Sunday, April 7, 2013

வாழ்க நீ பல்லாண்டு ...

Sad Wedding 

வெட்கத்தை விதைத்துக் கொள்ளும் பொழுதுகளும்
சத்தத்தை அடக்கி சயனித்து பயணிக்கின்றது
எட்டத்தே ஒரு கோட்டான்
எக்கி எக்கி குரல் எழுப்பி
அச்சத்தை இதய சந்துகளில் அலைய வைத்தது

பட்டென்று எங்கோ எதோ
படர்ந்துவிட்ட காற்றின் எதிர்ப்பில்
பயணித்து அலைந்த
முடிகளின் முனையில்
முடியாமை மண்டி இடுகின்றது ...

மரணப் பாதையிலும்
மனதோடு இணைந்து
மகிழ்வில் பயனிப்பாய் என்றிருந்தேன்
மனதோர சுவர்களில்
நிழல்களை பதித்த நீ
நிஜங்களை வேறு ஒருத்திக்கு
மானியம் ஆக்கியதேன் ...?

விசிறியாய் மடியும் இமைகளிலும்
சடுதியாய் வந்தமரும் உன் நினைவுச் சுமைகள்
கடு கதியில் கண்ணீராய் ஊற்றெடுக்கிறது
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற  வரிவடிவம் புலப்படுகிறது ...

இரவின் தனிமைகளை வெறுமைகள் ஆக்கியபடியே
உன் நினைவுகளின் நகர்வுகள் தொடர்கிறது ..
கனவுகளின் சுமைகளில்
அடிக்கடி நீ கருத் தரித்து குறைப் பிரசவமாகிறாய் ..
ஒரு பாலைவனத்தின் வறண்ட பிளவுகளாய்
வறண்டு தகிக்கும் இதய நாக்குகள்
வடிகிண்ற கண்ணீர் துளிகளை நக்கி நனைகின்றது ...

விடியாத இருளும் முடியாத துன்பமும்
மிரட்டியபடி விரட்டும் கோர இரவின் பிடியில்
கனவுகள் குலைந்த குயிலாய் கூவுகின்றேன் அகாலத்தில் ...
வாழ்க நீ பல்லாண்டு ...

No comments:

Post a Comment