Saturday, December 28, 2013

அழுக்கான அழகிய தேவதைகள்...




வறுமைகள் பிரசவித்த
அழகிய பதுமைகள்
சாம்பல் படிந்த
கரிய வைரங்கள்
வந்ததின் காரணம் தெரியாமல்
வாழ்வதின் கட்டாயம் புரியாமல்
வாழப்போவதின் நோக்கம் தெரியாமல் ...

அழகிய பூக்கள் என்றும்
மலர் மொக்குகளில் மட்டும்
மலர்வது இல்லையோ
மண்ணிலும் புழுதியிலும்
புரண்டு
புழுதி துளைந்து
மலர்கிறது இங்கு ...

இறைவனின் இருதயமற்ற
சிருஷ்டியில் பிறந்த
அழுக்கான அழகிய தேவதைகள்
பிரம்மன் உதறிய
தூரிகைத் திவலையில்
கருக் கொண்ட
காயமிதுவோ ...?

ஒருவேளை பசி நீங்க
முந்தானை இலை விரித்து
பெண்மை படைத்த
மோக விருந்தில்
துப்பிய எச்சில் துளியா ... ?

அன்றில்
அமாவாசை இரவுகளில்
வானக் கூரையை
வீடாக கொண்டு
தன்னை முழுமையாய் கொடுத்த
ஏழை தாய் சுமந்த
புகை படிந்த பவுர்ணமியோ ?

இல்லை
உற்றாரும் சுற்றாரும்
உதறி விட்ட
எதிர் கால சூரியனோ ...?

சிலவேளை
காலமெனும் அரக்கனின்
காவலர்கள் பிடியில் சிக்கி
ஆதரவற்ற நிலையில் நிற்கும்
அப்துல் கலாமின்
கனவுக் குழந்தையோ ... ?

உணவாக்கும் இருகையில்
ஒரு கை உனக்காக நீளாதோ ?
உடன் பார்க்கும் பல
மனிதர்களில்
மனிதம் ஒருவரிடமாவது வாழாதோ ?

குழந்தாய்
பிச்சை புகாதே
உன் கச்சை தளரினும் ....
எச்சை என உன்னை
கொச்சைப் படுத்தியவர்க்கெல்லாம்
வைரத்தின் வாழ்வு தனை
வாழ்ந்து காட்டி விடு ..

குழந்தையும் இறைவனும் ஒன்றாம்
அதனால்தான்
இரண்டுமே இன்று தெருவில்
எனினும்
அருமை தெரியாதவர்களால்
இவர்கள் பெருமை
என்றுமே இழப்பதில்லை ..
கூட்டுப் புழுவான வாழ்க்கை களைந்து
வண்ணத்துப் பூச்சியென
வட்டமிடும் உங்கள்
சுய வெளிப்பாட்டுக்காய்
காத்திருப்பது
கதிரவன் மட்டுமல்ல
காலமும் தான் ...

No comments:

Post a Comment