Saturday, March 23, 2013

இளவேனில்

 

இருள் மெல்ல துயில் களையும்
காலைப் பொழுது
பகல் கொண்ட வெம்மை தணிக்க
பனி கொண்டு மூடி
படுத்துறங்கிய பகலவனும்
மெல்ல துயில் கலைவான் ..

மெல்லிய புல்தரையில்
சிந்திய பனி துளிகள் பட்டு
சில்லென சிலிர்த்தது புல்வெளி
கள்ளென போதை கொண்டு
தன் கண்களை மூடிக்கொள்ளும்
காற்று வெளி ..
கண்களை திறந்து
காண்பவை எல்லாம்
கண் நிறையும் கற்பனையில்
இறகுகளின் போர்வைக்குள்
இன்னும் ஒருக்களித்து
உறங்கும் ஒரு பட்சி ..

விரிகின்ற ஒளிக்காய்
படர்ந்து பரிதவிக்கும்
பனிப்புகார் தன்னுள்
மறைந்து விசிக்கும்
மரங்களின் குளிர்மை சொல்லும்
இதுவொரு இளவேனில் காலம் .

இயற்கையின் எழில் களையும்
இரும்பு மனம் கொண்டவர்க்காய்
வெளிகளுக்கு வேலிகள்
மரங்களுக்கு மரத்தடுப்பு
மனங்கள்போல்
மரமும் மடை மாறுமோ ..?