Tuesday, May 12, 2020

உறுதி

உடைந்துவிடக் கூடாது

என்பதில்
உறுதியாக இருக்கிறது மனது..

யாசகம்
அத்துனை இலகுவானதல்ல,
ப்ரியங்களை
பிச்சை கேட்டுவாழ்வதில்
பிரியமற்றவளாகவே இருக்கிறேன்..

யாருமற்ற இரவுகள்
பலஹீனமானவை..
அவை தேசம் கடந்து
பயணிக்க வல்லவை...

யாரோடு பேசவும்
ஆர்வமிருப்பதில்லை
யாருக்காகவும்
எதுவுமிருப்பதில்லை..

உன் கடைசி வார்த்தைகளை
எனதாக்கி
தினம் இரவுகளை நகர்த்துகிறேன்..

எனக்காக உன் இதயம்
துடிக்கின்ற வேளையில்
என் இதயம்
காடு நோக்கி
பயணப்பட்டிருக்கும்.

தவமிருப்பு .......

மழைக்கால நினைவுகளில்

சிலிர்க்கும்
நனைந்த பூவென
ஒரு சூடான தென்றலுக்கான
தவமிருப்பு .......

உலர்ந்த
உன் மீசை முடியின்
நகர்வுகளால்
முறுக்கேறும்
முனைகளுக்குள்
உன் முத்த ஒற்றுதலுக்கான
முனைவுப் போராட்டம் ...

புன்னகை புதைந்த
உன் மோகப் பார்வைக்குள்
முடிகள்
தீப் பற்றிக் கொல்கிறது ..

உதடு தொடா
உன் உரசல்களில்
உன்மத்தம் கொண்ட மனது
உளறிச் சாய்கிறது
மார்போடு ...

கண் திறக்கும் முன்
என் கன்னிமையை புசித்துவிடு
என் பசி தீரட்டும்
காதல்
இளைப்பாறட்டும் ...

ஈர நினைவு ....

இந்த நாளின்

இறுதி மணித்துளிகள்
ஈரம் கலந்தே பயணிக்கிறது
உனக்காக ஒதுக்கப் பட்ட
ஒரு ஜென்ம வாழ்க்கையில்
ஒரு நிமிடம் கூட
ஒதுக்கமுடியாத
இந்த நாளின் முடிவுகள்
இறந்தும் சுவாசிக்கிறது
நினைவுகளால் ...

ஒரு மெல்லிய
பனிக்காற்றின் வருடல்களுடன்
வண்ணமயமாக்க முனைந்தாலும்
வர்ணம் இழந்த
வரட்சி வரிகளை சுமந்தே
பயணிக்கிறது ஒரு தென்றல் ..

ஒரு முத்த ஒற்றுதல் இல்லை
முடிகோதும் விரல் இல்லை
முகம் நோக்கும் விழியுமில்லை
ஒரு சூனியத்தின்
விளிம்பை நோக்கிய
பயணமாக இருக்கிறது
எத்தனிப்புகள் ....

உன் எண்ணங்களை
வண்ணங்களை
இதயம் மட்டுமல்ல
இமைகளும் சுமக்கிறது
ஈர நினைவுகளாய் ....

இரவு...

யாருமற்று இருக்கிறது

இரவு...
இறக்கப்படாத
சிலுவைகளின் பாரம்
இன்னும்...
கனதி கூடுகின்றது...

விளங்கிகொள்ளவும்
விலக்கிக் கொல்லவும்
யாருமற்றவளாய்..

தேவை என்னவோ
தலை சாய ஓர் தோள்..
ஏனோ
தகுதியற்றவளாகவே இன்னும்

நானும் உன் நினைவுகளும்...

இந்த

மழைக்கால இரவின்
நீண்ட தார்ச்சாலை சுமக்கும்
விடிவிளக்கின்
அசைவுகளென
நானும்
உன் நினைவுகளும்...

எங்கிருந்தாய்
எப்படி
எனனுள் வந்தாய்
எப்படி விலகினாய்...

விடைதெரியாததாகவே
இன்னும்....

அதீத வெல்லமென
அதீத அன்பும்
தெவிட்டிவிட
கூடுமாம்..

பிரிவின் வலிகள்
நிரந்தரமற்றவை ஆகலாம்
உன்னைப்போல் எனக்கும்
உறவென்று ஆகிவிட்டால்
ஆனால் ...

அவ்வளவு எளிதல்ல
உன்னிடத்தை
மேவுவது..

மெல்லிய காற்றில்
அசையும் விளக்குகளென
உன் நினைவுகளில்
அலைகிறது மனது
இங்குமட்டும்....

மீண்டும் நிலா நீ நான் நினைவுகளோடு..

இந்த
இராத்திரிகள்
நீளமானவை
நீ நான் நிலா நினைவுகள் என...

நீண்ட இடைவெளிகளுக்குப் பின்
முகில் விலக்கி
மினுமினுக்கும் நிலவில்
உன் நினைவுகளை
படரவிட்டிருக்கிறேன்..

தொலைவுகள்
தொலைந்து கிடக்கின்றன..
நினைவுகளோ
நெருங்கி வதைக்கின்றன..

எங்கிருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
என் நினைவுகள்
அப்படியே இருக்கிறதா..
எண்ணற்ற
விடைகள் வேண்டா கேள்விகளிவை..

யார்மீதும்
ப்ரியப்படாமலே
பிறள்ந்து கடக்கிறது காலம்
எங்கோ
எதற்காகவோ
உயிர் தடவி
துடிக்குமிதயம்
இன்னும்
சிறிதுநேரத்தில்
அமைதிபெறும்...

மீண்டும்
நிலா நீ நான் நினைவுகளோடு...

பெண்மை ..

துகில் கலைந்த

நிலவொன்றின்
வெம்மையோடு
புரண்டு கொண்டிருக்கும்
மோக நிலாவென
கவி சொல்கிறாய் ..

ஓர் உந்துதலில்
உன் இதழ்களை
இதழ் அடைந்த கணத்தில்
இம்சை எனதானது ..
வலிய உன் மீசை முடிகள்
மெல்லிதழ் உராய்ந்த கணங்களில்
நீண்டு வழிகிறது மோகம் ..

மெல் ஆடை துளையும்
உன் கரங்களுக்குள்
சிக்கித் தவிக்கும்
பெண்மையின்
ஆழ்ந்த சுவாசங்களில்
ஆண்மையின் தேவை
அதிகரித்திருந்தது ..

ஓர் அணை உடைக்கும்
ஆர்ப்பரிப்புகாய்
ஒவொரு கணமும்
காத்திருக்கிறது
அதன் ரகசியங்கள்
துறந்த பெண்மை ..