Monday, October 12, 2020

 



அஞ்சனம் பூசும்

அணங்கிவள்

அழகில்

அகல் விளக்கொளி

அலைந்தாடும்...


மஞ்சனம் தூங்கும் 

இவள்

இடை கொண்ட அளவில்

இவள்

மாதனம் தாங்க

ஏங்கும்


குழல் என்று

நீவின்

இவள் கூந்தல்

கொள்ளும் நறுமணம்

உனையீர்க்கும்


குந்தவையோ

குலம் காக்க

வந்தனையோ எனில்

அனல் மின்னும்

கண் வழியில்

வேல் கம்பெறியும்

ராணி மங்கம்மாவோ ..


காற்றிடையே

அசையும்

உன் குழல் இடுக்கில்

மாண்டு விட துடிக்கும்

மன்னவர் பலர்  உண்டு

எனினும்

மாதவி உன் பலத்தில்

மாண்டு விட துடித்தவர்தான்   

கோடியுண்டு...


வாள் விசையும்

விழி விசையும்

வானவில்லை கிழித்து நிற்க

காலனவன்

உன்னை கண்டு

கடுகளவு தயங்கி நிற்பான்  ..


நீ

போர்   முனையில்

புறப்படட புறா அல்ல

வாள் நுனியில்

வந்துதித்த

வல்லூறு அன்றோ ...


கால் நுனியில்

கயவர்தம்

கல் உயிர்கள் மடிந்துருக

வான் அளவி

வளர்ந்து கிடக்கும்

உன் புகழ் ..


சீழ் படிந்த இதயமதை

சீராக்க முடியவில்லை

வாள் பிடித்த உன் கரத்தில்

வந்து உயிர் போக்கி விடு ..


கானகத்தில் ஓர்

கடுகளவு தண்ணியென

உன்மேல் 

காதல் வயப்பட்டு

கொடும் களத்தில்

புலம்புகிறேன்


வேல் தன்னை

வீசி விடு

உன் விசனத்தில்

வீணாக போய்விடு முன்


உன்மத்தம் கொண்ட என்னை

உன் சொந்தம் ஆக்கிவிடு

உன் விழி முனையில்

வீழ்ந்து முடிக்கிறேன்

என் வித்தார கண்ணகியே ...

No comments:

Post a Comment