Saturday, October 11, 2014

பொய்த்தூக்கம்..





இரவுகளின் ஈரம் துளைந்து
உறங்கிக் கொண்டிருந்தது
அன்றைய பகல் பொழுது ...
மினுக் மினுக்கென
மழைத்துளிகள்
சாலையோரத்து விளகொளி பட்டு
மினு மினுத்துக் கொண்டிருந்தது ..

திறந்திருந்த ஜன்னல் வழியே
சில்லென்ற காற்றின் கரங்கள்
உடை விலக்கி
உல் நுழைந்து சிலிர்த்துக் கொண்டது ...

படுக்கையின் ஓரத்தில்
பகலின் தனிமை போர்த்திய
ஆடைகள் அனைத்தும்
நெகிழ்ந்து பாதி
விடுதலை கொண்டிருந்தது ..

ஒரு மெல்லிய சர்ப்பத்தின்
அசைவுகளென
அவள் திண்ணிய மேனி
திரண்டு புரண்டவண்ணம் ...

அவன் கண்ணியம் சிதறி
கை கொண்டணைத்து
மெல் இதழ் இணைந்த பொழுதில்
அவள் பொய்த்தூக்கம் களைந்து
மெய் உறவு பூத்து விசித்து பெண்மை ...

Sunday, October 5, 2014

தேவை ...





ஓர் மழைக்கால
மாலையில்
உன்னிடம்
மயங்கிக் கொண்டிருகிறது
மனமும் .......

ஓர் குளிர் காற்றில்
கூசி சிலிர்க்கும்
கைகளின் ரோமத்தில்
படர்ந்திருந்தது
உன் பார்வை ....

ஓர் அழகான
மழைப் பறவை என
மனது
மழை வெள்ளத்தில்
முக்குளித்து
புரள்கிறது ...
அதன் சிறகுலர்த்தும்
ஒவ்வொரு துளியும்
உன் மீது பட்டு
உலர்ந்து கொள்கிறது ....

ஒரு சாரலின் வேகத்தில்
சட்டென்று ஆடிய மேனி
சரிந்து கொள்கிறது
ஜன்னலோரத்தில்...
ஓர் போர்வைக்கும்
ஓர் கதகதப்புக்குமான தேவை
அதிகரித்துக்கொண்டே இருந்தது ...

ஓர் செல்லப் பூனையாக
உன்னிடம் ஒட்டிக்கொள்ள
ஆசைப்படும் மனதுக்கு
ஒரே ஒரு சமிக்கை கொடு
ஒருகணமும் பிரியாமல்
உனக்குள்ளே அடங்கி முடிக்கிறேன் ..

Wednesday, October 1, 2014

ஊடல் ..



உன்
மெல்லிய தீண்டலின்
பின்னான தேவைகள்
தெரிந்திருந்தும்
ஏனோ
உறவுக்குள்
உள்வர முடியவில்லை ..

நெகிழ்ந்திருந்த
சேலையின் கொசுவத்தில்
உன் விருப்பத்தின்
விண்ணப்பங்கள்
படர்ந்த வண்ணம் ...

உன் மூச்சின் வெப்பம்
கழுத்தினை
சூடேற்றிய பொழுதும்
குளிர்ந்த நிலவின்
மௌனங்களின்
நீட்சியாகவே
இருக்கின்றது ...

அதன் தேவை
எதோ ஒன்றாகவே இருக்கிறது ..
தொட்டதும் அலரும்
மலர் ஒன்றின்
ஒதுக்கம்
உணர்ந்திருந்த பொழுதும்
உதிர மறுக்கும்
அந்த ஒரு சொல்லில்
கட்டுண்டு
அவிழ மறுக்கிறது மலர் ..

மௌன விரதத்தின்
நீட்சியில்
உன் மனிப்புகள்
விண்ணப்பிக்கப் பட்ட
மறுகணம்
அலர்ந்துவிடுகிறது
உன் மீதான மையல்கள் .

ஏக்கங்கள் ...




ஓர் நிலவணைந்த
இராக்கலத்தின்
நட்சத்திரங்கள் என
மினு மினுக்கும்
கண்களின் அசைவில்
அவள் கனவுகளை
தேடிக்கொண்டிருந்தான்
அவன் ....

ஒளிவிளக்கின் வரிவடிவில்
செதுக்கிய சிற்பமாக
அசைவற்று
ஒருக்களிந்து சாய்ந்து நிற்கும்
அவள் உருவம்
உராய்ந்து சென்று கொண்டிருந்தது
அவனுள்
மோகத் தீ மூட்டி ...

அலைநின்ற அந்த
கூந்தலின் அசைவில்
அலைந்து கொண்டிருந்தது
மனக்குரங்கு ...

அந்தகாரத்தின்
அமைதிக் கடலில்
அவள் விம்மிய மார்பின்
ஏற்ற இறக்கங்களில்
இளமைப் படகு
அங்கும் இங்கும்
ஆடிக்கொண்டிருந்தது ...

திடீரென கடந்த
ஓர் சாலை வண்டியின் ஒளியில்
அவள் முகத்தில்
சட்டெனப் பதிந்த
பார்வையில் தெரிந்தது
வர்ணமற்ற அவள் சேலையில்
வர்ணகளுக்காய்
அவள் முக ஏக்கங்கள் ...

தென்றல்
இன்னும் வீசிக்கொண்டே இருந்தது
அவன் மனதில் மட்டும்
புயலாக ...

பெண்மை ..




துகில் கலைந்த
நிலவொன்றின்
வெம்மையோடு
புரண்டு கொண்டிருக்கும்
மோக நிலாவென
கவி சொல்கிறாய் ..

ஓர் உந்துதலில்
உன் இதழ்களை
இதழ் அடைந்த கணத்தில்
இம்சை எனதானது ..
வலிய உன் மீசை முடிகள்
மெல்லிதழ் உராய்ந்த கணங்களில்
நீண்டு வழிகிறது மோகம் ..

மெல் ஆடை துளையும்
உன் கரங்களுக்குள்
சிக்கித் தவிக்கும்
பெண்மையின்
ஆழ்ந்த சுவாசங்களில்
ஆண்மையின் தேவை
அதிகரித்திருந்தது ..

ஓர் அணை உடைக்கும்
ஆர்ப்பரிப்புகாய்
ஒவொரு கணமும்
காத்திருக்கிறது
அதன் ரகசியங்கள்
துறந்த பெண்மை ..

மோகங்ககள் ....







இரவின் சுகந்தங்களை
தென்றல் புணர்ந்துகொண்டிருக்கும்
அழகிய இளவேனில் காலம் ..

அருகினில்
துயிலாமல்
புரளும் எனை அணைத்து
இரகசியமாய் கேட்கிறாய்
வேண்டுமா என்று ...?

இரவின் ஆரம்பத்தில்
என் இளமைகளை
தூண்டாமல் இருந்திருந்தால்
வேண்டாம் என சொல்லிடலாம் ..

அத்து மீறும்
பார்வை வட்டத்துள்
அங்கமெல்லாம்
கூசி சிலிர்த்த பொழுதே
அடங்காத ஆசைகளை
அறிந்திருந்தாய் நீ ..

உதட்டுக் கடிப்பிலும்
விம்மித் தணிந்த
மார்பிலும்
விழுந்து மீண்ட
பார்வைகளுக்கு தெரியாதா
விரக காற்று
தீயை மூட்டியது ....

ஒரு மோன நிலையிலும்
உன் மீதான மோகங்ககள்
முட்டி மோதியதை
முகர்ந்திருந்தும்
என்னடா கேள்வி இது ..

இரவில் நாங்கள்
வெட்கம் கெட்டவர்கள்தான்
விருப்பமானவனிடம் ..

மனித நேயம் ...





வளர்ச்சியின் விளிம்பில்
தாகமெடுத்து
வறண்டு கிடக்கிறது

ரத்த வெள்ளத்தில்
புரண்டு கிடக்கும்
முகமறியா ஒருவரை
படம் பிடித்து
பரிதாப நிலைதகவல் போடும்
பருவத்தில் இருக்கிறது ..

பள்ளிக்கு சென்று
அகர லகரம்
கற்கும் பருவத்தில்
அடிகோடியில்
அடுக்களையில்
புரளும் நிலையில்
ஏக்கம் நிறைந்து
சிறுமியின்
தேடலில் நீள்கிறது ...

அடுத்தவர் வீடில்
எரியும் தீயில்
புகைப்பிடிக்கும்
அண்ணன் சொல்வதெல்லாம்
அடுத்தவர் பிரச்னை
நமக்கெதுக்கு ..
அவன் தீக்கங்கில்
தீய்ந்து கருகிறது ...

இன்றும்
விவாதப் பொருளாகி
கற்பனைகளில்
பேசப்பட்டு
கற்பழிக்கப் படுகிறது
பெண்களின் ஆடைகள்
அதில்
புண்பட்டு துவளும் மனது
புதிதாக தேடுகிறது ....

மனிதரே இல்லா சுழலில்
மனித நேயத்தை தேடி
எங்கனம் கரையேறுவது ?
இருந்தும்
ஒரு விடியலின் கரை தேடி
விவாதமாக
தொடர்கிறது
அன்றாடம்
தொலைக்காட்சியிலும்
மனித நேயம் ...

இந்த இரவு ........



இந்த
இரவுகளின் பிடியில்
ஏதோ ஒன்று
எஞ்சியிருக்கிறது .
உனக்கான நேசம்
உனக்கான அன்பு
உனக்கான காதல்
உனக்கான ஸ்பரிசம்
உனக்கனா முத்தம்
இப்படி ...

எனக்காக
கண்ணீர் மட்டும் ...

Monday, September 15, 2014

குறை நிலவு..




இந்த
இரவுகளின் மடியில்
எழுதப்பட்டு இருக்கிறது
என் தனிமைகளின் விதிகள் ..

உறக்கமற்ற
இரவுகள் பல கடந்தாலும்
உதிரம் உறைந்த
இரவுகள் அணைக்கிறது
விடியல் காணாத
விட்டில் இவள் ..

முடியாத நினைவுகளுடன்
போராடும்
முகவரி தொலைத்த
குறை நிலவு..

உன் சிதறிய புன்னகையில்
உதறிய
என் காதலை தேடுகிறேன் ..
உன் காலடியில்
காய்ந்து கிடப்பதை
அறியாமல் ......

Sunday, September 7, 2014

அன்பு..




உயிர்களில் பேதமில்லை
உணர்வுகளில் ஏதுமில்லை
நாமாக நாமுண்டு
நாமிருவர் எனும் போதும் ..

வினை கொண்ட தேசத்தில்
விலை போகும் மனிதருள்
விடியல் தேட முனைகின்றார்
விடுதலைக்காய் ஏங்குபவர் ,
எனக்கும் ஓர் இடமுண்டு
எந்நேரமும் சாவுண்டு
என் பிறப்பில் பாவமுண்டு ..

வாழ்க்கை இனித்திடும் தோழா
வா வந்து கை கோர்த்திடு
இமயங்கள் தொட வேண்டாம்
இருவருள்ளும் பகை வேண்டாம்
இதயங்கள் பகிர்ந்திடு
இருக்கும்வரை இன்புறலாம் ..

என்னையும் உண்பார்
உன்னையும் கொல்வார்
உயிரோடு மண்ணையும் மாய்ப்பார்
திண்ணைகள் தோறும்
வெட்டிகள் பேசும் மன்னர்கள் .

அதுவரை
என்னையும் உன்னையும்
என்றுமே வாழ்த்திடும்
அன்பை பகிர்ந்திட்டு
அறுதிவரை வாழ்ந்திடலாம்
இன்புற்று என் தோழா ..

மழையில் மரண ஓலம்..




நீண்ட தார்ச்சாலை சுமக்கும்
இன்னோரன்ன பயணங்கள்
இருமருங்கும் ஏதுமில்லை
இலுப்பையில்லை
ஆலில்லை அரசில்லை
கொன்றை கொண்ட
கூந்தல் பூக்களில்லை..

நீண்டு வளைகிறது பாதை
மனித மனங்களை போன்று ..

வானுயர்ந்த கட்டடங்கள்
வர்ண ஜால அட்டைப்படங்கள்
கோலம் மாற்றி
கொண்(று )டிருந்தது அழகை ..
விளம்பரப் பலகையில்
விலை பேசப்பட்டுக் கொண்டிருந்தது
தமிழர் வளங்கள் ...

கோயில் எங்கினும்
குமரிகள் காணவில்லை
குமாரர்கள் யாருமில்லை
கிழவிகள் எல்லாம்
விழி நீர் மல்க
விழித்திருந்தனர்
சின்னத்திரை தொடர்களில் ..

உழைப்பவரை தேடி
உளம் உளைந்த வேளையில்
களைப்படைந்த யாரையும்
கண்ணெட்டும் காணோம் ..

ஒரு பாடு திரும்பினேன்
உளம் படும் பாடு யாரும் அறிந்திலர்
உயிர் நீத்த பூக்களின்
உறக்கத்தை குலைத்து
உருபெற்று வளர்ந்திருந்தது
இனம் தின்ற அரக்கர் கோட்டை..

மறவர் என்பதை
யாரும் மறந்தும் நினைதிலர்
மாறனும் இவர் என்று
மனம் நொந்து நினைக்கிறேன்

புதுமைகளின் மடியில்
புதிதாக உறங்கும்
அழகிய குழந்தைகள் ..
அறிவதில்லை
அடுத்த பொழுதுகளின்
அரங்கேற்றங்களை ..

கனன்று கொண்டிருக்கும்
நீறு பூத்த நெருப்புகள்
என்று செந்தணலாய் மாறுமையா .. ?

கார் முகில் சூழ்ந்த
கனத்த மழையன்ன புதுமைகளில்
அழிந்திடும்
பண்பாட்டு சிதைவுகளின்
விடுதலை வேட்கையின்
மரண ஓலங்கள்
யாருக்கும் கேட்கவே இல்லை ...

ஜனனம் ...




ஒரு இலைதளிர் காலத்தின்
வைர இலைகளின் மீது
துளிர்த்து மினு மினுக்கிறது
சில மழைத்துளிகளின்
ஜனனம் ...

மகரந்த சேர்க்கைகளின்
மகத்தான சேர்வையில்
மெதுவாக துளிர்த்த
மொட்டுகளில்
மலரின் ஜனனம் ஒன்று
மறு பிறப்புக்காய்
மனு போட்ட வண்ணம் ...

பலநாள் எத்தணிப்பில்
நிறை கற்பனைகள் தின்று
கடைசியாய் கருக்கொண்ட
முதல் கவிதையின்
பிறப்பொன்று...

நீர்காணா நிலமொன்று
துளி நீர் அருந்தி
நிலம் வெடித்து
நீள் தலை தள்ள
விளையும்
முளை ஒன்றின்
முதல் ஜனனம் ...

காதலர் இருவர்
கருத்தொருமித்து
கலவி துளைந்து
கருக்கொண்ட பெண்மை
தாய்மைக்காய் தவம் கொள்ளும்
சிசுக் கொள்ளும்
உயிர் ஜனனம் ...

உயர்வானது ஜனனம்
உனக்கல்ல எனக்கல்ல
மனம் கொள்ளும் அனைத்திலும்
மகிழ்வானது கொள்ளும்
எவ்வுயிர்க்கும்
மரணம் ஈயும் ஜனனம்
மகத்தானது ...

வேசித்தனம் .

 
 
உங்கள் மீதான
என் கோபங்களை
ஒருகணம்
நினைந்து கொள்கிறேன் ..

என் உணர்வுகளை
உடைத்ததனால்
அவை
மன்னிப்புக்கு
உகந்ததாக இல்லை ..

மறந்தும்
மனுப் போட்டு விடாதீர்கள்
மரம் என்று
எனை திட்டும் நிலையை கூட
உங்களுக்கு தர
அணுவளவேனும்
ஆசைப்படவில்லை..

உங்கள் கூரிய நகங்களால்
கூறாக
இதயவறைகளை
பிளந்தது போதும்
இனியும் வேண்டாம்
உங்கள்
இனிய புன்னகை சுமக்கும்
வேசித்தனம் .

" கனவு வேட்டை ..."



ஒரு மெல்லிய
தாள் உடைத்து
வரைய முனைந்துகொண்டிருந்தது
பேனா முனை ..

நிஜவுலகின்
நிழல் உடைத்து
கண்ணியம் கரை உடைத்து
காமம் காற்று வேகத்தில்
தாள் திறந்து புகுந்து கொள்கிறது

புருவம் நீவும் விரல்கள்
புதிதாய் எதையோ தேட
பருவம் தாண்டி
வளர்ந்த
மொடுக்கள் அனைத்தும்
மூர்ச்சை கொள்ள
விரசம் தேடி
விரல்கள் நகர்கிறது
விருப்பு வாக்குகளோடு ..

ஒரு நடிகையின் நளினம்
அவன் நங்கையின் உடலில்
உஷ்ண மூச்சுக்காற்றில்
உடல் உருகி
வேறு உருவம் படைத்து
உடைத்து மீள்கிறது
பெரு மூச்சுகளென ..

எதிலும் சேராச்சுவை
என்பெங்கும்
அம்பெனப் பாய
ஆறாகி நூறாகி
வேராகி வேறாகி
விருந்துண்டு மீள்கிறது..

இரவுகளின் போர்வையில்
கனவுகளில்
போர்வைகள் அற்று
உறங்கிக்கொண்டிருப்பது
காதலர் வேட்டைகள் மட்டுமல்ல
பல்ல கண்ணியவான்களின்
சேட்டைகளும் தான் .

நினைவுகளில் ...


 
 
அவன் உணர்வுகளில்
உறங்கிக்கொண்டு இருக்கிறாள்
அவள் மலராக ..

அதிகாலைகளில்
அலரும் நித்யகல்யாணி என
மதியமும் மிளிரும்
செம்பருத்திஎன
மாலையில் மலரும்
மணி மலரென
இரவுகளில்
மணம் கமழும் மல்லிகைஎன
உணர்வுகளில்
உயிரை சேர்க்கிறாள்
இதமாக ...

ஒரு தாமரையின்
மலர்சியென
மகிழ்ந்தாடும் அவள்
முகமலர்வில்
அலர்ந்து விசிக்கிறது
அவன் இதயக்கமலம் .
அடிக்கடி சொற்களால்
வதைக்கும் அவள்
நினைவு படுத்துகிறாள்
முள்ளில் அழகிய ரோஜாக்களை ..

கண்களில் மலர்ந்த
கார்த்திகை பூக்களில்
கணப்பொழுதில் தொலைத்துவிட்ட
காளை மனதில்
இன்னும்
அதிசய மலர்களின்
மாலையாகவே
தினம் அவனை சூடிக்கொள்கிறாள்
நினைவுகளில் ...

தொலைவுகள் தொலைத்து வா ....



என் நிமிட துளிகளை
நீட்சி கொள்ள வைக்கிறாய்
யுகமாக..
உன் அருகினில்
துயில் கொள்ளாமல்
துவள்கிறது மனது ...

உன் முகத்திருப்பலில்
முடங்கிக் கொள்ளும்
என் புன்னககை
ஓர் பார்வைத் தடவலுக்காய்
பரிதவிக்கிறது ...

வலுவான உன் கரங்களுக்குள்
வனப்புகள் அனைத்தும்
வசமிழக்க துடிக்கிறது
வாவென்று அழைத்துவிடு
வந்துவிடும் உயிர் கொண்டு ...

காத்திருப்பதினிய சுகம்
என் காதலெங்கும் உனது முகம்
கரம் கொண்டு அணைத்துவிடு
காதல் தன்னை பருகிவிடு ..

உன் தோள் வளைவில்
தொலைந்துவிடத் துடிக்கிறேன்
தொலைவுகள் தொலைத்து
வா .....

" ஈர நினைவுகள் "



இந்த நாளின்
இறுதி மணித்துளிகள்
ஈரம் கலந்தே பயணிக்கிறது
உனக்காக ஒதுக்கப் பட்ட
ஒரு ஜென்ம வாழ்க்கையில்
ஒரு நிமிடம் கூட
ஒதுக்கமுடியாத
இந்த நாளின் முடிவுகள்
இறந்தும் சுவாசிக்கிறது
நினைவுகளால் ...

ஒரு மெல்லிய
பனிக்காற்றின் வருடல்களுடன்
வண்ணமயமாக்க முனைந்தாலும்
வர்ணம் இழந்த
வரட்சி வரிகளை சுமந்தே
பயணிக்கிறது ஒரு தென்றல் ..

ஒரு முத்த ஒற்றுதல் இல்லை
முடிகோதும் விரல் இல்லை
முகம் நோக்கும் விழியுமில்லை
ஒரு சூனியத்தின்
விளிம்பை நோக்கிய
பயணமாக இருக்கிறது
எத்தனிப்புகள் ....

உன் எண்ணங்களை
வண்ணங்களை
இதயம் மட்டுமல்ல
இமைகளும் சுமக்கிறது
ஈர நினைவுகளாய் ....

" உயிர்வலி "



இந்த இரவின் வெளியில்
தூவி இருக்கிறேன்
உன் நினைவுகளை
எது எதுவாகவோ
அது எனக்குள் நீர்கிறது
உன் உருவத்தை
உள்ளத்தில் வரித்து ....

ஒற்றையாய் உருகி வழியும்
நிலவின் நிலைகூட
மனதுள்
நிர்மலத்தை கொடுப்பதாயில்லை ..

எத்தனை இரவுகளை
என்னுடன்
ஏகாந்தமாய் ஸ்ருஷ்டித்திருப்பாய் ..
அந்தகாரமான
பொழுதுகள் அனைத்திலும்
ஆழமாய் அருகில் இருந்து
அணைக்கத் தவறுவதில்லை
உன் நினைவுக் கரங்கள்

ஊடல் விதைத்த
கூடல் நினைவுகள் எல்லாம்
தேடல் இன்றியே தவிக்கிறது
காதல் சுமந்து
கனந்து வழியும்
கண்கள் பகிர்கிறது
ஓர் இன்மையின் தேடலின்
உயிர் வலி ....

விடியலை தாருங்கள்..

 
 
ஒரு புத்தன் போதித்த
பல எத்தன் சேர்ந்து
பல வித்தை மாய்த்த
கொடிய நாளிது

குண்டு சத்தங்கள் கேட்டு
குலை உயிர் துடித்து
குறை உயிராய் கிடந்தவர்மேல்
குறி வெறிகொண்டு
குதறி பின் மாய்த்த
குலம் சிதைந்த நாளின்று ..

ஏழுவயது சிறுவனும் புலி
எழுவது வயது கிழவனும் புலி
இனி எங்கு எது பிறப்பினும்
அதுவெல்லாம் புலியென்று
வெளிவரமுன்பே
வெறிகொண்டு
தொப்புள்கொடி அறுத்த நாளின்று ...

மன்னுயிரும் தேடுதடா
மறவர் குலம் விதைந்த தேசமெங்கும்
மறுபடி முளைகளை ...
மாறி நின்று பேசுவோரே
மனதை ஒரு கணம் திருப்புங்கள்
ஓய்ந்தொழிந்து போனது
யாரோ அல்ல யாம்தான் .

இன்று நன்றாய் இருப்பதாய்
பேசும் நாக்கில் உப்புசுவை தெரியோரே
நாளை உம் பாவாடை நாடா
அவிழ்க்கப் படும்பொழுது தெரியும்
இன்றய உமது நன்றுகள்
தின்பது எதுவென்று ..

மனம் கனதி கூடி தவிக்குது
இனம் களவாடப் பட்ட நாளிதனில்
மாண்டவர்கள் மீள்வதில்லை
மனதில் வாழ்பவர்கள் சாவதில்லை ..
உலக மறைகள் பேசும் பெரியோரே
எங்கள் மனங்கள் அமைதிகொள்ள
மார்க்கம் ஒன்று சொல்லுங்கள் ..
மரணம் போர்த்த போர்வைகளைய
ஒரு மாறா விடியலை தாருங்கள்..

"மயக்கும் நீ "



உன்னோடான
என் பொழுதுகளெல்லாம்
வண்ணம் தெளித்து
வரையப்படுகிறது
ஒரு பட்டாம் பூச்சியின்
இறகுகள் கொண்டு ..

அவ்வப்பொழுது
கேள்விகளாய்
உயரும் புருவ வளைவில்
வளைந்து குளைகிறது
வாகாய் மனது ...

ஒரு மென்புன்னகையில்
உலகின்
மாயங்கள் அனைத்தும்
மயங்கிக் கிடப்பதாய் எண்ணம்

விலகமுடியாத
நிமிடங்கள் கொண்டு
புனையப் படுகிறது
நமக்கான
எதிர்காலம் ..

அவ்வபொழுது
பாய்ந்து மீளும்
பார்வையின் வீச்சில்
வெக்கம் துகில் உரிந்து
பக்கம் வீழ்ந்துகிடக்கிறது
ஏக்கம் எதுவரையோ
அதுவரை நீள்கிறது
உன் விழிக் கணைகள் ...

பல பட்டாம் பூச்சியின்
நகர்வுகள் என
உன் மென்மையான
தீண்டலுக்காய்
காதலோடு காத்திருக்கிறது
மங்கை மனது ...
மனம் நீவி வா
மயக்கும் நீ
மயங்கும் நான் ..

நம்பிக்கை..



இந்த நிலாகலத்தின்
நீட்சியில்
உன் நினைவுகளை
படர விட்டிருக்கிறாய்

தொலைவில்
தொட்டுவிடலாம்
நம்பிக்கையில் நடை போட்ட
சின்னம் சிறு குழந்தையாக
உன்னை நேசித்த நாட்கள் ...

அந்த நிலவைப் போல நீ
உன்னை தொடரும்
குழந்தை போல நான் ..

நடு ராத்திரிகளின்
நிஷப்த பயங்களோடு
உன் இன்மையின்
வெறுமையின் பயணங்கள் ..

ஒரு விலகுதலில்
விளித்து மிரள்கிறது மனம்
நிமிட நகர்வுகளின்
மணித்துளிகளை
விழுங்கிச் சிரிக்கிறாய்
விரக்திகளை
பரிசளித்துவிட்டு ..

தொட முடியாத
தொலைவில் உள்ள உன்னிடம்
சிறு குழந்தையாகவே
ஆசை கொள்கிறேன்
நீ
அடைய முடியாத
ஆவல் என்பது
அறியாமலே போயிருக்க கூடாதா?

Wednesday, May 14, 2014

விரகம்...



திறந்த மார்பில்
படர்ந்த எந்தன்
குழல் நீவி கேட்கிறாய்
அன்பே
தேனூறும் உன்
இதழ் சுவைத்தேன்
வெண்டனய
விரல் இணைந்தேன்
வாழை  தண்டுகள் இரண்டில்
மென் தலை அமிழ்ந்தேன்
எனினும்
என் நெஞ்சு கொண்ட பேறு
என் கைகள் கொள்ளாதோ
கண்கள் கண்ட
 மது கிண்ணம் நுகர
 இதழ்கள் வேண்டாவோ..

விந்தையாய் உன்
விழிகள் நுழைந்தேன்
விரக விதையில் வீழ்ந்தேன்
விருட்சமாய் ஆசைகள் வீழ
வேண்டுமோ என்றன விழிகள் ..

விழிகளின் விரகம் உணர்த்து
விரதம் உடைத்து
விருந்து காண விரைந்திடும்
விரல்கள் பற்றி
வினாவொன்று கொள்கிறேன்
மடை தீண்டி விடாதே
உடைந்து விடும் அணையின்
வேகமும் ஆழமும்
உன்னை உயிர் உருக்கொள்ள
செய்திவிடும்
உந்தன் கரு சுமக்க நான் தயார்தான்
காலமெல்லாம்
என்னை உயிர் சுமக்க நீ என்றால் ..

Tuesday, May 13, 2014

விண்ணப்பம் ..



உயிர்வழி
உருகும் வலி
பருகிடும் நீ
பாவி என் பாதி ...

கதிர் ஒளிகாணா
காந்தள் இவள்
காய்ந்த சருகாய்
கனதியிழந்து கனக்கிறாள் ..

வற்றாத ஜீவ நதியில்
வழிந்தோடும்
நீர்  அலையில்
நினைவுச் சுழல் உந்த
நீர்ந்து தீர்கிறது ஆத்மா ..

எரிந்து கழிந்த
எதிர்பார்ப்புகள் எலாம்
ஏலம் கேட்கிறது
எதிர்கால ஆசைகளை
வருந்தி அழைக்க
வாய்பிளந்து கிடக்கிறது
வாழ்க்கையின்
பாதைகள் ..

விடிந்திடும் வானமதில்
விடியாத ஒரு பாகமென
முடியாத பந்தங்கள்
முடிச்சிட்டு மகிழ்கிறது
பிரியாத நினைவுகளிடம்
பிரியமாய் ஒரு விண்ணப்பம்
முடியாத கனவுகளை
முழுவதுமாய் எரித்துவிடு
முகவரியாவது எச்சமாகட்டும் ...

Tuesday, May 6, 2014

நினைவு...



உன் விலகுதல்கள்
நினைவுகளால்
நிரப்பப் படுகிறது ..
அதன் நிறைதலிலும்
வழிதலிலும்
உடைந்து சிதறுகிறது
புன்னகை பூக்கள் .

ஓர் நிலாக் கால
வெகு தூர பயணத்தில்
அமானுஷ்ய கணங்களாக
உன் பிரிவுகள் சுமந்து
நகர்கிறது பொழுது ..

அடிக்கடி
நினைவுகள்
கிள்ளிப்பார்கிறது
வாழ்தலின் நிச்சயத்தை
உன் விலகுதலிலும்
உயிர் வாழ்கிறதா என ..

உன் உறக்கங்களை
மௌனமாய் ரசிக்கிறேன்
ஒரு நிலவென நுழைந்து
நிறைகிறாய் ஒளியென ..
வரைகிறேன் உன்னை
வளைகிறாய்
என் நினைவுகளில் மட்டும் .

நிஜங்களை தொலைத்து
நினைவுகள் தேடிய பயணத்தில்
உதிரிகளாய் நிறைகிறாய்
உளமெங்கும் ..
உன் வளமெங்கும் வாழ்ந்துவிட
மனம் ஏங்கும் இவள் ....

Sunday, May 4, 2014

மோகம் --



உன்
இறுகிய அணைப்பில்
திமிறிய மார்புக்குள்
நுழைந்து நுகர்கிறாய்
நிமிர்ந்து வளைகிறது
தளிர்ந்த பென்மைகளின் மென்மை ...

இருள் சூழ்ந்த
கரு மேகம் தலைமுடிக்குள்
நுழைந்து இழுத்துக்கொள்கிறது
கரை உடைத்த மோகம் ..

வெகு நேர தாகத்தில்
வெகுண்ட வெண் குடங்கள்
மிரண்டு சிவக்கிறது
உன் வேகத்தில் ..

முகுள் கொண்ட
உன் என் மோகவெப்பத்தில்
மெழுகாகி
உருகி வழிகிறது  மோகம்

இதழ் கொண்ட தாகத்தில்
இமை கொண்டு மூடும்
விழி வரையும்
எழுதப்படாத காவியம்
தீண்டலில்
தீட்டப் படுகிறது
ஒரு மோகன சித்திரமாய் ...

Tuesday, April 29, 2014

தனிமைகள் ...



இந்த இரவின் நீள்தலில்
எங்கும் விரவிக் கிடக்கிறது
தனிமைகள் ..

இமைகள் தீண்டப் படாமலே
இழந்து கிடக்கிறது
உறக்கத்தை ..

நினைவுகள்
தொலைவுகள் நோக்கிய
அதன் பயணத்தை
இனிதே நடத்தி சோர்கிறது ..

எந்த வேளையும்
தன்னிலை மீறக் கூடிய
கண்ணிமை வழி
நீர்த்துருத்தல்கள் ..

விடிந்துவிடாதா ..
இது முடிந்துவிடாதா ...
சாதலிலும் வாழ்தல் மேல்
உன் வலிகளை சுமந்து ..

உறக்கங்களுடன்
எந்த உடன்பாடும்
நிறை பெறவில்லை
தனிமைகளின் நீள்தல்
தன்வசமாக்கி
தொடந்தவண்ணம் ...

Monday, April 28, 2014

"பன்னீர் நதியில் கண்ணீர் புஷ்பங்கள்.."




இதழ் கடந்தும்
இனிக்கிறது உன் முத்தம்
இயல்பிழந்து
தவிக்கிறது இதயம் ..

உன் விரல்களின் விளிம்பில்
விரகம் தடவி
விளைகிறாய நகம் தீண்ட
கணுக்கள் தோறும்
ஊற்றெடுக்கிறது
பன்னீர் நதிகள் ..

விளங்க முடியாத
உன் பார்வைக்கும்
விரசம் கொள்ளவைக்கும்
உன் புன்னகைக்கும்
விலாகத உன் அன்புக்கும்
இடையில் பாய்கிறது
ஒரு மிதமான சுகந்தத்துடன் அது ..

கைசேர முடியாத காதலுடன்
கண நேரம் பிரியா நேசமுடன்
ஒரு மின்னலென
பூத்து மறைகிறது
கண்ணீர் புஷ்பங்கள் ...

அணைத்து அர்ச்சிக்க
அணுவளவு வாய்ப்பு
அற்றுப் போனாலும் - என்
கண்ணீரால் அர்ச்சிப்பேன்
மறைந்தாலும்
உனக்காய் மலர்ந்து மறையும்
உன் பாசமெனும்
பன்னீர் நதியில் அலர்ந்த
கண்ணீர் புஷ்ப்பங்கள் .

கனவு...




என் கனவுத் தொழிற்சாலையில்
கணநேர இடைவெளியின்றி
பிரசவித்து சிரிக்கிறது
உன் நினைவுக் குழந்தை ...

தூரம் தொடர்ந்த
உன் நினைவுக் கரங்களில்
தினம் ஒரு குழந்தையாய்
குழைந்து குலைந்து கிடக்கிறேன்

மையல் கொண்ட சிற்ப்பிஎன
மையம் திறந்து கொள்கிறது
உன் முத்தினை
சொத்தெனக் கொள்ள

உன் அருகாமைகள்
குறுகிய பொழுதும்
குறுகாமல் வாழும்
குன்றில் ஒளிரும்
காதல் விளக்கு.

தென்றலாக வா
உன்னை
தீண்டும் பேறு
அந்த சுடர் பெறட்டும் .

நேசம்...



வரம்பு மீறிய
உன் மீதான நேசம்
வரவழைக்கிறது
விழிகளில் மழை ...

வாழ்ந்த காதல்
வாழ்க்கைக்கும்
வாழுகின்ற
சோக வாழ்க்கைக்கும்
வாழப் போகும்
ஏக்க வாழ்க்கைக்கும்
இன்றைய கண்ணீர்
போதுமானதாக இருக்கட்டும் ...

உதாசீனங்களால்
உடைக்கப்டும் உள்ளம்
என்றும்
உயிர் வாழ விரும்புவதில்லை

உனக்கான பார்வை
உனக்கான நேசம்
உனக்கான வார்த்தை
உனக்கான முத்தம்
உனக்கான அணைப்பு
..........
உனக்கான எல்லாமே
இன்னும் உனக்காக ...
ஆனால் நீ இல்லை
எனக்காக ...

களையாத மோகம் ..




போர்வை களைந்த பின்னும்
களையாத மோகம்
கனிந்து வழிந்து
மொழிகிறது
உன் மீதான
என் ஆசைகளை ..

உறக்கங்கள் முயல்கிறது
உன் அதரங்கள்
என் அந்தரங்கங்களை
அளவிடுவதை ரசிக்க

அடிக்கடி கலையும்
உறக்க நிலைகள்
அதீதமாக அலைகிறது
உன் அருகாமையை
ருசிபார்க்க ...

ஒரு மழைத்துளிக்கு
ஏங்கும் பாலை நிலமென
உன் மதத் துளிக்காய்
ஏங்கும் மலர் மொட்டு

விரகங்கள் பகிரும்
உன் விசித்திர
புன்னகைக்கு தெரிவதில்லை
விடியும் வரை
விரதங்கள் விலைபேசப்படுவது ...

எண்ணங்களின் கேள்வி ..




விலகி போன உன்னிடம்
விலகமுடியாத என்
எண்ணங்களின் கேள்வி ..

நாம் ஸ்ருஷ்டித்த
நகர முடியாத தருணங்கள்
நரகமாகி போனதா ?

விலக முடியாத
விழிகளின் பார்வையில்
விரகம் வழிந்தொளிந்து
வெறுப்பு ஊற்று கண்டதா ..?

தவிர்க்க முடியாத
தருணமென்று
தானாய் தழுவிய கரங்கள்
தளர்வுற்று போனதா ?

வாழா இருடி என
வழவழக்கும்
வாய் தொட்டு
இதழ் அழைந்த
மோகம் தீர்ந்ததா ?

இடை படர்ந்த
இளையகரம்
இதழ் நீவும்
இதம் தொலைத்து
இறுமாந்த செயல் இன்று
இசைவிழந்து போனதேன் ?

இதழ் தீண்ட நீ வேண்டாம்
இதம் கொடுக்க நீ வேண்டாம்
இன்பம் தேட நீ வேண்டாம்
இந்த இம்மைக்கும் நீ வேண்டாம் ..

இதுகாறும் நீ இருந்த நெஞ்சை
என்ன செய்ய சொல்லிச் செல்
இதயம் அமைதி பெற
வழியுண்டா காண்கிறேன் ..

" உயிர் எங்கே ? உன்னில் உண்டா ?..




எண்ணிலடங்கும்
என் இதய துடிப்புகள்
எண்ணிலடங்கா
உன் நினைவுகளை
சுமந்து கடக்கிறது
கணங்களை ..

என்னில் வண்ணம் தெளித்த
வர்ணத் தூரிகையே
வரைந்து செல்
வருங்கால வழிகாட்டியை

தொலைவுகள் குறுகாத
நினைவுகளை மட்டும்
நிரந்தரமாய் பிரசவிக்கிறது
கருக்கொண்ட காதல்

கைகள் நீட்டுகிறேன்
இணைகின்ற விரல்களில்
பிரிவின் சுவடுகளை
எழுதி செல்கிறாய் நீ

தொலைந்து போன என்னுயிரை
தொடர்ந்தும் தேடுகிறேன்
அது உன்னில் உண்டா
திருப்பி கொடு
திருந்தாத ஜென்மம் அதை
உன் பிரிவெழுதி வஞ்சிக்க .

காற்றாகி .... வா .


இருள் கடந்தும் பயணிக்கிறது
உன்மீதான
என் விருப்பங்களும்
வேதனைகளும் ..

தொலைவுகளை குறுக்கிய
காதலுக்கு தெரியவில்லை
விளைவுகளை
அறுவடை செய்ய ..

விதையாகி போன
ஆசைகளின் துளிர்ப்பில்
அலர்ந்த மலரில்
அதன் சோகங்கள்
நீர்த்துளிகளென
மினுமினுத்து காய்கிறது ..

இந்த இரவுகளின் முடிவில்
எழுதப்படாத ஒரு
தொடர்கதையின் தொடர் புள்ளிகள்
முற்றுத் தேடி அலைகிறது ..

முடிவுறாத வானமதில்
கனியாத காதல்
நீர் சுமந்து அலைகிறது மேகமென
ஒரு திடீர் தென்றல் அணைப்பில்
அது தன் நீர் சொரிந்து
கலைந்து மறையலாம்
காற்றாகி .... வா .

போடி லூசு...




எண்ணங்களில்
வண்ணங்களாய்
கலந்து மிளிரும்
காதல் நிமிடங்கள்
நீண்டுகொண்டே செல்கிறது
செல்லமான
உன் உதடு சிதறும் வார்த்தைகளில் ..

எத்துனை கோபத்தையும்
என்னை துலைத்து விட செய்கிறது அது ..
செல்ல சினுக்கங்கள்
சில்மிசங்களாய் மாறும் தருணங்கள்
மிரண்டு குளறுகிறது
உன் திரண்ட இதழ் கடை
போடி லூசு..

உன் அந்தரங்கங்கள்
உரிமையோடு
என்னால் ஆராயப் படும்பொழுது
அவசரமாய்
கூடவே ஆர்வமாய் உளறுகிறாய்
போடி லூசு ..

எதிர்காலங்கள்
ஏக்கங்களாய்
ஏமாற்றங்களை தாங்கி
விம்மும் பொழுதும்
விரைந்து தழுவுகிறது உன்
போடி லூசு ..

சண்டைகளின் போது
சடுதியாய் வரும் கோபத்தில்
நீ உதிர்க்கும்
போடி லூசு என்பதில் மட்டும்
லூசாக மறுக்கிறது
என் போர்க்குணம் ..

ஒவ்வொரு அசைவிலும்
என் அனுமதியுடனே
அழகாய் லூசாக்கிவிடும் அற்புதம்
உன் இதழ்களுக்கு மட்டுமே சாத்தியம்
அது உதிர்க்கும் வார்த்தையில்
உண்மையில்
லூசாகி தவிக்கிறது நெஞ்சம் உனக்காக ...

இந்த தருணங்களிலும்
உன்னால் உதிர்க்கப் பட்டிருக்கும்
வாடி லூசு ... இல்லையில்லை
போடி லூசென ...

ஒப்பனைக் காவியம்..




சிவந்த செந்தழல் குழைந்த
கொலுசு கொஞ்சும் இசை விஞ்சும்
அணங்கு நடை பார்த்த அன்னம்
சிரசு நிலம் குடையும்
நிலம் தவழும்
நீளுடை குழைந்த
இடை மருளும் ..

கள்ளுண்ட வண்டென
கண் மருளும்
காதல் மெய் கொண்டு
விரகமுறும் பூந்தண்டு
மெல்லிய விரல் சுமந்த
கணையாழி தொலையும்
மோக பசி கூடி வாடி ..

எங்கும் மலர் சிதறும்
மன்மத பானமொன்றிம்
மது கலந்து மணம் வீசும்
இதழ் கடந்து இன்பம்
எதுவென்று
வெள்ளரிசி பற்கள் தேடும்
இனம் எதுவென்று கூடாது
இணை பிரிந்து மீளும் இதழ் விளிம்பு..

குழல் சுமந்த வெண் பூ அறியாது
என்று கழல் சுமக்கும்
அதன் காந்தள் இதழ் ..
இதழ் சுமக்கும் வர்ணம் அறியாது
எந்த மது குடைந்த
மந்தியொன்று மலர்குடைந்து
மயங்கி மீளும் என்று ..

இருந்தும்
வர்ணம் கொண்ட வாசமல்லிகள்
பின்னிரவுவரை தங்கள்
வாசங்களை நேசங்கள் ஆக்கி
வலிந்து சுமக்கின்றன... நகரும் இராப்பொழுதுகளில்
நாள் தோறும் நாடுபவர் படிக்கும்
ஒப்பனைக் காவியம் இவள் .

தீண்டப்படாத நதி ....




மெல்லியலால் இடை தழுவும்
மெல்லிய மேக நிறம் கொண்டு
வளைவுகள் கொண்டு
மேவி மேல் தடவி
உள்ளீர்ந்து உருவகமாகி
தான்தோன்றியாய்
விரப்பிப் பாய்கிறது வெள்ளம் ...

உன் மீதான காதலும்
இந்த நீரைப் போல்
உள்ளீர்ந்து விரவி
உளம் ஈர்த்து
தான்தோன்றியாய்
சல சலத்து பாய்கிறது

இந்த செம்புபுலப் பெயல் நீரன
அன்புடை நெஞ்சம் அரவணைத்து
கள்ளுடை போதை என
காண்கிற போதெல்லாம்
கண்களில் மிளிர்ந்த
காதலில் மிதந்த
காட்டுப் பூ இவள்

நெஞ்சமெனும் கரையிரண்டில்
நெகிழ்ந்து விழும் அருவி ஒன்று
கனவுகளில்
மஞ்சம் நனைத்து
மகிழ்ந்து வழிந்து
கால்க்கடை கடந்து
பயணிக்கிறது நதியென ..

எத்தனை ஜீவன்
எதிர்க் கரை தோன்றினும்
தாகம் மீறி
நீர் குடைய நோங்கினும்..
உன்னால் அருந்தா
உறைபனி நதியென
வாழும் இவள்
தீண்டப்படாத நதி ....

நினைவுக் காற்று ...



இந்த இரவின்
நிஷப்த இழையை
மெல்லத் தடவிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுக் காற்று ...
பல இரவுகளை முகாரியாக மாற்றிய
இந்த நினைவுக் காற்று
இன்று மெல்லிய சுகந்தம் ஒன்றை
மெல்லத்தடவி
மோகனம் இசைக்கிறது ...

அடிக்கடி
இதழ்களை தொட்டு தடவி
மீள்கிறது விரல்கள்
உன் முத்த முக்குளிப்பில்
குத்திய
மீசை முடியின்
குறுகுறுப்பு அடங்கவில்லை இன்னும் ...

கை படும் மேனியெங்கும்
கை சுடும் தீயென
கனன்று பூக்கிறது
உன் மீதான இச்சை ...

உன் என் காதலை
காலம் முழுவதும் சுமந்துவிடுவேன் ,,
உன் மீதான
மோக மேகமது நீங்கிவிட்டால் ..

தென்றல் என
உன் தீண்டல் சுகிக்கவில்லை
ஒரு புயலென ஆக்கிரமித்துவிடு
இந்த பூமியெங்கும்
நம் காதல் பூத்திட செய்வேன் .

முதிராத ஒரு குழந்தை...



முதிராத ஒரு குழந்தை
முதிர்ந்துவிட்ட தோற்றம்
கதிரான களம் தான்
காரணமோ காரியமோ ?

அழகான வெள்ளை அம்மாவின்
பாசம் எனும் கயிற்றில்
பற்றித் தொங்கும்
பால்வடியும்
பருவம் தாண்டிய மகன் ..

ஊன் வளர்ந்து
உடல் வளர்ந்து
எது வளர்ந்தென்ன
மூளை வளராத
முதிர்ந்த குழந்தை இவன் ..

ஆட்சிக் கட்டில்
இவன் ஆடல் ஊஞ்சல்
மிக்சர் தலைவர்
விளையாட்டு கொரங்கு
அன்னை கையில்
பச்சை மண்
அவர் பிடித்தால்
பிள்ளையாரும் இவன் தான்
தொல்லைகளும் இவன்தான் ..

காந்தி பரம்பரையில்
ஒரு சாந்தியை தொடாத
சத்திய புருஷனாம்
தந்தை இழப்புக்கு
ஒரு சந்ததியை காவுகொண்ட
அகிம்ஷா புருஷர்
காந்தி வழித் தோன்றலடா

இத்தாலிக்கு இந்தியாவை
இரவோடு இரவாக
கைமாற்றும் காலம் வரும்
அன்று ..
இன்று கால் பிடிக்கும்
காங்கிரஸ் அறியும்
துரோகத்தின் வாதை .

அவனறியா உலகமிது
அம்மா சொல்தான்
மந்திரமது ..
அவனுக்கும் தெரியவில்லை
தாய்ப்பாசம்
பேய்க்கு கிடையாதென்று ..
நீயும் வெடித்து சிதறலாம்
ஆனால்
வீண்பழி சுமக்க
வீரர்தான் இல்லை ...

இந்த இரவு ..

 
 
இந்த இரவு
என்னால்
சபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது

எதற்குமே பயன்படாத
ஏதோ ஒன்றைப் போல்
யாராலும் தீண்டப் படாத
இன்னொன்றைப் போல்
முகம் சுழிக்கப் படும்
நிலையை ஒத்திருக்கிறது
நிகழ்வுகள் ..

அன்பு பாசம்
காதல் காமம்
எல்லாம் கடந்த
நிலையொன்றா என்றால்
எதற்குமே பதில் இல்லை

ஒதுக்கமா
ஒதுங்கலா
விலகலா
வீண் பிடிவாதங்களா
வீணான கற்பனைகளா
எதுவாக இருந்த பொழுதும்
இந்த இரவு
என்னால் சபிக்கப் படுகிறது ..

வர்ணம் தொலைத்த இதயம்..



சிதறிக் கிடந்த
எண்ண வர்ணங்களை
நினைவுத் தூரிகை தடவி
கிறுக்கல் சித்திரமாக
வரைந்து நிறைந்தது
இதயச்சுவர் ..

வழிந்து உறைந்திருந்த
வசந்த கால நினைவுகள்
தூசி படிந்து
துலங்காமல் துருத்தி நிற்கிறது ..

கை நிறைத்த வெண் சிப்பிகள்
கருமை படிந்து
கலைந்து கிடக்கிறது
அதில் ஊரும்
அட்டைகளின் நகர்வுகளில்
அருவெறுப்பை
உணரா நிலை சுமந்து
கவிழ்ந்த படி அவை ...

காக்கை இறகுலர்த்தி
தெறித்த நீருக்காய்
தவம் கிடந்தது சோர்ந்த
பல செண்பகப் பறவைகள்
தம் இறகிடுங்கி
இரத்தம் கசிதிருந்தன ..

மலர் இடுக்கில்
மனம் தொலைத்த வண்டுகள்
அவை மலர் வளையமான
வாழ்வு கண்டு
மணம் தொலைத்திருந்தன ..

வானக் கூரையின்
அடர் சிவப்பில்
அமிழ்ந்து விழித்த
ஆதவன் கண்களில்
நிராசைகளோடு
ஒரு நிர்மலமும்
போட்டி போட்டவண்ணம் ..

அள்ளி தெளித்த
அத்தனை வர்ணங்களையும்
வரைந்து வழிந்து கிடந்தது
வர்ணம் தொலைத்த இதயம் .

விடி வெள்ளி...

 
 
 
மினுக் மினுக்கென
மின்னும்
அமாவசை இரவின்
விண்மீன்களை
மல்லார்ந்து
மனக்கணக்கு போடும்
மூளைக்கு ஏனோ
அந்த இரவின் விடியல்கள்
விரும்பப் படாததாக இருந்தது ...

மூடுவதும் திறப்பதுமாக
நித்திரா தேவியுடன்
சண்டையிட்டு
சலித்துக் கொண்டிருந்தது
கண் இமைகள் ...

எழுதிய தேர்வுக்கான
மதிப்பெண்களை
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்
மாணவனைப் போன்றதா இந்த உணர்வு
இல்லை...
தேர்வுதான் எழுதப்படவில்லையே ..
அப்போ
அதிசுவை மிட்டாய் ஒன்றை உண்ண
அனுமதிக்காக காத்திருக்கும்
ஐந்துவயது சிறுவனை ஒத்ததா இந்நிலை ...
உலை நிலை மன நிலை
இரவின் பிடியில்
ஒருவரும் துணையிலை ..

ஒருக்களித்துப் படுத்தவன் கண்களில்
சிறு காற்றில் அசைந்த
ஒற்றைச் சுடர் தீபம்
ஓயாத அதன் போராட்டம்
இன்னும் தீராது தொடர்வது
திடம் ஒன்றை தந்தது ..

ஒரு நாளிகை வாழவே
ஒரு தீபம் போராடும் பொழுது
ஓராயிரம் நாளிகை தாண்டி வாழ
ஒருநாளாவது போராட வேண்டாமோ ...

மல்லார்ந்த கண்களில்
மீண்டும் விண்மீன்கள் படையெடுப்பு
அதில் விடி வெள்ளி ஒன்று
புதிதாய் முளைத்திருந்தது ..
விடியலை நோக்கி ...

மகரந்தங்கள்...





உன்னால்
புரிந்து கொள்ள முடியாத
என் பக்கங்கள்
புரட்டப் படும் பொழுதெல்லாம்
அதன் எழுத்துக்கள்
விசும்பித் தணிகிறது
விளங்கிட எத்தணிக்காத
அவசர அலட்சியங்களை உணர்ந்தா
இல்லை
விளங்கியும் வீம்பு கொள்ளும்
வெறுப்பினை சுமந்தா ...

பனி உறையும்
இந்த இராக் காலத்தின்
உறை நிலையை தாண்டிப்
பயணிக்கிறது
உன் உதாசீனங்கள்
உதடுறையும் குளிர் நகர்ந்து
உளம் உறைத்து
உள் உறையும் .

கடல் கடந்த - என்
சுவாசக் காற்றும்
உன் கனல் திறந்த
உஷ்ணம் தாளாது
நிழல் வேண்டி
மீண்டு வந்து சேர்ந்தது
திரை விலகும் நிகழ்வின் தாக்கம்
நுரை கடல் தாண்டி
நுண்ணுயிர் பிரிக்கும் ...

வசந்தகால சோலையொன்றில்
வாசம் தொலைத்த பூவொன்றில்
மலர்ந்து மடிந்தது
அதன் மகரந்தங்கள் .

அலர்ந்த மலர்..




அந்த வனாந்தரத்தின்
எழில் கொழித்த
சோலை ஒன்றின்
மெல் மாலைப் பொழுதின்
ரம்மியங்களை
இழுத்து ஆடையென
சூடியிருந்த
கொன்றை மர நிழல்கூடில்
அன்றிலாய் இணைந்திருந்த
கரம் நான்கும்
காதல் மிகுந்து
களிப்புக் கண்டிருந்த
அந்தகார பொன்மாலையொன்று,,,

மஞ்சள் பூசிய
மான் விழியால்
மன்னவன் வரவு நோக்கி
தன் எழில் குழல் கலைந்தாட
நடை பயில்வதுபோல்
மெல்லிய தென்றலுக்கு
இயைவாய் மெல்லன
தொங்கு சரம் ஆடிய பூக்களை பார்த்து
இச்சரம் மென்மையோ
என்மேல் படர்ந்திருக்கும்
இச்சரம் மென்மையோ
இவள் மேனிதான் கொன்றையொ
இவள் மேல் நீ தான் கொன்றையோ
என மனம் இச்சகம் புரிய
எக்கணமும் மீளாது
அக்கணமே அவன்
ஆய்வுகள் தொடர்ந்தது ..

ஓர் மெல்லிய சர்ப்பமென
மேனியெங்கும் ஊர்ந்த
அவன் திண்ணிய கரம் பிடித்து
போதும் என சலித்து
போதாமல் மனம் கெலித்து
மது உண்ட மலர் என
மயங்கி சரியும்
மெல்லாடை பாரம் தாங்காது
இடை துவள சரியும்
இடது கரம் அதை ஏந்தும் ...
மீறும் மதுக்கரம் தனை பிடித்து
வலக்கரம் ஏதோ கூறும்..

மெல் முகில் களைந்த
நிலவென
மோகம் குழைத்த
முக எழில் நோக்கும்
அவன் கவி மலர்க் கண்கள்
கவிகொள்ள கருத்தேடும்..
கழல் கண்ட கொலுசு
ஒற்றை தொடைகாணும்
அவன் கனிவாயும்
மலர்த்தோளில் ல் மது தேடும் ..

கருக்கொண்ட முகிலென
குழல் அவிழ்ந்தாடும்
அதில் சரம் கொண்ட மழையென
அவனவள் இதழ் தூறும் ..
சொர்க்கத்தின் தாள் திறக்கும்
சுகபோக தருணத்தில்
தேவி என்றான் ..
அத்தனையும் திகட்டிவிட
அலர்ந்த மலர் கூம்பி நின்றாள்
அவள் தேவி அல்ல ..

உயிரே உறவாடு..




நிலவொழுகும்
நடுநிஷிகளின்
நீள் கரங்களுக்குள்
நிதமும்
சிக்கித் தவிக்கும் பொழுதுகளும் ..

நீளமான உன் கரங்களுக்குள்
நிமிட நொடிகளேனும்
அடங்கிவிட துடிக்கும்
ஆசை மனது.

அணைந்து மிளிரும்
அழகிய மின் விளக்குகளென
ஒளிரும் மின்மினிகள்
உள்ளத்தில் அழகாய்
ஒழிந்து ஒளிரும்
உன் மீதான
காதல் கணங்களுடன்
போட்டியிட்டு சலிக்கிறது ...


தளிர் மேனி படும்
குளிர் தென்றல் சுடும்
உன் அருகாமைக்காய்
உள்ளம் அலைபாயும்

தணியாத காதல்
தளிர் கொண்ட மோகம்
பிரியாத ஆசை
பிறழாத நேசம்
நெஞ்சில்
கருவான உன்னை
கணம்தோறும் நோங்கும்..

வருவாய் என் உயிரே
வரம் தா உன் மனதே ..
உருகிடும் என் உயிரோடு
உயிரே உறவாடு...