Monday, May 13, 2013

முதல் கரு

 

அவள் கருவுற்றிருந்தாள்
கல்யாணமாகி கால் மாதத்தில்
அவள் கருக்கொண்டு விட்டாளாம் .
கணவன் முகத்தில் சாதித்துவிட்ட பெருமை
அவள் முகத்தில் எதோ ஒரு நின்மதி .

முதல் கரு
அவள் முகமெல்லாம் பூரிக்க வேண்டுமே
ஒரு பூவின் கட்டவிழ்தல் போன்ற புன்னகை மட்டுமே ,
ஒரு மலரின் மலர்ச்சியை மறந்தும் காணவில்லை .

முகமறியா கணவன் தொடுகையில்
அவள் முழுவதும் மலராத பொழுது
சூல் கொண்ட கரு
சுகத்தை அளிக்குமா ...?
அடுத்த பத்து மாதத்தில்
ஆண் வாரிசு வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி
அறியாமலே அச்சுறுத்தும்
அத்தையம்மாள் பேரில்
அரண்டு உருவான கரு
ஆத்மார்த்தமாய் இருக்குமா ?

பெண்மையின் முழுமையையும்
ஆண்மையின் முழுமையும்
ஆதாரப்படுத்த அகல் கொண்ட கரு தீபம்
அகத்தில் ஒளி வீசுமா ?

அவனையும் புரியவில்லை
அவர்களையும் புரியவில்லை
அதற்குள் அவள் கொண்ட சூல்
ஆறுதலை கொடுக்குமா ?
இயற்கையின் தேடுதலில்
இணைந்துவிட்ட இருடலின்
கலவி கடலில் தவறி விழுந்த துளி ஒன்று
முத்தான அதிசயம்
ஆவலைத்தான் தூண்டுமா ?

முதல் கரு ஒன்று
அதை சுமப்பவளை சுமை தாங்கியாகும்
ஆண் பிள்ளை பெறவேண்டும்
அது அவன் , அவர்களைபோல் வேண்டும்
தன் பிள்ளை என்று சொல்ல
தக தகவென மின்னவேண்டும் ..
கூன் குருடு செவிடு நீங்கி
குறையற்று பெறவேண்டும்
குலப்பெருமை காக்க
குறுகிய காலத்தில் குட்டிதனை ஈண வேண்டும் .

அவள் ஆசையாய் கருக் கொள்வதில்லை
அவசியத்தில் கருக் கொள்கிறாள்
ஆண்மையின் பரீட்சார்த்தமும்
பரம்பரையின் பீற்றல்களும்
அவளை அவசியத்துக்கு சூல் கொள்ள வைக்கிறது .
இருந்தும் அவள்
அடுத்த நிமிசத்தில் இருந்தே அன்னையாகிறாள் .

No comments:

Post a Comment