Saturday, December 28, 2013

பந்தம்...


****

இந்த இரவின் நீட்சியில்
உன் இன்மைகள்
வெறுமையை
விதைத்து செல்கிறது ...

எழுதப்படாத
ஒரு கற்பனை சித்திரம்
வண்ணமிழந்து
கருக்குலைந்து கலைகிறது

உன் அருகாமைக்காக
அலைகின்ற
மனக்கரங்களின் பிடியில்
உவப்பானதாய்
எதுவுமே அகப்படுவதாயில்லை ...

மழிக்கப்படாத
உன் இருநாள் முக முடியின்
கறுகறுத்த உரசல்களுக்காய்
தவமிருந்து சலித்த உதடுகள்
உரக்க சாபமிட்டுக் கொள்கிறது
முத்த அத்தியாயம்
முடிவடைந்து போனதாம் ...

ஏக்கங்கள்
எண்ணிலடங்கா தாபங்கள்
எழுத முடியா கற்பனைகள்
விசும்பி அழுகிறது
தனிமைகளுடன் இணங்க மறுத்து ...
இருந்தும்
தனிமைக்கும் எனக்குமான பந்தம்
மிக நெருங்கியதாகவே இருக்கிறது ..

மலர் இதழ்கள்..


****

இரவு நேரத்து மின் மினிகள் என
மினு மினுத்து சிரிக்கிறது
என் மீதான உன் அன்பு ....
அடங்காத காதலுக்குள்
அமிழ்ந்துவிட்ட மோக முட்கள்
ஒவோன்றின் மேலும்
ஊசிமுனைத் தவம் செய்கிறது மனம் ...

கழல் தீண்டும்
கரிய தேக்குகள் என
மினு மினுத்த கரம் தன்னில்
சிக்கிய கால்கள் இரண்டும்
உன் கைக்கியைவாய்
நர்த்தனம் ஆடுவது விந்தை ...

கொடியை படர்ந்த அரியென
பிடரிக் குழல் நுழைந்து
கோதி இழுக்கும்
விரகம் பகிர்ந்து நிமிர்ந்து
திமிறும் கட்டுடல்
களைந்து சிதறும்
உப்புநீர் சுவைக்கும்
ஒரு மலர் ....

திண்ணிய மெல் மலை படர்ந்து
ஊறும் அமுது துளைந்து
அருவி மருவும்
கள்ளேன போதை ஏறும்
கருவிழி கலந்து காமுறும் ..

இதழ் மடல் கவிழ்ந்து மூடி
இருதயம் இழுத்துப் பூட்டி
குடத்தினுள் ஏற்றும்
குறுகிய ஒளியென
பற்கள் இடையிடை ஒளிர்ந்து
இன்ப லகரியை
இதழில் மீட்டும் ...

கதவுகள் திறந்து கொள்ள
காமனின் வரவு கூறி
காற்றினில் மிதக்கும் சுகந்தம்
களம் காண விளைகின்ற ஏக்கம்
இதுகாறும் கடந்த மென்மை
இலையென்று உரைத்துடைத்து
மடை திறக்கும் ....
மலர் இதழ்கள் .....

கனவுகள் மீள...


****

உனக்காக கழிந்த
ஒவ்வொரு நிமிடத்தின்
உருகிய மனத் துளிகள்
மணித்துளியின் இறுதியில்
மதிப்பிழந்து போனது ஏன் ... ?

கடக்கின்ற காற்றை கேட்டேன்
தழுவிச் செல்லும் தென்றலை கேட்டேன்
மனதில் வீசும் புயல்
மருந்தளவேனும் தெரிகிறதா ?
சுழலில் சிக்கி
அசையாமல் அமர்ந்து சிரிக்கும்
அவன் புன்னகை
அணுவேனும் கலைகிறதா ?

உதட்டுக்கும் மனதுக்கும்
அணுவேனும் சமந்தமுண்டோ
மனதின் வலிகள் எதுவும்
உதட்டில் தெரிவதில்லை ..
உதடுகள் உதிர்த்த சொல்
உள்ளத்தை கிழிக்காமல் இல்லை ...

மங்கி விட்ட மாலை வெயிலில்
மறைந்துவிட்ட உன்
வரவு என்னுள் எழுதிச் செல்கிறது
வருங்கால வசந்தம்
மலர்கள் உதிர்க்கும்
மரக் கிளை என்று ..

கடந்த கால கவலைகள் பெரிதா
நிகழ கால நினைவுகள் இனிதா
எதிர்கால ஏக்கங்கள் எனதா
உள்ளத் தவிப்பு எழுதும்
உருக்கமான மடல் திறந்து
கன்னக் குழி நிரப்பும்
கனிவான முத்தமொன்று பகிர்ந்துவிடு ...
கனவுகள் மீள ...

திறக்காத உதடுகள் ...





உன்னை தாண்டும் தென்றல் என
உன் வாசம் சுமக்கிறது என் சுவாசம்
வரைந்து வைத்த ஓவியமென
நெஞ்சத்தில்
புனைந்து வைத்தகாவியம் நீ
வெகு தூரத்தில் இருப்பினும்
உன்னை விலகாது
நுகரும்
நினைவுப்பசி ...

புகழ் பெற்ற ஓவியர்கள்
தீட்டிய களங்கமற்ற ஓவியம்போன்ற
உன் வரிவடிவில்
வாழ்ந்துவிட துடிக்கிறது
ஒரு நிமிடம்
சிறகடிக்கும் இருதயப்பறவை ...

வண்டுகள் நுகரா மொட்டென
மலர மறுக்கும்
உன் இதழ்க் கடையில்
வழியும் அமுத மொழியில்
சிறகுலர்த்த தவிக்கிறது
இதுகாறும்
இன்மைஎனும்
வெம்மையில் குளித்த மனப்பறவை ...

திறக்காத உதடுகள் திறக்கும்
என்றோ ஒரு நாள் ஒரு பொழுது
ஒரு நொடியில் ...
அதைக் காண அன்று
திறக்காமல் போகலாம்
இமைக் கதவு ...

முத்தச் சுவை ...


கனவுகள் சுமக்கின்ற
அதிகாலைகள் பூக்கின்றன
நினைவு மலர்களை ,
இதழ் சிந்தும்
சிறு துளி நீரில்
மலரின்
ஏக்கம் கலந்து சிதறும் ..

அவிழாத மொட்டின்
அவிழ்தளுக்காக
ஆங்காங்கே ரீங்காரமிடும்
வண்டுகளின் சத்தம்
மலர் மௌனம் கலைக்கும் ...

பிரியாத இருள் களைந்து
மெல்ல விடிகாலை
ஆடையுடுத்தும்
பச்சை பகலவள்
மேனியெங்கும்
ஒளிரும் வைரமென
மிளிரும் பனித்துளி...

செந்தாள் சந்தனமென
குழைத்து மேனியெங்கும்
மிளிரும் மஞ்சள்
வர்ணம் விரவி
புரவி ஏறி
புகார் கலைக்கும் கதிரவன் ..

எங்கும் புலர்தலின் வர்ணம்
புதிதாக தெளித்துச் செல்லும்
குளிர்கால விடியல் ஒன்றில்
எண்ணம் வடியாது மையலுறும்
தையலிவள் கன்னமெங்கும்
குளிர் காற்று எழுதி செல்லும்
சில எச்சில் தெறித்த
முத்தச் சுவை ...


அவனுக்கு மட்டும்....




வெள்ளி வீழ்ந்த
ஓர் அமாவசை இரவு ..
அமானுஷ்யம் கூட
அரண்டு கொள்ளும்
அந்தகாரம் ..
அவனுக்கு மட்டும்
அது எதுவும் தெரியவில்லை ...

ஆங்காங்கே தெரியும்
வீதி விளக்கின்
குமுள் உதிர்க்கும்
குறுகிய ஒளியினுள்
தன இருண்ட வாழ்வை
சிறிது
ஒளியூட்டி உறங்குகின்றான் ...

வறுமையின் ரேகை
வலுவாக தெரிகிறது ..
செருப்பில் இருக்கும்
சிறிது செருக்கு கூட
அவன் தோற்றத்தில் காணோம்
அருகிருக்கும் நீர் பாட்டில்
அவனதாய் இருக்குமா ...
ஐயோ பாவம் என
ஆராவது கொடுத்திருப்பாரோ .....

புண்ணியவான்களும்
இந்த பூமியில் உண்டா ?
இருந்தால் புழுதியில் புரளும்
புருஷனாய் உன்
அவதாரம் இங்கு எப்படி சாத்தியம் ?

வல்லரசு கனவு
வகை வகையாய் சுக போக உணவு
வாரி கொடுக்கும் கஜானா கதவு
சொப்பன லோகத்து
அரசர்களுக்கு ஏது
நாயோடு சேர்ந்து
நடு வீதியில் உறங்கும்
நம்மவர்கள் நிலை புரியும் ... ?

நாய் கூட நன்றாக இருக்குது ..
நாய்க்கும் கெட்ட பொழப்பு உனக்கு ..
நாட்டினை நன்றி கெட்ட இதுகள் ஆண்டால்
நாளை நமக்கும் நிலை இதுதான் ...

கவலையின்றி உறங்குபவனே
கவனமாய் உறங்கு
காலனை விட கொடியவர்க்கு
உன்னைப்போல் அப்பாவிகள் தேவையாம்
அவர்கள் தப்பிக்க ...

விருட்சங்களே ...



இனம் காக்க
விதையான விருட்சங்களே
வீழ்தலில் எழுதல்
வீர மறவர்க்கே சாத்தியம்
வீழ்ந்தாலும் விதையாவது
உங்களுக்கே சாத்தியம் ...

வானளாவும் உங்கள் தியாகம்
வாழ்வு கொடுத்த
உங்கள் ஈகம் ...
உங்கள் உறுதியும் பாசமும்
உள்ளவர்க்கும் இருந்திருந்தால்
உருவாகி இருக்குமாடா தமிழ் ஈழம் ...

உனக்கென்றுதாயுண்டு
உறவாட சொந்தமுண்டு
உளம் பகிர நட்புமுண்டு
இருந்தும்
உருவாகும் தமிழ் ஈழம்
உன் கைபட்டு கருக்கொள்ள
களம் புகுந்து விதை ஆனாய் ..

கார்த்திகை பூக்களே
என்றும் நெஞ்சினில் நீங்களே ..
மயானம் சிதைத்த
மடையர்களுக்கு தெரியவில்லை
நீங்கள் விதையானது அங்கல்ல
விருட்சம் என மனதுள் என்று ...

கரிய புலிகள் என
கடல் கொண்ட வேங்கை என
கயவர் களமாடி
காவியமான
கர்ம வீரர்களே ..
கானல் ஆகுமோ உம் ஈகம்
கடந்து போகுமோ உம் கனவு ..

சாவுக்கு மனுப்போடும்
சரித்திர புருஷர்களே
உங்கள் ஆவி பிரிந்திடினும்
ஆரத் தழுவிய உங்கள்
தாய் மண்ணின் பாசம்
தலை முறைக்கும் சுமக்கும்
உங்கள் தியாகங்களை ..

உங்கள் ஆத்மா உறங்கிவிட கூடாது
உங்கள் கூக்குரல் ஓய்ந்துவிட கூடாது
உங்கள் வேகம் தீர்ந்துவிட கூடாது
உங்கள் தியாகம் முடிந்துவிட கூடாது
விதியான வீரா விளைந்து வா
வீணே காலம் கடக்குது பார் ..
நெஞ்சில் நிலையாகி போன எம்முறவே
உம நினைவை நித்தமும் சுமப்பர் ஈழவரே ...

நினைந்துருகும் இன்றைய நாள்
உன் கனவுகளை சுமந்தவண்ணம்
கார் இருளை கிழித்து
விடியலை பிரசவிக்காதோ ..
உங்கள் கனவுகளை சுமந்து
கடல் கடந்து கண்ணீர் சிந்தும்
இவள் ...

வேட்கை...



மெல்லென படரும்
தென்றல் என
உன் மேன்மைகள்
என்னை படர்ந்த கணம்
சொல் ஒன்றும் போதவில்லை
அந்த சுகம் பகிர்ந்து விளம்பிவிட ...

கள்ளுண்ட மலரணைய போதை
சுகம் காணாத இடமெங்கும்
இதம் பரவ
தொட்டனைத்தூறும் நீரென
நீ தொட்ட அனைத்திலும்
சுகம் பற்றணைத்து
விரவி சுகம் வளர ..

நாணக் குடை விரிந்து
காதல் மலர் தூவி
காமக் கரை தேட
மொட்டவிழ்ந்த
மனக் குளத்து மலர் ஒன்று
உந்தன் முகம் நாடி விசித்திருக்க
கட்டவிழ்ந்த
உந்தன் கனிந்த முகம்
இதழ் தொட்டணைத்து
சுகம் பகிர ...

உந்தன் இதழ் வழி
வழிந்த ஓர்விடம்
என் உயிர் குடித்து
நிமிர்ந்த வேளையில்
கருமணிக் கண் துளிர்த்த
நீர் பகிர்ந்து நின்றது
கானலின் வேட்கையை ...

இளமை மயக்கம்...



நார் இழையோடும்
அழகிய மலரைப்போல்
மனதோடு இழையும்
நினைவுகள் அனைத்திலும்
மெல்லிய
சுகந்தத்தை பரப்பிச் செல்கிறது
நினைவு சுமந்த
மகரந்த தென்றல் ....

தூங்கும் உணர்வுகளில்
பரவும் அதன் சுகந்தங்கள்
உறங்கும் உள்ள கிளர்சிகளை
உராய்ந்து செல்கிறது ..
பற்றிக்கொள்ளும்
பஞ்சென மனமும்
பார்வை படரும் இடமெங்கும்
அதன் வெம்மையை விரவிப் படர்கிறது ...

அதன் காங்குகள் எங்கும்
தெரியும் உன் முக தரிசனங்கள்
மூச்செங்கும்
வெம்மையை வீசி விசிக்கிறது ...

எதோ இனம் புரியாத உணர்வுகள்
அதன் தேவைகளின் வினாக்களை
விதைத்து வாளர்ந்து செல்கிறது
வானளாவும் அதன் தேவைகளுக்கு
தீர்வு ஒரு புன்னகையா
ஒரு இதழ் ஒற்றுதலா
அன்றில் இளமையின் பரிமாறுதலா ?

உன் கை வளைவுகளுக்குள்
காதலும் காமமும் அடங்கிவிடுமா ?
காந்தப் பார்வையில்
புலங்களை தாண்டிய
கதிர் வீசிடுமா ?
இல்லை
கடைசிவரை
ஏக்கங்களும்
எடுத்து சொல்ல முடியாத
எண்ணற்ற உணர்வுப் பிதற்றல்களும்
எஞ்சி விஞ்சி
வஞ்சி இவளை இம்சிக்குமா ?
வார்த்தை ஒன்று பகிர்ந்து விடு
இளமையின் மயக்கம்
இனிதே .........

வாழ்க நீ ...



வளம் கொழிக்கும்
கார் கார்த்திகை மாதம் ஈன்ற
இனம் சுமந்த
என் தலைவன் பிறந்த பொன்னாள் இது

தாய் தனம் சுமந்த
வீரப் பால் குடித்து
மறவர் குலம் வளர்ந்த
வீர வேங்கை இவன்
கரம் பிடித்து
கை கோர்த்து
இனம் காக்க
விதையாக வீழ்ந்த
மறவர் மாவீரர் கல்லறை
வணங்கும் கர்ம வீரனிவன் ...

கர்ணன் படித்ததுண்டு
அர்ஜீனன் படித்ததுண்டு
தர்மன் படித்ததுண்டு
சாணக்கியன் படிதததுண்டு
உன்னை மட்டுமே பார்த்ததுண்டு ...

பத்து திங்கள் சுமந்த
பார்வதி அம்மா
கொண்ட கர்வம் வெல்லும்
உன்னை கணம் தோறும்
மனம் சுமக்கும்
பார் வாழும்
ஈழ அம்மாக்கள் கர்வம் ...

கார்த்திகை ஈன்ற
கரிகால வேங்கையே
உன் கருவிழி கொண்ட
கனவுகள் வாழுமே ...
உன் மனமேந்தும் கனவுகள் கோடி
உன் சுகம் நாடும் உறவுகள் கோடி
உன்னை விழி பார்க்க
தவங்களும் கோடி
வீழாத மறவன் நீ ...

அகவை அறுபதை எட்டும்
அழகான தலைவனே
அகவை ஐந்து நூறு கண்டாலும்
அகமெங்கும் குழந்தையே
உலகமெங்கும்
உனக்காக இன்று தூளி ஆடும் ..
உன் ஒரு வார்த்தைக்காக
செவிகள் ஏங்கும் ...

உன்னை கடந்த காலம் என்கின்றனர்
உன்னை முடிந்த கதை என்கின்றனர் ..
காலம் வென்றவன் முடிவதில்லை
கடமை வீரன் தோற்பதில்லை
நீ வரும்வரை நீளும் மௌனம்
நீ வராது போகினும்
நீ வாழும் தெய்வம் ...

அதுவரை ...
என் தந்தை போன்றவனே வாழி நீ
என் தாயுமாணவனே வாழி நீ
என் மாமன் குணம் கொண்டவனே வாழி நீ
என் இனம் காக்கும்
இமயமே வாழ்க வாழ்க நீ ...

முத்தம்


****

நிலவொழுகும்
ஒரு பொழுதில்
உன் இதழ் தடவி
வழிந்த முத்தம்
வலியை பகிர்ந்து சென்றது ...

எதிர் பார்ப்புகள்
ஏமாற்றங்கள் ஆகும் பொழுது வலிப்பதில்லை
எதற்காகவோ எனும் பொழுது
வலியை தவிர
அது எதையும் தருவதில்லை...

அதற்கு பிறகான
எந்த வார்த்தைகளும்
ரசிப்பதில்லை
உன்னால் அனுப்பப் பட்ட
மேகத் திரள் ஒன்று
என்னுள் மோக துகள் வீசி
மெல்ல நகர்கிறது
அதன் துகள் அனைத்திலும்
விம்பம் ....
நெருப்பென எனை சுடுகிறது

வழிகின்ற நீர் துளி ஒன்று
வாஞ்சையோடு சொன்னது
நான் இருக்கிறேன்
உனக்கே உனக்காய் ...

பரிதவிப்பு..


****
ஊன் தடவும்
மெல்லிய தென்றலில்
உன் சுகம் தேடி
சலிக்கிறது எண்ணப் பறவை ..

இருதயத்தில் கருக்கொள்ளும்
எண்ணற்ற ஆசைக் குழந்தை
உதடுகளில்
குறை மாதக் குழந்தையென
பிறப்பெடுத்து
பெரிதும் தவிக்கிறது
அதன் குறை களைந்து
நிறை பகிர ...

பிரிய முடியாத குறை நிமிடங்கள்
பகிர முடியாத ஒன்றை
தினம் சுமக்கிறது
பரிச்சயமான
பாதசுவடுகளின்
பள்ளங்களில்
வீழ்ந்து அமிழ்கிறது
ஒற்றை ரோஜா இதழ்கள் ..

உன் சிரிப்பில் சிக்கிவிடும்
சிறு சிந்தனை நரம்புகள் எங்கும்
மோகத்தை
நிரப்பி வழிகிறது உன் புன்னகை ...
கடந்துவிட துடிக்கும்
கால்கள் இரண்டை
கட்டிக் கொள்கிறாய்
சிறு குழந்தை என ...
காணாமல் போய்விடுகிறது
எண்ணங்கள் ...

சிதறிய முத்துக்களை
எடுத்து வைக்க
எத்தணிக்கும்
சிப்பிக்கு தெரியாது
சிப்பிக்குள் முத்தல்ல
சிப்பிக்குள் வைரம் ஒன்று
தெரியாமல் குடி கொண்டது ...

நீளும் கைகளுக்குள்
நெருங்கும் உன் மனது
உதடுகளை கொண்டு
கடிவாளம் இடுகிறது
உன்னதமான உறவொன்றை சொல்லி
உள்ளத்தின் தவிப்புகள்
உடைப்பெடுக்கு முன்
உறங்கி விடு
விடிவதற்குள்
ஏதாவது ஆகலாம் ...

அழுக்கான அழகிய தேவதைகள்...




வறுமைகள் பிரசவித்த
அழகிய பதுமைகள்
சாம்பல் படிந்த
கரிய வைரங்கள்
வந்ததின் காரணம் தெரியாமல்
வாழ்வதின் கட்டாயம் புரியாமல்
வாழப்போவதின் நோக்கம் தெரியாமல் ...

அழகிய பூக்கள் என்றும்
மலர் மொக்குகளில் மட்டும்
மலர்வது இல்லையோ
மண்ணிலும் புழுதியிலும்
புரண்டு
புழுதி துளைந்து
மலர்கிறது இங்கு ...

இறைவனின் இருதயமற்ற
சிருஷ்டியில் பிறந்த
அழுக்கான அழகிய தேவதைகள்
பிரம்மன் உதறிய
தூரிகைத் திவலையில்
கருக் கொண்ட
காயமிதுவோ ...?

ஒருவேளை பசி நீங்க
முந்தானை இலை விரித்து
பெண்மை படைத்த
மோக விருந்தில்
துப்பிய எச்சில் துளியா ... ?

அன்றில்
அமாவாசை இரவுகளில்
வானக் கூரையை
வீடாக கொண்டு
தன்னை முழுமையாய் கொடுத்த
ஏழை தாய் சுமந்த
புகை படிந்த பவுர்ணமியோ ?

இல்லை
உற்றாரும் சுற்றாரும்
உதறி விட்ட
எதிர் கால சூரியனோ ...?

சிலவேளை
காலமெனும் அரக்கனின்
காவலர்கள் பிடியில் சிக்கி
ஆதரவற்ற நிலையில் நிற்கும்
அப்துல் கலாமின்
கனவுக் குழந்தையோ ... ?

உணவாக்கும் இருகையில்
ஒரு கை உனக்காக நீளாதோ ?
உடன் பார்க்கும் பல
மனிதர்களில்
மனிதம் ஒருவரிடமாவது வாழாதோ ?

குழந்தாய்
பிச்சை புகாதே
உன் கச்சை தளரினும் ....
எச்சை என உன்னை
கொச்சைப் படுத்தியவர்க்கெல்லாம்
வைரத்தின் வாழ்வு தனை
வாழ்ந்து காட்டி விடு ..

குழந்தையும் இறைவனும் ஒன்றாம்
அதனால்தான்
இரண்டுமே இன்று தெருவில்
எனினும்
அருமை தெரியாதவர்களால்
இவர்கள் பெருமை
என்றுமே இழப்பதில்லை ..
கூட்டுப் புழுவான வாழ்க்கை களைந்து
வண்ணத்துப் பூச்சியென
வட்டமிடும் உங்கள்
சுய வெளிப்பாட்டுக்காய்
காத்திருப்பது
கதிரவன் மட்டுமல்ல
காலமும் தான் ...