Saturday, December 28, 2013

விருட்சங்களே ...



இனம் காக்க
விதையான விருட்சங்களே
வீழ்தலில் எழுதல்
வீர மறவர்க்கே சாத்தியம்
வீழ்ந்தாலும் விதையாவது
உங்களுக்கே சாத்தியம் ...

வானளாவும் உங்கள் தியாகம்
வாழ்வு கொடுத்த
உங்கள் ஈகம் ...
உங்கள் உறுதியும் பாசமும்
உள்ளவர்க்கும் இருந்திருந்தால்
உருவாகி இருக்குமாடா தமிழ் ஈழம் ...

உனக்கென்றுதாயுண்டு
உறவாட சொந்தமுண்டு
உளம் பகிர நட்புமுண்டு
இருந்தும்
உருவாகும் தமிழ் ஈழம்
உன் கைபட்டு கருக்கொள்ள
களம் புகுந்து விதை ஆனாய் ..

கார்த்திகை பூக்களே
என்றும் நெஞ்சினில் நீங்களே ..
மயானம் சிதைத்த
மடையர்களுக்கு தெரியவில்லை
நீங்கள் விதையானது அங்கல்ல
விருட்சம் என மனதுள் என்று ...

கரிய புலிகள் என
கடல் கொண்ட வேங்கை என
கயவர் களமாடி
காவியமான
கர்ம வீரர்களே ..
கானல் ஆகுமோ உம் ஈகம்
கடந்து போகுமோ உம் கனவு ..

சாவுக்கு மனுப்போடும்
சரித்திர புருஷர்களே
உங்கள் ஆவி பிரிந்திடினும்
ஆரத் தழுவிய உங்கள்
தாய் மண்ணின் பாசம்
தலை முறைக்கும் சுமக்கும்
உங்கள் தியாகங்களை ..

உங்கள் ஆத்மா உறங்கிவிட கூடாது
உங்கள் கூக்குரல் ஓய்ந்துவிட கூடாது
உங்கள் வேகம் தீர்ந்துவிட கூடாது
உங்கள் தியாகம் முடிந்துவிட கூடாது
விதியான வீரா விளைந்து வா
வீணே காலம் கடக்குது பார் ..
நெஞ்சில் நிலையாகி போன எம்முறவே
உம நினைவை நித்தமும் சுமப்பர் ஈழவரே ...

நினைந்துருகும் இன்றைய நாள்
உன் கனவுகளை சுமந்தவண்ணம்
கார் இருளை கிழித்து
விடியலை பிரசவிக்காதோ ..
உங்கள் கனவுகளை சுமந்து
கடல் கடந்து கண்ணீர் சிந்தும்
இவள் ...

No comments:

Post a Comment