Tuesday, April 29, 2014

தனிமைகள் ...



இந்த இரவின் நீள்தலில்
எங்கும் விரவிக் கிடக்கிறது
தனிமைகள் ..

இமைகள் தீண்டப் படாமலே
இழந்து கிடக்கிறது
உறக்கத்தை ..

நினைவுகள்
தொலைவுகள் நோக்கிய
அதன் பயணத்தை
இனிதே நடத்தி சோர்கிறது ..

எந்த வேளையும்
தன்னிலை மீறக் கூடிய
கண்ணிமை வழி
நீர்த்துருத்தல்கள் ..

விடிந்துவிடாதா ..
இது முடிந்துவிடாதா ...
சாதலிலும் வாழ்தல் மேல்
உன் வலிகளை சுமந்து ..

உறக்கங்களுடன்
எந்த உடன்பாடும்
நிறை பெறவில்லை
தனிமைகளின் நீள்தல்
தன்வசமாக்கி
தொடந்தவண்ணம் ...

Monday, April 28, 2014

"பன்னீர் நதியில் கண்ணீர் புஷ்பங்கள்.."




இதழ் கடந்தும்
இனிக்கிறது உன் முத்தம்
இயல்பிழந்து
தவிக்கிறது இதயம் ..

உன் விரல்களின் விளிம்பில்
விரகம் தடவி
விளைகிறாய நகம் தீண்ட
கணுக்கள் தோறும்
ஊற்றெடுக்கிறது
பன்னீர் நதிகள் ..

விளங்க முடியாத
உன் பார்வைக்கும்
விரசம் கொள்ளவைக்கும்
உன் புன்னகைக்கும்
விலாகத உன் அன்புக்கும்
இடையில் பாய்கிறது
ஒரு மிதமான சுகந்தத்துடன் அது ..

கைசேர முடியாத காதலுடன்
கண நேரம் பிரியா நேசமுடன்
ஒரு மின்னலென
பூத்து மறைகிறது
கண்ணீர் புஷ்பங்கள் ...

அணைத்து அர்ச்சிக்க
அணுவளவு வாய்ப்பு
அற்றுப் போனாலும் - என்
கண்ணீரால் அர்ச்சிப்பேன்
மறைந்தாலும்
உனக்காய் மலர்ந்து மறையும்
உன் பாசமெனும்
பன்னீர் நதியில் அலர்ந்த
கண்ணீர் புஷ்ப்பங்கள் .

கனவு...




என் கனவுத் தொழிற்சாலையில்
கணநேர இடைவெளியின்றி
பிரசவித்து சிரிக்கிறது
உன் நினைவுக் குழந்தை ...

தூரம் தொடர்ந்த
உன் நினைவுக் கரங்களில்
தினம் ஒரு குழந்தையாய்
குழைந்து குலைந்து கிடக்கிறேன்

மையல் கொண்ட சிற்ப்பிஎன
மையம் திறந்து கொள்கிறது
உன் முத்தினை
சொத்தெனக் கொள்ள

உன் அருகாமைகள்
குறுகிய பொழுதும்
குறுகாமல் வாழும்
குன்றில் ஒளிரும்
காதல் விளக்கு.

தென்றலாக வா
உன்னை
தீண்டும் பேறு
அந்த சுடர் பெறட்டும் .

நேசம்...



வரம்பு மீறிய
உன் மீதான நேசம்
வரவழைக்கிறது
விழிகளில் மழை ...

வாழ்ந்த காதல்
வாழ்க்கைக்கும்
வாழுகின்ற
சோக வாழ்க்கைக்கும்
வாழப் போகும்
ஏக்க வாழ்க்கைக்கும்
இன்றைய கண்ணீர்
போதுமானதாக இருக்கட்டும் ...

உதாசீனங்களால்
உடைக்கப்டும் உள்ளம்
என்றும்
உயிர் வாழ விரும்புவதில்லை

உனக்கான பார்வை
உனக்கான நேசம்
உனக்கான வார்த்தை
உனக்கான முத்தம்
உனக்கான அணைப்பு
..........
உனக்கான எல்லாமே
இன்னும் உனக்காக ...
ஆனால் நீ இல்லை
எனக்காக ...

களையாத மோகம் ..




போர்வை களைந்த பின்னும்
களையாத மோகம்
கனிந்து வழிந்து
மொழிகிறது
உன் மீதான
என் ஆசைகளை ..

உறக்கங்கள் முயல்கிறது
உன் அதரங்கள்
என் அந்தரங்கங்களை
அளவிடுவதை ரசிக்க

அடிக்கடி கலையும்
உறக்க நிலைகள்
அதீதமாக அலைகிறது
உன் அருகாமையை
ருசிபார்க்க ...

ஒரு மழைத்துளிக்கு
ஏங்கும் பாலை நிலமென
உன் மதத் துளிக்காய்
ஏங்கும் மலர் மொட்டு

விரகங்கள் பகிரும்
உன் விசித்திர
புன்னகைக்கு தெரிவதில்லை
விடியும் வரை
விரதங்கள் விலைபேசப்படுவது ...

எண்ணங்களின் கேள்வி ..




விலகி போன உன்னிடம்
விலகமுடியாத என்
எண்ணங்களின் கேள்வி ..

நாம் ஸ்ருஷ்டித்த
நகர முடியாத தருணங்கள்
நரகமாகி போனதா ?

விலக முடியாத
விழிகளின் பார்வையில்
விரகம் வழிந்தொளிந்து
வெறுப்பு ஊற்று கண்டதா ..?

தவிர்க்க முடியாத
தருணமென்று
தானாய் தழுவிய கரங்கள்
தளர்வுற்று போனதா ?

வாழா இருடி என
வழவழக்கும்
வாய் தொட்டு
இதழ் அழைந்த
மோகம் தீர்ந்ததா ?

இடை படர்ந்த
இளையகரம்
இதழ் நீவும்
இதம் தொலைத்து
இறுமாந்த செயல் இன்று
இசைவிழந்து போனதேன் ?

இதழ் தீண்ட நீ வேண்டாம்
இதம் கொடுக்க நீ வேண்டாம்
இன்பம் தேட நீ வேண்டாம்
இந்த இம்மைக்கும் நீ வேண்டாம் ..

இதுகாறும் நீ இருந்த நெஞ்சை
என்ன செய்ய சொல்லிச் செல்
இதயம் அமைதி பெற
வழியுண்டா காண்கிறேன் ..

" உயிர் எங்கே ? உன்னில் உண்டா ?..




எண்ணிலடங்கும்
என் இதய துடிப்புகள்
எண்ணிலடங்கா
உன் நினைவுகளை
சுமந்து கடக்கிறது
கணங்களை ..

என்னில் வண்ணம் தெளித்த
வர்ணத் தூரிகையே
வரைந்து செல்
வருங்கால வழிகாட்டியை

தொலைவுகள் குறுகாத
நினைவுகளை மட்டும்
நிரந்தரமாய் பிரசவிக்கிறது
கருக்கொண்ட காதல்

கைகள் நீட்டுகிறேன்
இணைகின்ற விரல்களில்
பிரிவின் சுவடுகளை
எழுதி செல்கிறாய் நீ

தொலைந்து போன என்னுயிரை
தொடர்ந்தும் தேடுகிறேன்
அது உன்னில் உண்டா
திருப்பி கொடு
திருந்தாத ஜென்மம் அதை
உன் பிரிவெழுதி வஞ்சிக்க .

காற்றாகி .... வா .


இருள் கடந்தும் பயணிக்கிறது
உன்மீதான
என் விருப்பங்களும்
வேதனைகளும் ..

தொலைவுகளை குறுக்கிய
காதலுக்கு தெரியவில்லை
விளைவுகளை
அறுவடை செய்ய ..

விதையாகி போன
ஆசைகளின் துளிர்ப்பில்
அலர்ந்த மலரில்
அதன் சோகங்கள்
நீர்த்துளிகளென
மினுமினுத்து காய்கிறது ..

இந்த இரவுகளின் முடிவில்
எழுதப்படாத ஒரு
தொடர்கதையின் தொடர் புள்ளிகள்
முற்றுத் தேடி அலைகிறது ..

முடிவுறாத வானமதில்
கனியாத காதல்
நீர் சுமந்து அலைகிறது மேகமென
ஒரு திடீர் தென்றல் அணைப்பில்
அது தன் நீர் சொரிந்து
கலைந்து மறையலாம்
காற்றாகி .... வா .

போடி லூசு...




எண்ணங்களில்
வண்ணங்களாய்
கலந்து மிளிரும்
காதல் நிமிடங்கள்
நீண்டுகொண்டே செல்கிறது
செல்லமான
உன் உதடு சிதறும் வார்த்தைகளில் ..

எத்துனை கோபத்தையும்
என்னை துலைத்து விட செய்கிறது அது ..
செல்ல சினுக்கங்கள்
சில்மிசங்களாய் மாறும் தருணங்கள்
மிரண்டு குளறுகிறது
உன் திரண்ட இதழ் கடை
போடி லூசு..

உன் அந்தரங்கங்கள்
உரிமையோடு
என்னால் ஆராயப் படும்பொழுது
அவசரமாய்
கூடவே ஆர்வமாய் உளறுகிறாய்
போடி லூசு ..

எதிர்காலங்கள்
ஏக்கங்களாய்
ஏமாற்றங்களை தாங்கி
விம்மும் பொழுதும்
விரைந்து தழுவுகிறது உன்
போடி லூசு ..

சண்டைகளின் போது
சடுதியாய் வரும் கோபத்தில்
நீ உதிர்க்கும்
போடி லூசு என்பதில் மட்டும்
லூசாக மறுக்கிறது
என் போர்க்குணம் ..

ஒவ்வொரு அசைவிலும்
என் அனுமதியுடனே
அழகாய் லூசாக்கிவிடும் அற்புதம்
உன் இதழ்களுக்கு மட்டுமே சாத்தியம்
அது உதிர்க்கும் வார்த்தையில்
உண்மையில்
லூசாகி தவிக்கிறது நெஞ்சம் உனக்காக ...

இந்த தருணங்களிலும்
உன்னால் உதிர்க்கப் பட்டிருக்கும்
வாடி லூசு ... இல்லையில்லை
போடி லூசென ...

ஒப்பனைக் காவியம்..




சிவந்த செந்தழல் குழைந்த
கொலுசு கொஞ்சும் இசை விஞ்சும்
அணங்கு நடை பார்த்த அன்னம்
சிரசு நிலம் குடையும்
நிலம் தவழும்
நீளுடை குழைந்த
இடை மருளும் ..

கள்ளுண்ட வண்டென
கண் மருளும்
காதல் மெய் கொண்டு
விரகமுறும் பூந்தண்டு
மெல்லிய விரல் சுமந்த
கணையாழி தொலையும்
மோக பசி கூடி வாடி ..

எங்கும் மலர் சிதறும்
மன்மத பானமொன்றிம்
மது கலந்து மணம் வீசும்
இதழ் கடந்து இன்பம்
எதுவென்று
வெள்ளரிசி பற்கள் தேடும்
இனம் எதுவென்று கூடாது
இணை பிரிந்து மீளும் இதழ் விளிம்பு..

குழல் சுமந்த வெண் பூ அறியாது
என்று கழல் சுமக்கும்
அதன் காந்தள் இதழ் ..
இதழ் சுமக்கும் வர்ணம் அறியாது
எந்த மது குடைந்த
மந்தியொன்று மலர்குடைந்து
மயங்கி மீளும் என்று ..

இருந்தும்
வர்ணம் கொண்ட வாசமல்லிகள்
பின்னிரவுவரை தங்கள்
வாசங்களை நேசங்கள் ஆக்கி
வலிந்து சுமக்கின்றன... நகரும் இராப்பொழுதுகளில்
நாள் தோறும் நாடுபவர் படிக்கும்
ஒப்பனைக் காவியம் இவள் .

தீண்டப்படாத நதி ....




மெல்லியலால் இடை தழுவும்
மெல்லிய மேக நிறம் கொண்டு
வளைவுகள் கொண்டு
மேவி மேல் தடவி
உள்ளீர்ந்து உருவகமாகி
தான்தோன்றியாய்
விரப்பிப் பாய்கிறது வெள்ளம் ...

உன் மீதான காதலும்
இந்த நீரைப் போல்
உள்ளீர்ந்து விரவி
உளம் ஈர்த்து
தான்தோன்றியாய்
சல சலத்து பாய்கிறது

இந்த செம்புபுலப் பெயல் நீரன
அன்புடை நெஞ்சம் அரவணைத்து
கள்ளுடை போதை என
காண்கிற போதெல்லாம்
கண்களில் மிளிர்ந்த
காதலில் மிதந்த
காட்டுப் பூ இவள்

நெஞ்சமெனும் கரையிரண்டில்
நெகிழ்ந்து விழும் அருவி ஒன்று
கனவுகளில்
மஞ்சம் நனைத்து
மகிழ்ந்து வழிந்து
கால்க்கடை கடந்து
பயணிக்கிறது நதியென ..

எத்தனை ஜீவன்
எதிர்க் கரை தோன்றினும்
தாகம் மீறி
நீர் குடைய நோங்கினும்..
உன்னால் அருந்தா
உறைபனி நதியென
வாழும் இவள்
தீண்டப்படாத நதி ....

நினைவுக் காற்று ...



இந்த இரவின்
நிஷப்த இழையை
மெல்லத் தடவிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுக் காற்று ...
பல இரவுகளை முகாரியாக மாற்றிய
இந்த நினைவுக் காற்று
இன்று மெல்லிய சுகந்தம் ஒன்றை
மெல்லத்தடவி
மோகனம் இசைக்கிறது ...

அடிக்கடி
இதழ்களை தொட்டு தடவி
மீள்கிறது விரல்கள்
உன் முத்த முக்குளிப்பில்
குத்திய
மீசை முடியின்
குறுகுறுப்பு அடங்கவில்லை இன்னும் ...

கை படும் மேனியெங்கும்
கை சுடும் தீயென
கனன்று பூக்கிறது
உன் மீதான இச்சை ...

உன் என் காதலை
காலம் முழுவதும் சுமந்துவிடுவேன் ,,
உன் மீதான
மோக மேகமது நீங்கிவிட்டால் ..

தென்றல் என
உன் தீண்டல் சுகிக்கவில்லை
ஒரு புயலென ஆக்கிரமித்துவிடு
இந்த பூமியெங்கும்
நம் காதல் பூத்திட செய்வேன் .

முதிராத ஒரு குழந்தை...



முதிராத ஒரு குழந்தை
முதிர்ந்துவிட்ட தோற்றம்
கதிரான களம் தான்
காரணமோ காரியமோ ?

அழகான வெள்ளை அம்மாவின்
பாசம் எனும் கயிற்றில்
பற்றித் தொங்கும்
பால்வடியும்
பருவம் தாண்டிய மகன் ..

ஊன் வளர்ந்து
உடல் வளர்ந்து
எது வளர்ந்தென்ன
மூளை வளராத
முதிர்ந்த குழந்தை இவன் ..

ஆட்சிக் கட்டில்
இவன் ஆடல் ஊஞ்சல்
மிக்சர் தலைவர்
விளையாட்டு கொரங்கு
அன்னை கையில்
பச்சை மண்
அவர் பிடித்தால்
பிள்ளையாரும் இவன் தான்
தொல்லைகளும் இவன்தான் ..

காந்தி பரம்பரையில்
ஒரு சாந்தியை தொடாத
சத்திய புருஷனாம்
தந்தை இழப்புக்கு
ஒரு சந்ததியை காவுகொண்ட
அகிம்ஷா புருஷர்
காந்தி வழித் தோன்றலடா

இத்தாலிக்கு இந்தியாவை
இரவோடு இரவாக
கைமாற்றும் காலம் வரும்
அன்று ..
இன்று கால் பிடிக்கும்
காங்கிரஸ் அறியும்
துரோகத்தின் வாதை .

அவனறியா உலகமிது
அம்மா சொல்தான்
மந்திரமது ..
அவனுக்கும் தெரியவில்லை
தாய்ப்பாசம்
பேய்க்கு கிடையாதென்று ..
நீயும் வெடித்து சிதறலாம்
ஆனால்
வீண்பழி சுமக்க
வீரர்தான் இல்லை ...

இந்த இரவு ..

 
 
இந்த இரவு
என்னால்
சபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது

எதற்குமே பயன்படாத
ஏதோ ஒன்றைப் போல்
யாராலும் தீண்டப் படாத
இன்னொன்றைப் போல்
முகம் சுழிக்கப் படும்
நிலையை ஒத்திருக்கிறது
நிகழ்வுகள் ..

அன்பு பாசம்
காதல் காமம்
எல்லாம் கடந்த
நிலையொன்றா என்றால்
எதற்குமே பதில் இல்லை

ஒதுக்கமா
ஒதுங்கலா
விலகலா
வீண் பிடிவாதங்களா
வீணான கற்பனைகளா
எதுவாக இருந்த பொழுதும்
இந்த இரவு
என்னால் சபிக்கப் படுகிறது ..

வர்ணம் தொலைத்த இதயம்..



சிதறிக் கிடந்த
எண்ண வர்ணங்களை
நினைவுத் தூரிகை தடவி
கிறுக்கல் சித்திரமாக
வரைந்து நிறைந்தது
இதயச்சுவர் ..

வழிந்து உறைந்திருந்த
வசந்த கால நினைவுகள்
தூசி படிந்து
துலங்காமல் துருத்தி நிற்கிறது ..

கை நிறைத்த வெண் சிப்பிகள்
கருமை படிந்து
கலைந்து கிடக்கிறது
அதில் ஊரும்
அட்டைகளின் நகர்வுகளில்
அருவெறுப்பை
உணரா நிலை சுமந்து
கவிழ்ந்த படி அவை ...

காக்கை இறகுலர்த்தி
தெறித்த நீருக்காய்
தவம் கிடந்தது சோர்ந்த
பல செண்பகப் பறவைகள்
தம் இறகிடுங்கி
இரத்தம் கசிதிருந்தன ..

மலர் இடுக்கில்
மனம் தொலைத்த வண்டுகள்
அவை மலர் வளையமான
வாழ்வு கண்டு
மணம் தொலைத்திருந்தன ..

வானக் கூரையின்
அடர் சிவப்பில்
அமிழ்ந்து விழித்த
ஆதவன் கண்களில்
நிராசைகளோடு
ஒரு நிர்மலமும்
போட்டி போட்டவண்ணம் ..

அள்ளி தெளித்த
அத்தனை வர்ணங்களையும்
வரைந்து வழிந்து கிடந்தது
வர்ணம் தொலைத்த இதயம் .

விடி வெள்ளி...

 
 
 
மினுக் மினுக்கென
மின்னும்
அமாவசை இரவின்
விண்மீன்களை
மல்லார்ந்து
மனக்கணக்கு போடும்
மூளைக்கு ஏனோ
அந்த இரவின் விடியல்கள்
விரும்பப் படாததாக இருந்தது ...

மூடுவதும் திறப்பதுமாக
நித்திரா தேவியுடன்
சண்டையிட்டு
சலித்துக் கொண்டிருந்தது
கண் இமைகள் ...

எழுதிய தேர்வுக்கான
மதிப்பெண்களை
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்
மாணவனைப் போன்றதா இந்த உணர்வு
இல்லை...
தேர்வுதான் எழுதப்படவில்லையே ..
அப்போ
அதிசுவை மிட்டாய் ஒன்றை உண்ண
அனுமதிக்காக காத்திருக்கும்
ஐந்துவயது சிறுவனை ஒத்ததா இந்நிலை ...
உலை நிலை மன நிலை
இரவின் பிடியில்
ஒருவரும் துணையிலை ..

ஒருக்களித்துப் படுத்தவன் கண்களில்
சிறு காற்றில் அசைந்த
ஒற்றைச் சுடர் தீபம்
ஓயாத அதன் போராட்டம்
இன்னும் தீராது தொடர்வது
திடம் ஒன்றை தந்தது ..

ஒரு நாளிகை வாழவே
ஒரு தீபம் போராடும் பொழுது
ஓராயிரம் நாளிகை தாண்டி வாழ
ஒருநாளாவது போராட வேண்டாமோ ...

மல்லார்ந்த கண்களில்
மீண்டும் விண்மீன்கள் படையெடுப்பு
அதில் விடி வெள்ளி ஒன்று
புதிதாய் முளைத்திருந்தது ..
விடியலை நோக்கி ...

மகரந்தங்கள்...





உன்னால்
புரிந்து கொள்ள முடியாத
என் பக்கங்கள்
புரட்டப் படும் பொழுதெல்லாம்
அதன் எழுத்துக்கள்
விசும்பித் தணிகிறது
விளங்கிட எத்தணிக்காத
அவசர அலட்சியங்களை உணர்ந்தா
இல்லை
விளங்கியும் வீம்பு கொள்ளும்
வெறுப்பினை சுமந்தா ...

பனி உறையும்
இந்த இராக் காலத்தின்
உறை நிலையை தாண்டிப்
பயணிக்கிறது
உன் உதாசீனங்கள்
உதடுறையும் குளிர் நகர்ந்து
உளம் உறைத்து
உள் உறையும் .

கடல் கடந்த - என்
சுவாசக் காற்றும்
உன் கனல் திறந்த
உஷ்ணம் தாளாது
நிழல் வேண்டி
மீண்டு வந்து சேர்ந்தது
திரை விலகும் நிகழ்வின் தாக்கம்
நுரை கடல் தாண்டி
நுண்ணுயிர் பிரிக்கும் ...

வசந்தகால சோலையொன்றில்
வாசம் தொலைத்த பூவொன்றில்
மலர்ந்து மடிந்தது
அதன் மகரந்தங்கள் .

அலர்ந்த மலர்..




அந்த வனாந்தரத்தின்
எழில் கொழித்த
சோலை ஒன்றின்
மெல் மாலைப் பொழுதின்
ரம்மியங்களை
இழுத்து ஆடையென
சூடியிருந்த
கொன்றை மர நிழல்கூடில்
அன்றிலாய் இணைந்திருந்த
கரம் நான்கும்
காதல் மிகுந்து
களிப்புக் கண்டிருந்த
அந்தகார பொன்மாலையொன்று,,,

மஞ்சள் பூசிய
மான் விழியால்
மன்னவன் வரவு நோக்கி
தன் எழில் குழல் கலைந்தாட
நடை பயில்வதுபோல்
மெல்லிய தென்றலுக்கு
இயைவாய் மெல்லன
தொங்கு சரம் ஆடிய பூக்களை பார்த்து
இச்சரம் மென்மையோ
என்மேல் படர்ந்திருக்கும்
இச்சரம் மென்மையோ
இவள் மேனிதான் கொன்றையொ
இவள் மேல் நீ தான் கொன்றையோ
என மனம் இச்சகம் புரிய
எக்கணமும் மீளாது
அக்கணமே அவன்
ஆய்வுகள் தொடர்ந்தது ..

ஓர் மெல்லிய சர்ப்பமென
மேனியெங்கும் ஊர்ந்த
அவன் திண்ணிய கரம் பிடித்து
போதும் என சலித்து
போதாமல் மனம் கெலித்து
மது உண்ட மலர் என
மயங்கி சரியும்
மெல்லாடை பாரம் தாங்காது
இடை துவள சரியும்
இடது கரம் அதை ஏந்தும் ...
மீறும் மதுக்கரம் தனை பிடித்து
வலக்கரம் ஏதோ கூறும்..

மெல் முகில் களைந்த
நிலவென
மோகம் குழைத்த
முக எழில் நோக்கும்
அவன் கவி மலர்க் கண்கள்
கவிகொள்ள கருத்தேடும்..
கழல் கண்ட கொலுசு
ஒற்றை தொடைகாணும்
அவன் கனிவாயும்
மலர்த்தோளில் ல் மது தேடும் ..

கருக்கொண்ட முகிலென
குழல் அவிழ்ந்தாடும்
அதில் சரம் கொண்ட மழையென
அவனவள் இதழ் தூறும் ..
சொர்க்கத்தின் தாள் திறக்கும்
சுகபோக தருணத்தில்
தேவி என்றான் ..
அத்தனையும் திகட்டிவிட
அலர்ந்த மலர் கூம்பி நின்றாள்
அவள் தேவி அல்ல ..

உயிரே உறவாடு..




நிலவொழுகும்
நடுநிஷிகளின்
நீள் கரங்களுக்குள்
நிதமும்
சிக்கித் தவிக்கும் பொழுதுகளும் ..

நீளமான உன் கரங்களுக்குள்
நிமிட நொடிகளேனும்
அடங்கிவிட துடிக்கும்
ஆசை மனது.

அணைந்து மிளிரும்
அழகிய மின் விளக்குகளென
ஒளிரும் மின்மினிகள்
உள்ளத்தில் அழகாய்
ஒழிந்து ஒளிரும்
உன் மீதான
காதல் கணங்களுடன்
போட்டியிட்டு சலிக்கிறது ...


தளிர் மேனி படும்
குளிர் தென்றல் சுடும்
உன் அருகாமைக்காய்
உள்ளம் அலைபாயும்

தணியாத காதல்
தளிர் கொண்ட மோகம்
பிரியாத ஆசை
பிறழாத நேசம்
நெஞ்சில்
கருவான உன்னை
கணம்தோறும் நோங்கும்..

வருவாய் என் உயிரே
வரம் தா உன் மனதே ..
உருகிடும் என் உயிரோடு
உயிரே உறவாடு...