Sunday, September 7, 2014

அன்பு..




உயிர்களில் பேதமில்லை
உணர்வுகளில் ஏதுமில்லை
நாமாக நாமுண்டு
நாமிருவர் எனும் போதும் ..

வினை கொண்ட தேசத்தில்
விலை போகும் மனிதருள்
விடியல் தேட முனைகின்றார்
விடுதலைக்காய் ஏங்குபவர் ,
எனக்கும் ஓர் இடமுண்டு
எந்நேரமும் சாவுண்டு
என் பிறப்பில் பாவமுண்டு ..

வாழ்க்கை இனித்திடும் தோழா
வா வந்து கை கோர்த்திடு
இமயங்கள் தொட வேண்டாம்
இருவருள்ளும் பகை வேண்டாம்
இதயங்கள் பகிர்ந்திடு
இருக்கும்வரை இன்புறலாம் ..

என்னையும் உண்பார்
உன்னையும் கொல்வார்
உயிரோடு மண்ணையும் மாய்ப்பார்
திண்ணைகள் தோறும்
வெட்டிகள் பேசும் மன்னர்கள் .

அதுவரை
என்னையும் உன்னையும்
என்றுமே வாழ்த்திடும்
அன்பை பகிர்ந்திட்டு
அறுதிவரை வாழ்ந்திடலாம்
இன்புற்று என் தோழா ..

மழையில் மரண ஓலம்..




நீண்ட தார்ச்சாலை சுமக்கும்
இன்னோரன்ன பயணங்கள்
இருமருங்கும் ஏதுமில்லை
இலுப்பையில்லை
ஆலில்லை அரசில்லை
கொன்றை கொண்ட
கூந்தல் பூக்களில்லை..

நீண்டு வளைகிறது பாதை
மனித மனங்களை போன்று ..

வானுயர்ந்த கட்டடங்கள்
வர்ண ஜால அட்டைப்படங்கள்
கோலம் மாற்றி
கொண்(று )டிருந்தது அழகை ..
விளம்பரப் பலகையில்
விலை பேசப்பட்டுக் கொண்டிருந்தது
தமிழர் வளங்கள் ...

கோயில் எங்கினும்
குமரிகள் காணவில்லை
குமாரர்கள் யாருமில்லை
கிழவிகள் எல்லாம்
விழி நீர் மல்க
விழித்திருந்தனர்
சின்னத்திரை தொடர்களில் ..

உழைப்பவரை தேடி
உளம் உளைந்த வேளையில்
களைப்படைந்த யாரையும்
கண்ணெட்டும் காணோம் ..

ஒரு பாடு திரும்பினேன்
உளம் படும் பாடு யாரும் அறிந்திலர்
உயிர் நீத்த பூக்களின்
உறக்கத்தை குலைத்து
உருபெற்று வளர்ந்திருந்தது
இனம் தின்ற அரக்கர் கோட்டை..

மறவர் என்பதை
யாரும் மறந்தும் நினைதிலர்
மாறனும் இவர் என்று
மனம் நொந்து நினைக்கிறேன்

புதுமைகளின் மடியில்
புதிதாக உறங்கும்
அழகிய குழந்தைகள் ..
அறிவதில்லை
அடுத்த பொழுதுகளின்
அரங்கேற்றங்களை ..

கனன்று கொண்டிருக்கும்
நீறு பூத்த நெருப்புகள்
என்று செந்தணலாய் மாறுமையா .. ?

கார் முகில் சூழ்ந்த
கனத்த மழையன்ன புதுமைகளில்
அழிந்திடும்
பண்பாட்டு சிதைவுகளின்
விடுதலை வேட்கையின்
மரண ஓலங்கள்
யாருக்கும் கேட்கவே இல்லை ...

ஜனனம் ...




ஒரு இலைதளிர் காலத்தின்
வைர இலைகளின் மீது
துளிர்த்து மினு மினுக்கிறது
சில மழைத்துளிகளின்
ஜனனம் ...

மகரந்த சேர்க்கைகளின்
மகத்தான சேர்வையில்
மெதுவாக துளிர்த்த
மொட்டுகளில்
மலரின் ஜனனம் ஒன்று
மறு பிறப்புக்காய்
மனு போட்ட வண்ணம் ...

பலநாள் எத்தணிப்பில்
நிறை கற்பனைகள் தின்று
கடைசியாய் கருக்கொண்ட
முதல் கவிதையின்
பிறப்பொன்று...

நீர்காணா நிலமொன்று
துளி நீர் அருந்தி
நிலம் வெடித்து
நீள் தலை தள்ள
விளையும்
முளை ஒன்றின்
முதல் ஜனனம் ...

காதலர் இருவர்
கருத்தொருமித்து
கலவி துளைந்து
கருக்கொண்ட பெண்மை
தாய்மைக்காய் தவம் கொள்ளும்
சிசுக் கொள்ளும்
உயிர் ஜனனம் ...

உயர்வானது ஜனனம்
உனக்கல்ல எனக்கல்ல
மனம் கொள்ளும் அனைத்திலும்
மகிழ்வானது கொள்ளும்
எவ்வுயிர்க்கும்
மரணம் ஈயும் ஜனனம்
மகத்தானது ...

வேசித்தனம் .

 
 
உங்கள் மீதான
என் கோபங்களை
ஒருகணம்
நினைந்து கொள்கிறேன் ..

என் உணர்வுகளை
உடைத்ததனால்
அவை
மன்னிப்புக்கு
உகந்ததாக இல்லை ..

மறந்தும்
மனுப் போட்டு விடாதீர்கள்
மரம் என்று
எனை திட்டும் நிலையை கூட
உங்களுக்கு தர
அணுவளவேனும்
ஆசைப்படவில்லை..

உங்கள் கூரிய நகங்களால்
கூறாக
இதயவறைகளை
பிளந்தது போதும்
இனியும் வேண்டாம்
உங்கள்
இனிய புன்னகை சுமக்கும்
வேசித்தனம் .

" கனவு வேட்டை ..."



ஒரு மெல்லிய
தாள் உடைத்து
வரைய முனைந்துகொண்டிருந்தது
பேனா முனை ..

நிஜவுலகின்
நிழல் உடைத்து
கண்ணியம் கரை உடைத்து
காமம் காற்று வேகத்தில்
தாள் திறந்து புகுந்து கொள்கிறது

புருவம் நீவும் விரல்கள்
புதிதாய் எதையோ தேட
பருவம் தாண்டி
வளர்ந்த
மொடுக்கள் அனைத்தும்
மூர்ச்சை கொள்ள
விரசம் தேடி
விரல்கள் நகர்கிறது
விருப்பு வாக்குகளோடு ..

ஒரு நடிகையின் நளினம்
அவன் நங்கையின் உடலில்
உஷ்ண மூச்சுக்காற்றில்
உடல் உருகி
வேறு உருவம் படைத்து
உடைத்து மீள்கிறது
பெரு மூச்சுகளென ..

எதிலும் சேராச்சுவை
என்பெங்கும்
அம்பெனப் பாய
ஆறாகி நூறாகி
வேராகி வேறாகி
விருந்துண்டு மீள்கிறது..

இரவுகளின் போர்வையில்
கனவுகளில்
போர்வைகள் அற்று
உறங்கிக்கொண்டிருப்பது
காதலர் வேட்டைகள் மட்டுமல்ல
பல்ல கண்ணியவான்களின்
சேட்டைகளும் தான் .

நினைவுகளில் ...


 
 
அவன் உணர்வுகளில்
உறங்கிக்கொண்டு இருக்கிறாள்
அவள் மலராக ..

அதிகாலைகளில்
அலரும் நித்யகல்யாணி என
மதியமும் மிளிரும்
செம்பருத்திஎன
மாலையில் மலரும்
மணி மலரென
இரவுகளில்
மணம் கமழும் மல்லிகைஎன
உணர்வுகளில்
உயிரை சேர்க்கிறாள்
இதமாக ...

ஒரு தாமரையின்
மலர்சியென
மகிழ்ந்தாடும் அவள்
முகமலர்வில்
அலர்ந்து விசிக்கிறது
அவன் இதயக்கமலம் .
அடிக்கடி சொற்களால்
வதைக்கும் அவள்
நினைவு படுத்துகிறாள்
முள்ளில் அழகிய ரோஜாக்களை ..

கண்களில் மலர்ந்த
கார்த்திகை பூக்களில்
கணப்பொழுதில் தொலைத்துவிட்ட
காளை மனதில்
இன்னும்
அதிசய மலர்களின்
மாலையாகவே
தினம் அவனை சூடிக்கொள்கிறாள்
நினைவுகளில் ...

தொலைவுகள் தொலைத்து வா ....



என் நிமிட துளிகளை
நீட்சி கொள்ள வைக்கிறாய்
யுகமாக..
உன் அருகினில்
துயில் கொள்ளாமல்
துவள்கிறது மனது ...

உன் முகத்திருப்பலில்
முடங்கிக் கொள்ளும்
என் புன்னககை
ஓர் பார்வைத் தடவலுக்காய்
பரிதவிக்கிறது ...

வலுவான உன் கரங்களுக்குள்
வனப்புகள் அனைத்தும்
வசமிழக்க துடிக்கிறது
வாவென்று அழைத்துவிடு
வந்துவிடும் உயிர் கொண்டு ...

காத்திருப்பதினிய சுகம்
என் காதலெங்கும் உனது முகம்
கரம் கொண்டு அணைத்துவிடு
காதல் தன்னை பருகிவிடு ..

உன் தோள் வளைவில்
தொலைந்துவிடத் துடிக்கிறேன்
தொலைவுகள் தொலைத்து
வா .....

" ஈர நினைவுகள் "



இந்த நாளின்
இறுதி மணித்துளிகள்
ஈரம் கலந்தே பயணிக்கிறது
உனக்காக ஒதுக்கப் பட்ட
ஒரு ஜென்ம வாழ்க்கையில்
ஒரு நிமிடம் கூட
ஒதுக்கமுடியாத
இந்த நாளின் முடிவுகள்
இறந்தும் சுவாசிக்கிறது
நினைவுகளால் ...

ஒரு மெல்லிய
பனிக்காற்றின் வருடல்களுடன்
வண்ணமயமாக்க முனைந்தாலும்
வர்ணம் இழந்த
வரட்சி வரிகளை சுமந்தே
பயணிக்கிறது ஒரு தென்றல் ..

ஒரு முத்த ஒற்றுதல் இல்லை
முடிகோதும் விரல் இல்லை
முகம் நோக்கும் விழியுமில்லை
ஒரு சூனியத்தின்
விளிம்பை நோக்கிய
பயணமாக இருக்கிறது
எத்தனிப்புகள் ....

உன் எண்ணங்களை
வண்ணங்களை
இதயம் மட்டுமல்ல
இமைகளும் சுமக்கிறது
ஈர நினைவுகளாய் ....

" உயிர்வலி "



இந்த இரவின் வெளியில்
தூவி இருக்கிறேன்
உன் நினைவுகளை
எது எதுவாகவோ
அது எனக்குள் நீர்கிறது
உன் உருவத்தை
உள்ளத்தில் வரித்து ....

ஒற்றையாய் உருகி வழியும்
நிலவின் நிலைகூட
மனதுள்
நிர்மலத்தை கொடுப்பதாயில்லை ..

எத்தனை இரவுகளை
என்னுடன்
ஏகாந்தமாய் ஸ்ருஷ்டித்திருப்பாய் ..
அந்தகாரமான
பொழுதுகள் அனைத்திலும்
ஆழமாய் அருகில் இருந்து
அணைக்கத் தவறுவதில்லை
உன் நினைவுக் கரங்கள்

ஊடல் விதைத்த
கூடல் நினைவுகள் எல்லாம்
தேடல் இன்றியே தவிக்கிறது
காதல் சுமந்து
கனந்து வழியும்
கண்கள் பகிர்கிறது
ஓர் இன்மையின் தேடலின்
உயிர் வலி ....

விடியலை தாருங்கள்..

 
 
ஒரு புத்தன் போதித்த
பல எத்தன் சேர்ந்து
பல வித்தை மாய்த்த
கொடிய நாளிது

குண்டு சத்தங்கள் கேட்டு
குலை உயிர் துடித்து
குறை உயிராய் கிடந்தவர்மேல்
குறி வெறிகொண்டு
குதறி பின் மாய்த்த
குலம் சிதைந்த நாளின்று ..

ஏழுவயது சிறுவனும் புலி
எழுவது வயது கிழவனும் புலி
இனி எங்கு எது பிறப்பினும்
அதுவெல்லாம் புலியென்று
வெளிவரமுன்பே
வெறிகொண்டு
தொப்புள்கொடி அறுத்த நாளின்று ...

மன்னுயிரும் தேடுதடா
மறவர் குலம் விதைந்த தேசமெங்கும்
மறுபடி முளைகளை ...
மாறி நின்று பேசுவோரே
மனதை ஒரு கணம் திருப்புங்கள்
ஓய்ந்தொழிந்து போனது
யாரோ அல்ல யாம்தான் .

இன்று நன்றாய் இருப்பதாய்
பேசும் நாக்கில் உப்புசுவை தெரியோரே
நாளை உம் பாவாடை நாடா
அவிழ்க்கப் படும்பொழுது தெரியும்
இன்றய உமது நன்றுகள்
தின்பது எதுவென்று ..

மனம் கனதி கூடி தவிக்குது
இனம் களவாடப் பட்ட நாளிதனில்
மாண்டவர்கள் மீள்வதில்லை
மனதில் வாழ்பவர்கள் சாவதில்லை ..
உலக மறைகள் பேசும் பெரியோரே
எங்கள் மனங்கள் அமைதிகொள்ள
மார்க்கம் ஒன்று சொல்லுங்கள் ..
மரணம் போர்த்த போர்வைகளைய
ஒரு மாறா விடியலை தாருங்கள்..

"மயக்கும் நீ "



உன்னோடான
என் பொழுதுகளெல்லாம்
வண்ணம் தெளித்து
வரையப்படுகிறது
ஒரு பட்டாம் பூச்சியின்
இறகுகள் கொண்டு ..

அவ்வப்பொழுது
கேள்விகளாய்
உயரும் புருவ வளைவில்
வளைந்து குளைகிறது
வாகாய் மனது ...

ஒரு மென்புன்னகையில்
உலகின்
மாயங்கள் அனைத்தும்
மயங்கிக் கிடப்பதாய் எண்ணம்

விலகமுடியாத
நிமிடங்கள் கொண்டு
புனையப் படுகிறது
நமக்கான
எதிர்காலம் ..

அவ்வபொழுது
பாய்ந்து மீளும்
பார்வையின் வீச்சில்
வெக்கம் துகில் உரிந்து
பக்கம் வீழ்ந்துகிடக்கிறது
ஏக்கம் எதுவரையோ
அதுவரை நீள்கிறது
உன் விழிக் கணைகள் ...

பல பட்டாம் பூச்சியின்
நகர்வுகள் என
உன் மென்மையான
தீண்டலுக்காய்
காதலோடு காத்திருக்கிறது
மங்கை மனது ...
மனம் நீவி வா
மயக்கும் நீ
மயங்கும் நான் ..

நம்பிக்கை..



இந்த நிலாகலத்தின்
நீட்சியில்
உன் நினைவுகளை
படர விட்டிருக்கிறாய்

தொலைவில்
தொட்டுவிடலாம்
நம்பிக்கையில் நடை போட்ட
சின்னம் சிறு குழந்தையாக
உன்னை நேசித்த நாட்கள் ...

அந்த நிலவைப் போல நீ
உன்னை தொடரும்
குழந்தை போல நான் ..

நடு ராத்திரிகளின்
நிஷப்த பயங்களோடு
உன் இன்மையின்
வெறுமையின் பயணங்கள் ..

ஒரு விலகுதலில்
விளித்து மிரள்கிறது மனம்
நிமிட நகர்வுகளின்
மணித்துளிகளை
விழுங்கிச் சிரிக்கிறாய்
விரக்திகளை
பரிசளித்துவிட்டு ..

தொட முடியாத
தொலைவில் உள்ள உன்னிடம்
சிறு குழந்தையாகவே
ஆசை கொள்கிறேன்
நீ
அடைய முடியாத
ஆவல் என்பது
அறியாமலே போயிருக்க கூடாதா?