Sunday, November 11, 2012

காதலன்

~girl in the dark~ 


 அந்தி வானத்தின்
ஒளிப் பிழம்பை எல்லாம்
அருவமாய் அமர்ந்து
இருள் உறிஞ்சும்
மாலைக்கு அடுத்த பொழுது ..
மன வீட்டுக்குள்
பல மகரந்தங்கள் கருக்கொள்ளும்
மந்தகார பொழுது
மயக்கங்களையும்
கிறக்கங்களையும்
அள்ளி தெளிக்கும்
மருள் பொழுது ....

அடுத்தடுத்து வரும்
மெகா சீரியலில்
மனங்கள் எல்லாம்
மௌனித்து மயங்கி நிற்க
இவள் மனது மட்டும்
அந்த இனிய பொழுதுக்காய்
ஏக்கத்துடன் காத்திருந்தது ...

நிமிடத்துக்கு ஒரு தடவை
இல்லை வினாடிகளுக்குள் பலதடவை
பாய்ந்து மீண்டது கண்கள்
படிகட்டுகளில் பரிதவிப்போடு
மணி எட்டடித்து ஓய்ந்தது
எதோ ஓர் சலசலப்பு
உட்கார்ந்திருந்தவள் மனதில்
உலைகளத்தின் தகிதகிப்பு

தன்னை மறந்து
தட தடத்து துடிதுடித்த
மனதை கைபிடித்து அடக்கியவண்ணம்
விரைந்து வந்தாள்..
மொட்டை மாடியும்
அவள் கண்ணுக்கு
மொட்டையாய் தெரிந்தது சிலகணம்
வந்த வேகத்தின் நிலை தாளாமல்
எம்பி தணிந்த மார்பும்
ஏக்கம் கலந்த கண்களும்
இங்கும் அங்கும்
தேடி சலித்து .....

சட்டென மூர்க்கம்
அவள் தாவணி தீண்டியது
மூர்க்கமாய்
பெண்மையின் முகவரிகள் தேடியது ...
ஏக்கமாய் சில இடதில்
தேக்கங்கள் புரிந்தது ...
முழுமைகள் காத்த
முந்தானை ..
முணுமுணுத்து சரிந்தது ..
பெண்மைக்கான கூச்சம் தாக்க
"ச்சே விடு  சுத்த மோசம் "
இயல்பாய்  வந்துவிட
கண நேர அமைதி ..
கோபம் வந்துவிட்டதோ ...
திரும்பியவள் கண்களில்
எதுமே தென்படவில்லை..

ஏக்கங்கள் குடிபுகுந்து
ஏந்திலையை வாட்ட
இதய துடிப்பு
எகுறி குதித்து எழுப்பிய ஓசையில்
ஏதுமறியாது ஏங்கி  தவித்தது மனது

மென்மைகளை திரட்டி
கன்னங்களை  தீண்டிய கரம் ஒன்று
கழுத்து வழி இறங்கி
காதல் குன்றுகள் நோக்கி பயணம் தொடர..
இதை எட்டி நின்று பார்த்து ரசித்த
மதியும் மதி கெட்டு மனம் தளும்பி
முகில் கொண்டு முகம் மூடி
அவன் மோகம் தணிக்க
முழுவதுமாய்  முயன்று மறைந்தான் ..
நாணம் கெட்ட நங்கையின்
நிலை கண்டு
ஓரமாய் ஓங்கி நின்ற
சவுக்கு மரத்தின் இலைகளும்
சல சலத்து சிரித்து
இருள் இழுத்து மறைத்து கொண்டது ...

இதை பார்த்த இவள்மனதும்
கள்ளுண்ட மலராகி
கவிந்து குவிகையில்
எங்கோ ஒரு குரல்
எட்டி ஒலிக்க...
தனிலை கண்டவள்
தடுமாறி தாவணி சரி செய்து
தடம் மாறி இடம் மாறி
தத்தளித்து நிமிர்கையில்
இன்னும் அவன் கரத்தில்
இயல்பாய் சிக்கிகொண்ட
தாவணி வர மறுத்தது ..

நாளை வருகிறேன்
நயமான உச்சரிப்போடு
உவப்பற்ற உவகை அற்ற
உள்ளத்தோடு  எட்டி நடந்தாள்
ஏக்கத்தை சுமந்தபடி ..

நாளை வருவானா..
சந்தேகந்தின் சாயல்
சடுதியாய் சலனங்களை உரசிய பொது
உள்ளே ஓர் குரல்
ஓங்கி ஒலித்தது ..
அடி போடி
ஓடி போக அவன் என்ன
மானுட  காதலனா ...?
தென்றல் காதலன்
தினமும் வருவான்
உன் இன்பம் திகட்டும் வரை ...

No comments:

Post a Comment