சியாலர்ககலாம்
வீடு கூட்டும் ஆயா ஆகலாம்
விளையாடும் குழந்தை ஆகலாம்
மைக் பிடிக்கும் பேச்சாளர் ஆகலாம்
கவிதை புனையும் கற்பனா சக்தி ஆகலாம்
கற்பென்று வந்துவிட்டால்
கப்பென்று ஓடி ஒளியும்
பெண்கள் தான் இவர்கள் ...

ஆயுதம் செய்வோம்
அதில் ஆளுமை வெல்வோம்
கூடி களித்திடும் கூத்தியர் மத்தியில்
ஆடி திரிந்திடும் ஆண்மையை அறுப்போம் .
காவியம் செய்வோம் அதில் ஓவியம் ஆவோம்
காத்திடும் ஆடவர்க்கு எல்லாம்
கணம் சூக்குமம் ஆவோம் .
வாக்கது கொள்வோம்
வாய்மையே வெல்வோம்
சாக்காடு வரினும்
பெண்மை சாகாது வாழ்வோம் .