Sunday, September 7, 2014

மழையில் மரண ஓலம்..




நீண்ட தார்ச்சாலை சுமக்கும்
இன்னோரன்ன பயணங்கள்
இருமருங்கும் ஏதுமில்லை
இலுப்பையில்லை
ஆலில்லை அரசில்லை
கொன்றை கொண்ட
கூந்தல் பூக்களில்லை..

நீண்டு வளைகிறது பாதை
மனித மனங்களை போன்று ..

வானுயர்ந்த கட்டடங்கள்
வர்ண ஜால அட்டைப்படங்கள்
கோலம் மாற்றி
கொண்(று )டிருந்தது அழகை ..
விளம்பரப் பலகையில்
விலை பேசப்பட்டுக் கொண்டிருந்தது
தமிழர் வளங்கள் ...

கோயில் எங்கினும்
குமரிகள் காணவில்லை
குமாரர்கள் யாருமில்லை
கிழவிகள் எல்லாம்
விழி நீர் மல்க
விழித்திருந்தனர்
சின்னத்திரை தொடர்களில் ..

உழைப்பவரை தேடி
உளம் உளைந்த வேளையில்
களைப்படைந்த யாரையும்
கண்ணெட்டும் காணோம் ..

ஒரு பாடு திரும்பினேன்
உளம் படும் பாடு யாரும் அறிந்திலர்
உயிர் நீத்த பூக்களின்
உறக்கத்தை குலைத்து
உருபெற்று வளர்ந்திருந்தது
இனம் தின்ற அரக்கர் கோட்டை..

மறவர் என்பதை
யாரும் மறந்தும் நினைதிலர்
மாறனும் இவர் என்று
மனம் நொந்து நினைக்கிறேன்

புதுமைகளின் மடியில்
புதிதாக உறங்கும்
அழகிய குழந்தைகள் ..
அறிவதில்லை
அடுத்த பொழுதுகளின்
அரங்கேற்றங்களை ..

கனன்று கொண்டிருக்கும்
நீறு பூத்த நெருப்புகள்
என்று செந்தணலாய் மாறுமையா .. ?

கார் முகில் சூழ்ந்த
கனத்த மழையன்ன புதுமைகளில்
அழிந்திடும்
பண்பாட்டு சிதைவுகளின்
விடுதலை வேட்கையின்
மரண ஓலங்கள்
யாருக்கும் கேட்கவே இல்லை ...

No comments:

Post a Comment