Tuesday, May 12, 2020

சருகு

இந்த

இரவுக்கும் எனக்கும்
என்ன பந்தம்..
நீண்டு கிடக்கிரது..

நினைவுகளை
கிறுக்குவதை
நிறுத்தி இருந்தேன்
பயனற்றது...

வலிகளே
உணரப் பாடத பொழுது
மொழிகளுக்கு
என்ன தேவை இருந்துவிடும்..?

நினைத்ததை
கிறுக்கும் சுதந்திரம்
நனைவுகளை கிறுக்கி
கொல்வதை விலங்கிட்டிருக்கிறது..

நீண்ட அமானுஷ்ய வெளியில்
இலக்கற்று அலைப்புறும்
காய்ந்த சருகென
கடந்து செல்கிரது காலம்...

இதையும்
கடந்து விடும் சருகு
ஓர் வேகமான காற்றோ
சாலையோர ஊர்திகளோ
கனன்று கொல்லும் தீ காங்குகளோ
இரக்கப்பட்டு உதவலாம்.

காதல்



இரவுகள்

இன்னும்
உறக்கம் கொள்வதாயில்லை..

அந்தகாரத்தின் ...
தனிமைப் பொழுதுகளை
சுவைத்துச் சுவைத்து
இருதயச் சுவர்களின்
நா வறண்டு கிடக்கிறது ..

மனக்கிடங்கில்
மரணிக்கும் தருவாயில்
உன் நினைவுக் கருக்கள் ..
உயிர் கொடுக்க முனையும்
ஒவ்வொரு தருணங்களிலும்
சில உதாசீனங்கள்
சில கோபங்கள்
சிறு முகத்திருப்பல்கள்
கருக்கலைப்பு செய்து விடுகின்றன ..

உனக்காக
புன்னகைக்க முயலும்
உதடுகளிடம்
விலை கேட்கிறாய்
வார்த்தைகள்
வறண்டு கிடக்கிறது ..

என் கோபங்கள்
என் நேசங்கள்
என் தாபங்கள்
பரிச்சயமானவை
இருந்தும்
பழக்கமற்றவையாக
உன் பரீட்சார்த்தங்களுக்கு
உட்படுத்தப் படுகிறது ..

தனிமைக்கும்
எனக்குமான பந்தம்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
அவை நிரந்தரமானவை
ஜீவித பந்தம் .
மீண்டும்
ஒரு பரீட்சார்த்த முடிவில்
எழுதிச் செல்கிறது
காதல் பொருத்தமில்லாதது

மெல்ல நழுவிடுமா காலம் ....

நிலவோடு பகலில்
ஓர் பயணமென்கிராய்..

மென் புன்னகையை
ஒப்புதலாக கொண்டு
ஓரடி வைத்தாய்...

மெல்ல நழுவிடுமா
காலம் ....

யாருமற்ற தனிமை

யாருமற்ற தனிமை

அழகாக இருக்கிரது...

பின்னிரவின்
அமைதி கிளிக்கும்
வாகன இரைச்சல் தவிர
இந்த இரவின் அழகை
எதுவும் கெடுக்கவில்லை...

எண்பதுகளின் பாடல்
சூடான தேனீர்
இதைத்தவிர
வேறெதுவும் தேவையானதாய் இல்லை..

தூக்கம் தொலைவில் இல்லை
கண்மூடினால்
அணைத்துவிடும் அளவுதான்...
இருந்தும்
இன்றைய இரவை
இழந்துவிட விருப்பமில்லை...

நிர்மலமான நினைவுகளில்
தேனீரும் இளைய ராஜாவும்..
இதயம் இளைப்பாற தொடங்கியிருக்கிரது...

சாபம்...

மழை இரவொன்றை

மன இறுக்கத்தோடு
கனந்து கடக்கிறேன்...

இருளை
அதிகம்
நேசிக்கக் கற்றுக் கொண்டவள் தான்...

அரிதாரம் கழைந்து
மனப் பறவை
சிறகுலர்த்தும்
தருணங்கள்
பின்னிரவுகள்...

யாராலும்
நேசிக்கப் படாதது
வரம்

யாவராலும்
நேசிக்கப் படுவது
சாபம்...

சபிக்கப் பட்டவர்கள் பாதையில்
பூக்கள்
என்றும் பூப்பதே இல்லை...

உறுதி

உடைந்துவிடக் கூடாது

என்பதில்
உறுதியாக இருக்கிறது மனது..

யாசகம்
அத்துனை இலகுவானதல்ல,
ப்ரியங்களை
பிச்சை கேட்டுவாழ்வதில்
பிரியமற்றவளாகவே இருக்கிறேன்..

யாருமற்ற இரவுகள்
பலஹீனமானவை..
அவை தேசம் கடந்து
பயணிக்க வல்லவை...

யாரோடு பேசவும்
ஆர்வமிருப்பதில்லை
யாருக்காகவும்
எதுவுமிருப்பதில்லை..

உன் கடைசி வார்த்தைகளை
எனதாக்கி
தினம் இரவுகளை நகர்த்துகிறேன்..

எனக்காக உன் இதயம்
துடிக்கின்ற வேளையில்
என் இதயம்
காடு நோக்கி
பயணப்பட்டிருக்கும்.

தவமிருப்பு .......

மழைக்கால நினைவுகளில்

சிலிர்க்கும்
நனைந்த பூவென
ஒரு சூடான தென்றலுக்கான
தவமிருப்பு .......

உலர்ந்த
உன் மீசை முடியின்
நகர்வுகளால்
முறுக்கேறும்
முனைகளுக்குள்
உன் முத்த ஒற்றுதலுக்கான
முனைவுப் போராட்டம் ...

புன்னகை புதைந்த
உன் மோகப் பார்வைக்குள்
முடிகள்
தீப் பற்றிக் கொல்கிறது ..

உதடு தொடா
உன் உரசல்களில்
உன்மத்தம் கொண்ட மனது
உளறிச் சாய்கிறது
மார்போடு ...

கண் திறக்கும் முன்
என் கன்னிமையை புசித்துவிடு
என் பசி தீரட்டும்
காதல்
இளைப்பாறட்டும் ...

ஈர நினைவு ....

இந்த நாளின்

இறுதி மணித்துளிகள்
ஈரம் கலந்தே பயணிக்கிறது
உனக்காக ஒதுக்கப் பட்ட
ஒரு ஜென்ம வாழ்க்கையில்
ஒரு நிமிடம் கூட
ஒதுக்கமுடியாத
இந்த நாளின் முடிவுகள்
இறந்தும் சுவாசிக்கிறது
நினைவுகளால் ...

ஒரு மெல்லிய
பனிக்காற்றின் வருடல்களுடன்
வண்ணமயமாக்க முனைந்தாலும்
வர்ணம் இழந்த
வரட்சி வரிகளை சுமந்தே
பயணிக்கிறது ஒரு தென்றல் ..

ஒரு முத்த ஒற்றுதல் இல்லை
முடிகோதும் விரல் இல்லை
முகம் நோக்கும் விழியுமில்லை
ஒரு சூனியத்தின்
விளிம்பை நோக்கிய
பயணமாக இருக்கிறது
எத்தனிப்புகள் ....

உன் எண்ணங்களை
வண்ணங்களை
இதயம் மட்டுமல்ல
இமைகளும் சுமக்கிறது
ஈர நினைவுகளாய் ....

இரவு...

யாருமற்று இருக்கிறது

இரவு...
இறக்கப்படாத
சிலுவைகளின் பாரம்
இன்னும்...
கனதி கூடுகின்றது...

விளங்கிகொள்ளவும்
விலக்கிக் கொல்லவும்
யாருமற்றவளாய்..

தேவை என்னவோ
தலை சாய ஓர் தோள்..
ஏனோ
தகுதியற்றவளாகவே இன்னும்

நானும் உன் நினைவுகளும்...

இந்த

மழைக்கால இரவின்
நீண்ட தார்ச்சாலை சுமக்கும்
விடிவிளக்கின்
அசைவுகளென
நானும்
உன் நினைவுகளும்...

எங்கிருந்தாய்
எப்படி
எனனுள் வந்தாய்
எப்படி விலகினாய்...

விடைதெரியாததாகவே
இன்னும்....

அதீத வெல்லமென
அதீத அன்பும்
தெவிட்டிவிட
கூடுமாம்..

பிரிவின் வலிகள்
நிரந்தரமற்றவை ஆகலாம்
உன்னைப்போல் எனக்கும்
உறவென்று ஆகிவிட்டால்
ஆனால் ...

அவ்வளவு எளிதல்ல
உன்னிடத்தை
மேவுவது..

மெல்லிய காற்றில்
அசையும் விளக்குகளென
உன் நினைவுகளில்
அலைகிறது மனது
இங்குமட்டும்....

மீண்டும் நிலா நீ நான் நினைவுகளோடு..

இந்த
இராத்திரிகள்
நீளமானவை
நீ நான் நிலா நினைவுகள் என...

நீண்ட இடைவெளிகளுக்குப் பின்
முகில் விலக்கி
மினுமினுக்கும் நிலவில்
உன் நினைவுகளை
படரவிட்டிருக்கிறேன்..

தொலைவுகள்
தொலைந்து கிடக்கின்றன..
நினைவுகளோ
நெருங்கி வதைக்கின்றன..

எங்கிருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
என் நினைவுகள்
அப்படியே இருக்கிறதா..
எண்ணற்ற
விடைகள் வேண்டா கேள்விகளிவை..

யார்மீதும்
ப்ரியப்படாமலே
பிறள்ந்து கடக்கிறது காலம்
எங்கோ
எதற்காகவோ
உயிர் தடவி
துடிக்குமிதயம்
இன்னும்
சிறிதுநேரத்தில்
அமைதிபெறும்...

மீண்டும்
நிலா நீ நான் நினைவுகளோடு...

பெண்மை ..

துகில் கலைந்த

நிலவொன்றின்
வெம்மையோடு
புரண்டு கொண்டிருக்கும்
மோக நிலாவென
கவி சொல்கிறாய் ..

ஓர் உந்துதலில்
உன் இதழ்களை
இதழ் அடைந்த கணத்தில்
இம்சை எனதானது ..
வலிய உன் மீசை முடிகள்
மெல்லிதழ் உராய்ந்த கணங்களில்
நீண்டு வழிகிறது மோகம் ..

மெல் ஆடை துளையும்
உன் கரங்களுக்குள்
சிக்கித் தவிக்கும்
பெண்மையின்
ஆழ்ந்த சுவாசங்களில்
ஆண்மையின் தேவை
அதிகரித்திருந்தது ..

ஓர் அணை உடைக்கும்
ஆர்ப்பரிப்புகாய்
ஒவொரு கணமும்
காத்திருக்கிறது
அதன் ரகசியங்கள்
துறந்த பெண்மை ..

மகளே....

ஆடுகளோடு ஒராடாய்

நீ ஆடித் திருந்திருப்பாய்..
பாரினில் எனைப்போல் யார்
என பாடி மகிந்திருப்பாய்..
காடுகள் உன்வசமென
கால்கள் தேடி அலைந்திருப்பாய்
இந்த
காமுகர் வசம் நீ ஆக
எதை தேடிப் பதைத்திருப்பாய் ?

அண்ணண் என்று அழைத்திருப்பாய்..
மாமா என்று மன்றாடி இருப்பாய்
ஐய்யோ அம்மா...
அலறித்துடித்திருப்பாய்...
அதுகேட்டும்
இவர் குறி விறைத்ததெனில்
மனிதரல்ல மாக்கள் இவை...

மகளே..
ஆம் மகள்தான் நீ எனக்கு
உன்னை
அடிவயிற்றில் சுமக்கவில்லை
இருந்தும்
உன் முகம் பார்த்து
அடிவயிறே கலங்குதம்மா...

உன்னை பெற்றவள் சோகம்
பெண்ணாய் இல்லாது
புரிதல் கடினம்..
எத்தனை வேசியர்
எங்கும் இருப்பினும்
சிறு மலருண்ணை
கசக்கி முகர்ந்திட
என்னதான் இருந்திருக்கும்.. ?

பெண்ணாய் பிறத்தல் பாவமடி
பேதமைக்கும்
மடமைகளுக்கும் வாக்கப்பட்ட தேசத்தில்
பெண்ணாய் பிறந்ததொரு பாவமடி..

பால்வடியும் முகத்தை பார்த்து
பாலுனர்வு வடியுமென்றால்
பாரதத்தில்
ஆண்மகனாய் பிறந்ததுக்கு
அனைவரும் வெட்கம் கொள்வீர்..

யார் எவணும் வேனாம்
என் கையில் அவனை தாரீர்
அவன் ஆண்மை சிதைத்து
அகம் மகிழ்வேன் உனை சீராட்டி..

இரவினை காதலித்தே....

திடீரென

ஸ்தம்பித்து நிற்கிறது இரவு..

யாருமற்ற வாழ்வு
அத்துணை ஸ்வாரசியமானதல்ல..

இருளில் பயணிக்கும்
வேக வாகனத்தை போல்
விரைந்து கடந்துவிட
முடியாதது...

ஏனோ
குழந்தை பருவத்தை
யாசித்து கிடக்கிறது மனது..
தூய்மையான அன்பு
அங்குதான் சாத்தியம்...

புரிதல் என்பது
அவ்வளவு எளிதல்ல
என்னிடம் எனக்கே..

சாளரங்கள்
எப்போதும்
சுமைதாங்கிகள்...

தோள் சாய
ஓர் தோள் வேண்டும்
ஒர் பெயரற்ற உறவாய்..

சாலை விளக்குகள்
இன்னும் ஒளிர்கின்றன
இரவினை காதலித்தே....